Sunday, May 11, 2014

சின்ன சின்ன தூறல் என்ன???





எனக்கும் தண்ணீருக்கும் கொஞ்சமும் ஆவதில்லை!!!!!

என்ன உளருகிறேன் என்று பார்க்கிறீர்களா?? ஹா ஹா நிறைய நாட்களின் பின் கொஞ்சமாய் ஒரு ஓய்வு கிடைத்தது. வெளியே மழை பெய்து கொண்டிருந்தது வெளியே எங்கும் போகவும் முடியாது, இசைமழையில் கொஞ்சம் நனையலாம் என்று போனால் சின்ன சின்ன தூறல் என்ன பாடல் என்னை இழுத்து உள்வாங்கிக்கொண்டது! மழை நாள் வேறா? அந்த அழகான வரிகளும் இசையும் அப்படியொரு இனிமையான உணர்வைத்தந்தது!

சின்ன சின்ன தூறல் என்ன
என்னைக் கொஞ்சும் சாரல் என்ன
சிந்தச் சிந்த ஆவல் பின்ன,
நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன...

உனது தூறலும் இனிய சாரலும்
தீண்டும் மேகம் சிலிர்க்குதம்மா...

உனது தூறலும் இனிய சாரலும்
தீண்டும் தேகம் சிலிர்க்குதம்மா...
நனைந்த பொழுதினில் குளிர்ந்த மனதினில்
ஏதோ ஆசை துடிக்குதம்மா...
மனித ஜாதியின் பசியும் தாகமும்
உன்னால் என்றும் தீருமம்மா
வாரித் தந்த வள்ளல் என்று
பாரில் உன்னை சொல்வதுண்டு
இனமும் குலமும் இருக்கும் உலகில்
அனைவரும் இங்கு சரி சமமென உணர்த்திடும் மழையே...

சின்ன சின்ன...

பிழைக்கு யாவரும் தவிக்கும் நாட்களில்
நீயோ இங்கே வருவதில்லை...


மழைக்கு யாவரும் தவிக்கும் நாட்களில்
நீயோ இங்கே வருவதில்லை...
வெடித்த பூமியும் வானம் பார்க்கையில்
நீயோ கண்ணில் தெரிவதில்லை...
உனது சேதியை பொழியும் தேதியை
முன்னால் இங்கே யாரறிவார்...
நஞ்சை மன்னும் பூஞ்சை மன்னும்
நீயும் வந்தால் பொன்னாய் மின்னும்
உனது பெருமை உலகம் அறியும்
இடி என்னும் இசை முழங்கிட வரும்
மழை என்னும் மகளே...

எனக்கு மழையை பிடிக்காது!

பட் பட் சட் சட் டென சடுதியாய் தூறி தலை நனைத்து உடல் நனைத்து உன் வருகையை அறிவிக்கும் அந்தச்சில தருணங்களில் தான் நான் குடை மறந்து போயிருப்பேன்! உலர்வாய் இதமாய் நடந்து கொண்டிருக்கும் என்னில் உன் முதல் துளி பட்டு நனைந்த தலைமுடியிலிருந்து சொட்டும் திவலைகள் நெற்றியில் வழிந்து இமை தாண்டி விழி தேடி வரும் போது இதம் தொலைந்து போனதில் சின்னதாய் ஒரு எரிச்சல் வரும்! கை எழுந்து நீர் துடைக்கும். கண்கள் தலைக்குமேல் குடை தேடும்! நனைந்து விட்ட உடையது உடலோடு ஒட்டிக்கொண்டதா என்று பதற்றமாய் கண்களும் கையும் அடிக்கடி சரிபார்க்கும். நீ பெய்து ஓய்கையிலே தேங்கி விட்ட வெள்ளமதில் சிதறும் நீரினால் என் உடையெல்லாம் சேறாகும். மெத்தென்று கால்வைத்து பதமாய் நான் நடக்கையிலே சர்ரென்று நீரை வாரி இறைத்துச்செல்வான் யாராவது ஒரு வண்டிக்காரன்! வீட்டுக்கு வந்து மீண்டும் உலர்வாய் மாறுமட்டும்.... ஐயோ! மழையே என் வெறுப்புப்பட்டியில் முதல் நான்கு இடங்களில் கண்டிப்பாய் உனக்கும் ஒரு இடமிருக்கும் எப்போதும்!

ஏன் இந்த மழை இரவில் மட்டும் பெய்து விட்டு காலையில் சுவடின்றி உலரக்கூடாது??? அடிக்கடி இந்தகேள்வி என் மனதில் எழும்!
எப்போதாவது அரிதாய் நான் ஓய்வாய் வீட்டிலிருக்கும் தருணங்களில் உன்னை ரசித்திருக்கிறேன். சுற்றுச்சூழல் பிரக்ஞையின்றி நனைந்திருக்கின்றேன்! எப்போதாவது ஒரு தடவைதான்! மற்றப்படிக்கு என் உன்னை விட ஷவர் தருணங்களே எனக்கு பிடித்தமாக போதுமானதாக இருந்து விடுகிறது!

உனது பெருமை உலகம் அறியும்
இடி என்னும் இசை முழங்கிட வரும்
மழை என்னும் மகளே...

இந்த வரிகள் வரும் போது வரும் இசை என்னை என்னவோ செய்தது! யன்னலூடு மழையைபார்த்து அந்த நீரோட்டத்தை அனுபவித்து மழைச்சாரலில் நின்று காபி குடித்து...எதுவும் அந்த இசை தந்த உணர்வுக்கு ஈடாகவில்லை! என் நீண்ட நாள் ஆசையும் எப்போதும் தோல்வியில் முடிவதும் ஆன ஒன்றை இன்று நிறைவேற்றிக்கொள்வது என்று முடிவு செய்தேன்.

அதாவது தண்ணீர் துளிகள் என் தலையில் பட்டு உடலில் வழியும் போது ஒட்டு மொத்தமான நனைதல் உணர்வின்றி அடுத்தடுத்து விழும் நீரினை உடலால் உணர வேண்டும்! புவியீர்ப்பு விசை, மற்றும் நீர் மற்றும் உடலின் பௌதிக தன்மைகள் அதை எப்போதும் சாத்தியமற்றதாக்கினாலும் பூச்சியத்திலிருந்து மெது மெதுவாய் ஷவரின் வேகம் கூட்டினால் ஏதோ ஒருநிலையில் எனக்கு திருப்தியான அளவு வேகம் கிடைக்கும் என்பது என் நம்பிக்கை! அந்த இசையும் பாடலும் இன்னும் அந்த நம்பிக்கையை கூட்டின!

ஷவரை மெதுவாய் திருப்புகிறேன்!

தலையில் படும் ஒற்றைத்துளி என் உடலில் வழிவதை நான் உணர வேண்டும் என்றால் குழாயை திருகிவிட்டு நான் திரும்ப முன்னமே சட்டென்று கொட்டி அத்தனையையும் கலைத்து நிமிடத்தில் நிலம் நாடிபோகின்ற அவசரக்கார தண்ணீரை திட்டிய படி ஷவரின் வேகம் குறைத்தால் டொக் டொக் என்று ஏதோ கடமைக்காய் வந்து விழுந்து கோபமூட்டுகிறது அது! இன்னும் கொஞ்சமாய் கூட்டினேன்! ஆகா இதுதானா? கண்களை மூடிக்கொண்டேன்! இதோ நெற்றியில் மூக்கில்...ச்சே அதற்குள் காலில் போய் சேர்ந்து விட்டது! இப்படியே ஏமாற்றங்கள் தொடர கடுப்பாகி போனேன்! நான் பெண்ணென்றால் இந்த தண்ணீர் கட்டாயம் ஆணாய்த் தான் இருக்கவேண்டும்! ஆண்களும் அப்படித்தானே! பேசவே முடியாத அவஸ்தை தருணங்களில் தான் தானாய் அழைப்பது! நாமாய் அழைக்கும் தருணங்களில் படபடவென கொட்டி விட்டு துண்டிப்பது! பேசியே ஆகவேண்டும் என்று அடம் பிடித்தால் இதே டாக் டாக் தான்! ஹா ஹா அந்த எரிச்சலிலும் தத்துவாரத்தமாய் சிந்திக்கும் என் அறிவையே நான் வியக்கேன்!

சரி ஷவரும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம்! சாவகாசமாய் நீர்த்தொட்டியை நிரப்பி பின்னணி இசையெல்லாம் வைத்து விட்டு ஏறி அமர்ந்தால் அங்கே தண்ணீர் தூங்குகிறது!!!!!!! உர்ர்ர்ர்!!!!!!!!!!!! எனக்கும் இந்த தண்ணீருக்கும் ஆவதே இல்லை!!! உங்களுக்கும் இப்படி அனுபவம் உண்டா மக்களே!


No comments:

Post a Comment