Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

Sunday, May 11, 2014

சின்ன சின்ன தூறல் என்ன???





எனக்கும் தண்ணீருக்கும் கொஞ்சமும் ஆவதில்லை!!!!!

என்ன உளருகிறேன் என்று பார்க்கிறீர்களா?? ஹா ஹா நிறைய நாட்களின் பின் கொஞ்சமாய் ஒரு ஓய்வு கிடைத்தது. வெளியே மழை பெய்து கொண்டிருந்தது வெளியே எங்கும் போகவும் முடியாது, இசைமழையில் கொஞ்சம் நனையலாம் என்று போனால் சின்ன சின்ன தூறல் என்ன பாடல் என்னை இழுத்து உள்வாங்கிக்கொண்டது! மழை நாள் வேறா? அந்த அழகான வரிகளும் இசையும் அப்படியொரு இனிமையான உணர்வைத்தந்தது!

சின்ன சின்ன தூறல் என்ன
என்னைக் கொஞ்சும் சாரல் என்ன
சிந்தச் சிந்த ஆவல் பின்ன,
நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன...

உனது தூறலும் இனிய சாரலும்
தீண்டும் மேகம் சிலிர்க்குதம்மா...

உனது தூறலும் இனிய சாரலும்
தீண்டும் தேகம் சிலிர்க்குதம்மா...
நனைந்த பொழுதினில் குளிர்ந்த மனதினில்
ஏதோ ஆசை துடிக்குதம்மா...
மனித ஜாதியின் பசியும் தாகமும்
உன்னால் என்றும் தீருமம்மா
வாரித் தந்த வள்ளல் என்று
பாரில் உன்னை சொல்வதுண்டு
இனமும் குலமும் இருக்கும் உலகில்
அனைவரும் இங்கு சரி சமமென உணர்த்திடும் மழையே...

சின்ன சின்ன...

பிழைக்கு யாவரும் தவிக்கும் நாட்களில்
நீயோ இங்கே வருவதில்லை...


மழைக்கு யாவரும் தவிக்கும் நாட்களில்
நீயோ இங்கே வருவதில்லை...
வெடித்த பூமியும் வானம் பார்க்கையில்
நீயோ கண்ணில் தெரிவதில்லை...
உனது சேதியை பொழியும் தேதியை
முன்னால் இங்கே யாரறிவார்...
நஞ்சை மன்னும் பூஞ்சை மன்னும்
நீயும் வந்தால் பொன்னாய் மின்னும்
உனது பெருமை உலகம் அறியும்
இடி என்னும் இசை முழங்கிட வரும்
மழை என்னும் மகளே...

எனக்கு மழையை பிடிக்காது!

பட் பட் சட் சட் டென சடுதியாய் தூறி தலை நனைத்து உடல் நனைத்து உன் வருகையை அறிவிக்கும் அந்தச்சில தருணங்களில் தான் நான் குடை மறந்து போயிருப்பேன்! உலர்வாய் இதமாய் நடந்து கொண்டிருக்கும் என்னில் உன் முதல் துளி பட்டு நனைந்த தலைமுடியிலிருந்து சொட்டும் திவலைகள் நெற்றியில் வழிந்து இமை தாண்டி விழி தேடி வரும் போது இதம் தொலைந்து போனதில் சின்னதாய் ஒரு எரிச்சல் வரும்! கை எழுந்து நீர் துடைக்கும். கண்கள் தலைக்குமேல் குடை தேடும்! நனைந்து விட்ட உடையது உடலோடு ஒட்டிக்கொண்டதா என்று பதற்றமாய் கண்களும் கையும் அடிக்கடி சரிபார்க்கும். நீ பெய்து ஓய்கையிலே தேங்கி விட்ட வெள்ளமதில் சிதறும் நீரினால் என் உடையெல்லாம் சேறாகும். மெத்தென்று கால்வைத்து பதமாய் நான் நடக்கையிலே சர்ரென்று நீரை வாரி இறைத்துச்செல்வான் யாராவது ஒரு வண்டிக்காரன்! வீட்டுக்கு வந்து மீண்டும் உலர்வாய் மாறுமட்டும்.... ஐயோ! மழையே என் வெறுப்புப்பட்டியில் முதல் நான்கு இடங்களில் கண்டிப்பாய் உனக்கும் ஒரு இடமிருக்கும் எப்போதும்!

ஏன் இந்த மழை இரவில் மட்டும் பெய்து விட்டு காலையில் சுவடின்றி உலரக்கூடாது??? அடிக்கடி இந்தகேள்வி என் மனதில் எழும்!
எப்போதாவது அரிதாய் நான் ஓய்வாய் வீட்டிலிருக்கும் தருணங்களில் உன்னை ரசித்திருக்கிறேன். சுற்றுச்சூழல் பிரக்ஞையின்றி நனைந்திருக்கின்றேன்! எப்போதாவது ஒரு தடவைதான்! மற்றப்படிக்கு என் உன்னை விட ஷவர் தருணங்களே எனக்கு பிடித்தமாக போதுமானதாக இருந்து விடுகிறது!

உனது பெருமை உலகம் அறியும்
இடி என்னும் இசை முழங்கிட வரும்
மழை என்னும் மகளே...

இந்த வரிகள் வரும் போது வரும் இசை என்னை என்னவோ செய்தது! யன்னலூடு மழையைபார்த்து அந்த நீரோட்டத்தை அனுபவித்து மழைச்சாரலில் நின்று காபி குடித்து...எதுவும் அந்த இசை தந்த உணர்வுக்கு ஈடாகவில்லை! என் நீண்ட நாள் ஆசையும் எப்போதும் தோல்வியில் முடிவதும் ஆன ஒன்றை இன்று நிறைவேற்றிக்கொள்வது என்று முடிவு செய்தேன்.

அதாவது தண்ணீர் துளிகள் என் தலையில் பட்டு உடலில் வழியும் போது ஒட்டு மொத்தமான நனைதல் உணர்வின்றி அடுத்தடுத்து விழும் நீரினை உடலால் உணர வேண்டும்! புவியீர்ப்பு விசை, மற்றும் நீர் மற்றும் உடலின் பௌதிக தன்மைகள் அதை எப்போதும் சாத்தியமற்றதாக்கினாலும் பூச்சியத்திலிருந்து மெது மெதுவாய் ஷவரின் வேகம் கூட்டினால் ஏதோ ஒருநிலையில் எனக்கு திருப்தியான அளவு வேகம் கிடைக்கும் என்பது என் நம்பிக்கை! அந்த இசையும் பாடலும் இன்னும் அந்த நம்பிக்கையை கூட்டின!

ஷவரை மெதுவாய் திருப்புகிறேன்!

தலையில் படும் ஒற்றைத்துளி என் உடலில் வழிவதை நான் உணர வேண்டும் என்றால் குழாயை திருகிவிட்டு நான் திரும்ப முன்னமே சட்டென்று கொட்டி அத்தனையையும் கலைத்து நிமிடத்தில் நிலம் நாடிபோகின்ற அவசரக்கார தண்ணீரை திட்டிய படி ஷவரின் வேகம் குறைத்தால் டொக் டொக் என்று ஏதோ கடமைக்காய் வந்து விழுந்து கோபமூட்டுகிறது அது! இன்னும் கொஞ்சமாய் கூட்டினேன்! ஆகா இதுதானா? கண்களை மூடிக்கொண்டேன்! இதோ நெற்றியில் மூக்கில்...ச்சே அதற்குள் காலில் போய் சேர்ந்து விட்டது! இப்படியே ஏமாற்றங்கள் தொடர கடுப்பாகி போனேன்! நான் பெண்ணென்றால் இந்த தண்ணீர் கட்டாயம் ஆணாய்த் தான் இருக்கவேண்டும்! ஆண்களும் அப்படித்தானே! பேசவே முடியாத அவஸ்தை தருணங்களில் தான் தானாய் அழைப்பது! நாமாய் அழைக்கும் தருணங்களில் படபடவென கொட்டி விட்டு துண்டிப்பது! பேசியே ஆகவேண்டும் என்று அடம் பிடித்தால் இதே டாக் டாக் தான்! ஹா ஹா அந்த எரிச்சலிலும் தத்துவாரத்தமாய் சிந்திக்கும் என் அறிவையே நான் வியக்கேன்!

சரி ஷவரும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம்! சாவகாசமாய் நீர்த்தொட்டியை நிரப்பி பின்னணி இசையெல்லாம் வைத்து விட்டு ஏறி அமர்ந்தால் அங்கே தண்ணீர் தூங்குகிறது!!!!!!! உர்ர்ர்ர்!!!!!!!!!!!! எனக்கும் இந்த தண்ணீருக்கும் ஆவதே இல்லை!!! உங்களுக்கும் இப்படி அனுபவம் உண்டா மக்களே!


Monday, April 15, 2013

ஏதேனின் ஆப்பிள் !








என்னைத்தின்றதால் ஏவாள்களை சபித்தாய்
எதைத்தின்றதால் என்னை சபித்தாய்?
உந்தனது தோட்டத்தில் நீ தானே வளர்த்தாய்!
வளர விட்டு பூத்து காய்க்கவும் விட்டு
பாவத்தின் கனியென என்னை பிரகடனம் செய்தாயே
படைத்தவனே நான் செய்த குற்றம் தானென்ன?
பாலும் தேனுமூட்டி தலை தடவி வளர்த்து விட்டு
மாற்றான் மகன் நீயென விரட்டியடிக்கும் மானுடனாய்
படைத்தவனே நீயும் மாறினாயோ?
யாருக்குமே இன்றி கனிகள் அழுகி விழ
தன்னந்தனிமையில் புழுங்கித் தவிக்கின்றேன்
ஆறாய் உன்னை தேடி வரும்
என் கண்ணீர் துளிகளெல்லாம் கேட்கும் ஒரு கேள்வி
படைத்தவனே எனை ஏன் படைத்தாய்?



Sunday, April 14, 2013

காதல் தொடரோட்டம்








விழிகள் வலியெடுக்க பார்வையால் நான் தொடர
கல்லாய் மண்ணாய்கூட எனைப்பார்க்காமல் போகின்றாய்!
இது நீ என்ற இலக்குக்கான எந்தன் தொடரோட்டம்
பாதங்கள் பொறுப்பேற்க அமுங்கிகொண்டிருக்கின்றன  
உன் தடங்களுக்குள் என் தடங்கள்!
கதவைத்தாளிட்டு உள்ளே நுழைகின்றாய்
வலுக்கட்டாய நிறுத்தத்தில் எந்தனது தொடரோட்டம்!
வெற்றிப்பார்வையோடு இந்நேரம் நீ சிரித்துக்கொண்டிருக்கலாம்
அடுத்த போட்டியாளனாய் என் எண்ணங்களை
உன்னை சூழ்ந்து கொள்ள அனுப்பியது தெரியாமலே!

Thursday, April 11, 2013

எச்சரிக்கை!






தேவதைப்பெண்ணே!
பிரம்மனின் ஒப்பிலாப்படைப்பு என்ற சலுகையுடன்
ஏழை மானுடன் என்  தூக்கத்தருணங்களினுள்
எண்ணங்களாலும் கனவுகளாலும் 
தொடர்ந்து அத்து மீறுகிறாய்!
இத்தோடு நிறுத்திக்கொள் - இல்லை
பிரம்மனின் மருமகனாகி 
சலுகைகள் மட்டுமல்ல 
உன் மீதான உரிமைகளைக்கூட 
நான் எடுத்துக்கொள்ள நேரிடும் ஜாக்கிரதை!

Tuesday, April 9, 2013

எனக்கு பிடிச்சிருந்தது!





எனக்கு இந்த வாரம் ரெண்டு மலையாளப்பாடல்கள் ரொம்பவும் பிடித்தது.நெஞ்சோடு சேர்த்து பாடலால் என்னை கொள்ளையடித்த நஸ்ரியாவின் பாடல்களை தேடிக்கொண்டிருந்த போது இந்த இரண்டு பாடல்களும் கிடைத்தன. வெள்ளை நிற உடைகளில் மென்  சோகத்தேவதையாய்  வரும் நஸ்ரியாவும் அந்த குரலும் இசையும் மனதை பிசைகின்றன. சிதாரா கிருஷ்ணகுமார் பாடிய "maad dad" திரைப்பட பாடல் இது .





அடுத்த பாடல் நீது பாடியிருக்கிறார். கிறீஸ்தவ பாடலொன்றின் சாயலை உணர்த்தி கொண்டே இருந்தாலும் என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை . காதலின் இனிய தவிப்பாக இழைந்து வழிகின்றது பாடல். கேட்டுப்பாருங்களேன் .


MI கண்ட தமிழ் சங்கம் I







எங்கள் வாழ்க்கையில் கடந்து போன அந்த அழகிய நான்கு ஆண்டுகளை மறதிப்பாசியின் பிடியில் நினைவுகள் அமிழ்ந்து போக முன் பதிவு செய்ய வேண்டும் என தோன்றியது. அதிலும் யாருக்குமே கிடைக்காத அந்த முதல் ஆறு மாதங்கள்! இந்த பதிவில் கொஞ்சமாய்  என் பார்வையில் என்னை அதிகம் பாதித்த நபர்களை சுற்றி எழுத முயன்றிருக்கிறேன்.

நான் முன்பெல்லாம் அதிகம் பேச மாட்டேன், புத்தகங்களுக்குள் (கதை, இலக்கியம்தான்) புதைந்து எனக்கென்று ஒரு உலகத்தில் புதைந்து போயிருப்பேன். A/L  ரிசல்ட் வந்ததும் எனது Z புள்ளிகளோடு இணைந்த பாடங்களை தேடுகையில் இந்த ATM என்ற பெயர் மிகவும் பிடித்துப்போனது. 6 மாதங்கள் மஹா இல்லுப்பள்ளமவில் முதல் செமஸ்டர் என்றவுடன் செம அட்வெஞ்சராஸ் ஆக கனவு கண்டு கொண்டு திரிந்தேன். கொண்டு வர வேண்டிய லிஸ்ட் வேறு கொஞ்சம் நீளமான காம்பிங் போக போவது போலவே இருந்தது. என்னோடு யார் போகப்போவது என்று ஆராய்ந்ததில் கிடைத்தவள் தான் வாசு. அப்போதெல்லாம் A9 பாதை பூட்டி இருந்ததால் நாங்கள் கப்பலில் தான் திருகோணமலை செல்ல வேண்டிஇருந்தது. ஏற்கனவே நாங்கள் சயன்ஸ் ஹோலில் ஒன்றாக படித்திருந்தாலும் எங்களுக்குள் அறிமுகம் இல்லை. எனக்காவது சின்ன கெஸ்ஸிங் இருந்தது. ஆனால் அந்த படுபாவிக்கோ என்னை யாரென்றே தெரியவில்லை. நான் கருப்பு சல்வாரில் வருவேன் நீர் என்னகலர் சல்வார் போடுவீர் என்று கேட்டு என்னை அதிரவைத்தாள்! ஒருவழியாக காதல்கோட்டை ஹீரோ ஹீரோயினே மாதிரி நாங்கள் சந்தித்து கொண்டோம். வாசுவுக்கு கூட்டுப்புழு, வண்ணாத்திப்பூச்சி என்று இரண்டு பருவம் இருந்ததும் நாங்கள் சந்தித்து கொண்டபோது அவள் தொட்டாச்சிணுங்கி கூட்டுப்புழுவாகவே இருந்தாள் என்பதும் குறிப்பிடத்தக்கது! இதற்கிடையில் கௌதமியும் எங்களுடன் சேர்ந்து கொண்டார் பார்க்கவே தெரிந்தது. கொஞ்சம் ஸ்டைல், அப்பிடியொரு ஒழுங்கமைப்பு, மிஸ் planning என்று தான் சொல்ல வேண்டும். இப்படிதான் ௦7 agros முதல் மூன்று யாழ்ப்பாண பிரதிநிதிகள் கிளம்பினோம். பிறகு தான் சுமி, விஜி, அஜா வந்து சேர்ந்து கொண்டார்கள். நுளம்பு வலை, குட்டி ரேசிங் பைக் இத்யாதிகளுடன் கிளம்பும்போது இருந்த ஒருவித பரவச நிலை அம்மா கிளம்பி போனதும் எப்படி 6 மாதங்களை இங்கே கழிக்க போகிறோமோ என்று ஒரே கிலியாகிவிட்டது


M.I பற்றி சொல்லவில்லையே. பச்சை பசேலென்று ரொம்பவும் அழகான இடம். கெக்கிராவ தான் அருகில் இருந்த சிறு நகரம் ஹாஸ்டலில் இருந்து சைக்கிளில் வந்து இன்னுமொரு பஸ் எடுத்து போகவேண்டிய தூரம். எங்கள் ஹாச்ச்டளுக்கு அருகிலேயே ஆண்கள் ஹாஸ்டல் அதையொட்டிய common room, அதற்கு சற்றுத்தொலைவில் குட்டி குவார்ட்டஸ் எங்களுடன் MI யில் தங்கியிருந்த டெமோக்களுக்காக இருந்தது. விரிவுரை மண்டபம் கிட்டத்தட்ட ஐநூறு மீட்டர் தொலைவில் இருந்தது. போகும் பாதை செப்பனிடப்படாமல் கல்லும் முல்லுமாய் ஒருவித இயற்கை அழகோடு இருந்தது. இரண்டு புறமும் மாந்தோப்புக்கள் சற்றுத்தள்ளி வயல்கள் என குடியிருப்புக்களோ மனிதர்களோ ஒருவித அமானுஷ்ய அழகாய் அதுவும் நன்றாக தான் இருந்தது.

பிரச்சினை என்னவென்றால் எங்கள் அணியில் கிட்டத்தட்ட நூற்றி என்பது மாணவர்கள் இருந்தார்கள். நாங்கள் தமிழ் சங்கம் மொத்தமே 3௦ பேர்தான். அதுவும் நான், வாசு , கௌத், வினோ தனித்தனியாக விசிரிகளிடம் மாட்டிகொண்டோம். மிச்ச அதிஷ்ட சாலிகள் மொத்தமாய் இரண்டு அறைகளை பகிர்ந்து விட்டார்கள். பழகியபின் அது பெரிதாக தோற்ற வில்லை ஏனெனில் தூங்கும் நேரம் தான் நாங்கள் நால்வரும் எங்கள் அறைகளுக்கு செல்வதே மற்ற நேரங்களில் அவர்களோடு இருந்து விடுவோமே. எங்கள் தமிழ் பெண்கள் சங்கத்தின் மற்றவர்களை நான் அறிமுகப்படுத்தவில்லையே!
முதலில் த்ரீ ரோசெஸ் பற்றி சொல்லி விடுகிறேன். இவர்கள் மூவரும் எங்கள் அணியின் கடைக்குட்டிகள். ஷிரோ ஒரு வாலில்லா கொஞ்சம் புஷ்டியான அழகான மங்கி . வினோ கொஞ்சம் அமைதி , அழகான கூந்தல் என்று கொஞ்சம் தமிழ் பொண்ணு ஸ்டையிலில் இருப்பாள். இந்த க்ரூப்பின் அமைதியான தல! மை கொஞ்சம் அழுத்தம் அவளுக்கும் நீளமான தலை முடி தான் விசேஷம்.(இந்த கூந்தலை வெட்டி ஒரு முடியலங்காரத்தை நான் பரிசோதித்து வேறு கதை). இந்த க்ரூப் செய்யாத அட்டகாசம் கிடையாது.
அடுத்து சுதா, MR கதையில் வரும் ஹீரோயினுக்கே உரிய அத்தனை அம்சங்களும் இருக்கும். பின்னாளில் எனக்கு ஒரு சகோதரியாகவே மாறினாலும் முதல் வருடம் நாங்கள் அவ்வளவு பழகி கொள்ளவில்லைஎன்று தான் சொல்ல வேண்டும். லக்க்ஷியை பற்றி சொல்ல வேண்டுமானால் இவரது பேச்சு தான் ரொம்ப ஸ்பெஷல்!

நிஷா, தட்சு தலைநகர் கொழும்பிலிருந்து வந்தவர்கள். வரும் போதே அழகாக விசிறி பேசுவார்கள். நாங்கள் லக்ஷ்மி மேனன் ரேஞ்சுக்கு திரியும் போது ஜெனிபர் லோபஸ் போல திரிவார்கள்! படிப்பில் சுட்டிகள்!

விஜி சிலநேரம் குழந்தை, சில நேரம் பொறுப்பான குடும்பத்தலைவி, ஆனால் கலகலப்புக்கு குறைவில்லை.அஜா குடும்பக்குத்துவிளக்கு என்றே செல்லமாக அழைக்கப்படுவார், ரொம்பவும் அமைதி. சியாமா, நாங்கள் கடுப்பாக இருக்கும்போதோ போர் அடிக்கும்போதோ அடிக்கடி முயற்சிக்கும் தனித்துவமான பேச்சு நடை இவருக்கேயுரியது முக்கியமாக கஜன்! பிறகு ருஸ்நி , பெஹம். ருஸ்னி நல்ல கலகலப்பு அதுவும் அவளுடைய கண்ணுக்கு நான் ரசிகை. அனால் பெஹம் அடக்கியே வாசிப்பார்.
ஜீன் ரொம்பவும் முக்கியமான ஆள். எங்கட அணியின் சந்தானம் இவள்தான். கவுன்ட்டர் அடிப்பதிலும் மிமிக்க்ரி செய்வதிலும் அடித்துக்கொள்ள ஆளே கிடையாது. சாதுவாக இருந்த எனது பேச்சு முறை எல்லாமே இவளது பாதிப்பு தான் . அந்த வகையில் என் குரு! பீட்டர் குயின் என்று பட்டமே குடுக்கலாம். இங்கிலிஷ்ல கடலை கச்சான், பயறு எல்லாத்தையும் சேர்த்து போடுவாள். எங்களுக்குள் ரசனைகள் நிறைய ஒத்து போகும். என்னுடைய தோஸ்த்! நண்பிடா!!!!!!!!!!! 
கடைசியா சுமி, என்னால பாதிக்கப்பட்ட அப்பாவி ஜீவன். வாயாலேயே நிறையை வம்புகளை பின்னாலேயே கூட்டிக்கொண்டு வருவாள். கலகலப்புக்கு குறைவில்லை. எங்கள் இருவருக்கும் ரசனைகளில் அப்பிடியொரு முரண்பாடு. பாதிநேரம் சண்டை பிடித்து பேசிக்கொள்ள மாட்டோம் ஒரு அறையில் இருந்தாலும்! ஆனாலும் ஒன்றாகவே தான் இருந்தோம் இறுதிவரை. அனால் ஏனென்றே தெரியாது எனக்கு அவளை அவ்வளவு பிடிக்கும். நட்பை தாண்டிய பாசம் என்று தன சொல்லவேண்டும்.. ஷி இஸ் ச்சோ ஸ்வீட்!!!!!!!!!!!
ஆண்கள் அணிஎன்றால் பிரியங்கன், ஈஸ்வரன், சுஜன், அபிராம், தசி, சஜீவன், சுகு, உமாகாந்த், அரவிந்த், கஜன், கிருஷன். சிலரிடம் ஒரு பேராசிரியர் களை தென்பட்டாலும் அவர்களும் கலகலப்புக்கு குறைவில்லை.





Monday, March 4, 2013

என் மின்மினிகள்






நிலவுக்கு ஒளியேற்ற
சூரியனை தேடிப்போனேன்
விண்மீன்களையும் அழைத்துக்கொண்டு.
வழி நெடுகிலும் கடைகள்
எல்லாம் சூரியன் விற்பவை.
முன்னும் பின்னுமோ
வாங்குவோர் கூட்டம்.
சிலரிடம் சூரியன் ஒருமையில்
சிலரிடமோ  அது பன்மையில்!
பின்னும்  ஏன்?
கவுரவத்தை உயர்த்திக்கொள்ளவாம்.
ஒருவாறு நுழைந்து விலை கேட்ட போது
உயிரையே விற்றாலும் முடியாத விலையுடன்
கண் சிமிட்டி சிரிக்கிறது சூரியன்!
புண்ணான கால்களுடன் வெளியேறி வந்தேன்
வழமையை விடவும் இருட்டு மண்டலம்
திரும்பி பார்க்கிறேன்
மூன்று சூரியன்கள் வாங்கியவனுடன்
எனக்கு முகம் திருப்பி போகின்றன ஏன் விண்மீன்கள்!

திணிப்பு






நான் நட்ட மல்லிகைகள் பூக்களுக்கு பதிலாக
முட்களை பிரசவித்து கொண்டிருக்க
காலமோ அதில் எனக்கொரு முள்முடி தயார் செய்கிறது.
என் தலையில் வழியும் ரத்தத்தை துடைக்க
கைகளை நீட்டுகிறேன்
சீழ் பிடித்ததாய் சிறை வைக்கப்படுகிறது அது.
எறும்பாய் பிறந்து விட்டு
வரிசையை மீறலாமா?
தலைகளை தொடர்ந்து போவதே விதியாய்
உயிர்ப்பினை தொலைத்தேன்
வெறுமையாய் நிற்கிறது என் வீடு.
எனக்கு அடுக்குமாடி தந்ததாய்
காலம் பெருமை பேச
தினந்தோறும் கனவில் வருகிறது
பச்சை பூந்தோட்டம் நடுவிலே சின்ன வீடு!

எங்கிருந்து வந்தாயடா?






நீ: உனக்கு என்ன பிடிக்கும்?
நான்: காதலும் சுஜாதாவும்!
நீ: வேறு?
நான்: மஞ்சள் பிடிக்காது
நீ:பிடித்ததை கேட்டேன்?
நான்: பிடிக்காததை சொன்னேன்!
முறைத்தாய்!
நீ முறைத்தால் நான் பயந்து விடுவேனா? நானும் முறைத்தேன்.
உன் பின்னால் திரும்பி பார்த்தாய்!
கேள்விக்குறியானது என் முகம்
நீ: இல்லை, போலீஸ் வருகிறதா என்று பார்த்தேன்?
நான்: என்ன?????
நீ: முழித்து கொண்டிருந்தாயே!!!
ரத்த வண்ணமானது என் முகம்! நான் முறைப்பதாக அல்லவோ நினைத்தேன்!

கவிதை






Tuesday, August 14, 2012





மழை பார்க்க
தலை நீட்டுகிறாய் நீ
கண்களை பொத்திக்கொள்கிறது மின்னல் !

Thursday, May 5, 2011

பிரித்தானிய அரச குடும்பத்தின் திருமணத்தில் வேற்றுக் கிரகவாசிகள்!





பிரித்தானிய இளவரசர் வில்லியம்ஸின் திருமணத்தை காண்கின்றமைக்கு வேற்றுக் கிரகவாசிகள் வந்து இருக்கின்றனர் என்று நிபுணர்களால் சந்தேகிக்கப்படுகின்றது.

அடையாளம் கண்டு பிடிக்க முடியாத பறக்கும் பொருட்கள் பல கடந்த ஒரு வார காலத்துக்கும் மேலாக ஆங்கில கால்வாய்க்கு மேலாக பறந்து திரிந்ததை பிரித்தானிய விமானிகள் அவதானித்து உள்ளனர்.

குறிப்பாக வெஸ்ட்மின்ஸ்ரர் மடத்துக்கு மேலான வான் பரப்பில் மர்மப் பொருள் ஒன்று பறந்து திரிந்ததற்கான தடயம் கிடைத்து உள்ளது.

பூமியில் இடம்பெறுகின்ற மிகவும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சம்பவங்களை அவதானிக்கின்றமைக்கு வேற்றுக் கிரகவாசிகள் புறப்பட்டு வருகின்றமை பொதுவான விடயம் என்று நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

Thursday, March 24, 2011





காத்திருப்பும்  காதலும் மனிதர்களுக்கு மட்டுமா?இந்த நாயாரை பாருங்கள்! கொட்டும் மழையிலும் அதுவும் நடு வீதியில் என்ன வைராக்கியமாய் காத்திருக்கிறார்!
 
இவருக்கு எந்த லட்சுமணன் கோடு வரைந்தானோ? !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Thursday, December 2, 2010





                                                                                        ஓய்வெடுக்கட்டும் உன் இதயம் பாவம்.
அதற்கும் சேர்த்துத்தான் தூக்கத்திலும்
துடித்துக்கொண்டிருக்கிறதே என் இதயம்.

நண்பருக்கு நன்றி





துடித்துக்கொண்டிருக்கும் என் இதயத்தைக்கூட
ஓய்வெடுக்கச் சொல்கிறேன்.
என் நெஞ்சில் துயிலும்
உன் துயில் கலைந்து விடக்கூடாதென்று!