Tuesday, November 25, 2014

நீ நான் அவன்-17





தொழிற்சாலைக்கு உட்புறம் பிரவுன் நிற வார்னிஷில் தளபாடங்கள் பளபளக்க ஒருவித நீலவர்ணத்தை முதலாக கொண்டு அந்த அரை அலங்கரிக்கப்பட்டிருந்தது. நீல திரைச்சீலைகள், நீல நிற பேனா தாங்கி முதற்கொண்டு ஒற்றைப்பூச்சாடி கூட நீல நிறத்தில் இருந்தது. ஏசி வழங்கிக்கொண்டிருந்த இதமான குளிர்மையும் வழக்கம் போல மெல்லிய சத்தத்தில் பிரஜித் இசைக்க செய்யும் கரோக்கேயும் என அவன் அமைதியை குளிக்கும் எதுவும் அங்கே காணப்படவில்லை. இருந்தும் வழக்கமாய் இதழிலேயே உறைந்து கிடக்கும் சிரிப்பை தொலைத்து  பிரஜித்தின் முகம் சிணுக்கத்தை காட்டிக்கொண்டிருந்தது.

ச்சே!!!!! மேஜையில் பைலை கொஞ்சம் சத்தமாகவே வைத்தான்.
அவனை மீறி வினு போய் விடுவாள் என்று அவன் கனவிலும் எண்ணவில்லை! அதுவும் சும்மா போகவில்லை! உன்னிடம் நான் அனுமதி கேட்டேனா? என்றல்லவா கேட்டாள்?

அவன் தன் உள்ளத்தை அவளுக்கு காட்டியிருக்கவில்லை என்பதும் அவளை விட்டு விலகியிருக்க முடிவு செய்தவன் அவன் என்பதையும் அவன் உள்ளம் எண்ணிப்பார்க்கவில்லை.

அவனது சொல்லை அவள் பெரிதாக எண்ணவில்லை என்பது அவன் நெஞ்சத்தில் கோப அலைகளை கிளப்பி விட்டுக்கொண்டிருந்தது! வீட்டில் விட முடியாது என்று சொன்னதுமே அடுத்த வார்த்தை பேசாமல் சரி என்று கிளம்பிப்போய் விட்டாளே அவனால் எப்படி நிம்மதியாக இருக்க முடியும்?

அதுவும் மாமனார் வந்து மாமியாரிடம் சத்தம் போட்டது அவனை கொஞ்சம் பாதித்து தான் விட்டது. இதுவரை பரமேஸ்வர் அவனுக்கு மரியாதை கொடுப்பார். இன்று அவர் குரல் உயர்த்தும்படி செய்து விட்டு ஓடி விட்டாளே பாதகி?

புலிகள் ரத்தம் பார்த்தால் சும்மா விடாதாமே! தற்செயலாக கீறல் ஏதும் பட்டால் என்ன ஆவது? இன்னும் அவன் அவள் போனதை ஏற்கவே இல்லை! இன்று எங்கே போவாள் என்று அவனுக்கு நன்றாகவே தெரியும்! வேறு எங்கே ஷக்தி ஆண்ட்டி இடம் தான் போவாள்! அவரை தான் உருட்டி மிரட்டி காரியம் சாதிக்க முடியும்!

என்ன செய்கிறேன் பார்!

விறுவிறுவென்று தொலைபேசியின் இலக்கங்களை அழுத்தினான். சக்தி இப்போதெல்லாம் அவன் அழைத்தால் எடுப்பதே இல்லை அவளுக்காக பொய் சொன்ன குற்றவுணர்ச்சி! ஆகவே அலுவலக எண்ணுக்கு தான் அழைத்தான்!

ஹலோ...

ஹலோ அன்பகம்!

ஹலோ சக்தி ஆண்ட்டி. பிரஜித் பேசறேன்.

.................... சொல்லு பிரஜித்!

ஆன்ட்டி அங்கே பிரவீனா வந்தாளா?

இல்லையே தம்பி!

உண்மையாக தான் சொல்கிறீர்களா?

நிஜம் தான் தம்பி..வரவில்லை ஆனால் போன் செய்தாள். மாலை ஐந்து மணி போல நான் அலுவலகத்தில் இருப்பேனா என்று கேட்டாள்!

சரி!! எனக்கு ஒரு உதவி செய்கிறேன் என்று வாக்குகொடுப்பீர்களா? ஆன்ட்டி?

எ...என்ன தம்பி வாக்கு அது இதுவென்று???

வேறு ஒன்றுமில்லை. மாலை பிரவீனா உங்களை தேடிவந்து தான் அன்பகத்தில் தாங்கிக்கொள்ள முடியுமா என்று கேட்பாள். நீங்கள் அங்கே தங்க முடியாது என்று சொல்லி விடுங்கள்!

எப்படி தம்பி? பெண் பிள்ளை அவள்! நான் எப்படி அவளுக்கு இல்லையென்பது? அவள் பிறகு எங்கே போவாள்?

ஏன் கடல் போல என் வீடு அவளுக்கில்லையா?

தம்பி...

ஆன்ட்டி...சில விஷங்களின் பாரதூரத்தை அவள் புரிந்து கொள்ள வேண்டும்! அதற்காகத்தான் உங்களிடம் நான் இதை கெஞ்சிக்கேட்கிறேன். அவளோடு சேர்ந்து கொண்டு எனக்கு பொய்யுரைத்தீர்கள்! எனக்கு ஏதேனும் ஒரு நன்மை செய்ய வேண்டுமென்று நினைத்தால் அவளை சேர்த்துக்கொள்ளாதீர்கள்! அவ்வளவுதான்!

தம்பி...என்று அவர் அழைத்துக்கொண்டு இருந்த போதே போனை வைத்து விட்டான் அவன்!
***************
காலை அவன் உறுக்கிய பயமோ என்னவோ அன்று மதியம் சித்தியை பற்றியோ அவளின் ரிக்கி விக்கி பற்றியோ வாயே திறக்காமல் மௌனமாக சாப்பிட்டு கொண்டிருந்தனர் பவியும் விதுவும்! அப்போது வாயைக்கொடுத்தால் அவர்கள் அவளை கேட்டு அடம்பிடிப்பார்கள் என்பதால் அதையே சாதகமாக எண்ணிக்கொண்டு தானும் முகத்தை கோபமாக வைத்துக்கொண்டிருந்தான் பிரஜித்.

தம்பி அவளை கூட்டிட்டு வந்துரலாமே! பாவம் புள்ள! யாரோ போல இல்லியா அலைஞ்சிட்டு இருக்கு..தாயம்மா தான் கைகழுவும் போது மெல்ல நூல் விட்டார்.

எனக்கு அவ அங்க போறது பிடிக்கலை தாயம்மா. என் பேச்சை கேக்காதவங்க என் வீட்டுல எதுக்கு இருக்கணும்? கோபமாய் சொல்லி விட்டு வெளியேறி போய் விட்டான் அவன்.

என்னை மதிக்காம போயட்டேல்ல!

நான் உனக்கு அவ்ளோ முக்கியத்துவம் இல்லாதவனா?

அந்த புலிக்கு நீ கொடுக்கும் முக்கியத்துவம் எனக்கு இல்லையா?

உன்னை அங்கே அனுப்பிவிட்டு நான் எப்படி நிம்மதியாக இருப்பது?ஏன் நீ புரிந்து கொள்ள மறுக்கிறாய்?

அவனை மீறி எண்ணங்கள் உலாப்போக அறையின் மத்தியில் குறுக்கும் நெடுக்கும் நடக்க ஆரம்பித்தான் பிரஜித்.

தம்பி...

என்ன தாயம்மா??

உங்களை தேடி ஒருத்தர் வந்திருக்கார்! ஹால்ல உக்காரவச்சுட்டு வந்தேன்.

வர்றேன்... கழற்றிப்போட்டிருந்த ஷர்ட்டுக்கு பதிலாக ஒரு டிஷர்ட்டை எடுத்து மாட்டிக்கொண்டு இறங்கி வந்தான் அவன்.

முழுக்கை ஷர்ட் பார்மலாக இன் பண்ணி ஜெல் வைத்து தலைவாரி சிறு அழுக்கும் படாமல் உயரமாக சிவப்பாக கொஞ்சம் பெண்மைத்தன்மையுடன் இருந்தான் அந்த இளைஞன்.
யாரிவன்?

ஹலோ ஆம் பிரஜித் ..என்றபடி அவனிடம் கைநீட்ட பற்றிகுலுக்கியவன் ஹாய் ஆம் எழில் வேந்தன்! பிரவீனா விஷயமா உங்க கிட்ட பேசணும்!
என்று சொல்ல பிரஜித் இன் உடல் எக்கு என இறுகியது!

பிரவீனா விஷயமா என்கிட்டே பேச என்ன இருக்குனு எனக்கு புரியலையே!!
சட்டுன்னு சொன்னா உங்களுக்கு கஷ்டமாய் தான் இருக்கும் சாரி சார் என்று அசட்டு புன்னகை செய்தான் எழில்..

பிரஜித்...கால் மீ பிரஜித்

அது வந்து பிரஜித்...நீங்க தான் எப்படியாவது எனக்கு இந்த உதவியை செய்யணும்!

நீங்க இன்னும் விஷயத்துக்கே வரலையே மிஸ்டர் எழில்! அவனுக்கு பொறுமை பறந்து கொண்டிருந்தது. எப்போதும் ஜவ்வாய் இழுப்பவர்களை அவனுக்கு பிடிக்காது. சரியோ பிழையோ கொட்டி விடுவதே வழக்கம்!

வந்து பிரவீனா,..பிரவீனா எங்கே போயிருக்கா?

எனக்கு தெரியாது! கைகளை கட்டியபடி அவன் அமர்த்தலாக பதில் சொல்ல தடுமாற ஆரம்பித்தான் அந்த எழில்!

வந்து பிரஜித்... நீங்க ஏனோ கோபமாயிருக்கீங்க னு புரியுது! ஆனா பிரவீனாவை நேத்து டிவி பார்த்தது இருந்து என் நெஞ்சுல தண்ணியே இல்லை! ஏன் சார் பொம்பளை புள்ளைக்கு ஏன் சார் இந்த வேண்டாத வேலை?

அதை நீங்க பிரவீனா கிட்ட சொல்லணும்!

கால் பண்ணினேனே! அவ எடுக்கவே மாட்டேங்குறா!!! அவளை நான் மூணு வருஷமா லவ் பண்றேன் பிரஜித். கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன், அவ கிட்ட சொன்னா சம்மதிக்க மாட்டேங்குறா! ஆனாலும் நான் கன்வின்ஸ் பண்ணிடுவேன் னு நம்பிக்கை இருக்கு எனக்கு!

சுறு சுரு வென கோபம் மூண்டது பிரஜித்துக்குள்! அவனிடம் வந்து சொன்னது ஒருபக்கம்! மற்றது அவளுக்கு போய் நீயா என்ற கோபம்! எதை பேசறதுனாலும் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு முழங்குற எங்கே! ரெண்டு வார்த்தைக்கு தந்தியடிக்குற நீ எங்கே? கன்வின்ஸ் பண்ணிடுவாராம்! !

இதுல நான் என்ன செய்ய முடியும் எழில்?

அவளை எப்டியாவது அந்த புலி ப்ராஜெக்ட் இருந்து கூட்டிட்டு வரணும், அவங்கப்பா பேச்சை கேக்கமாட்டா நு கேள்விப்பட்டேன்! நான் கால் பண்ணா எடுக்கவே மாட்டா..நீங்க தான் என்னை எப்டியாவது அவ கிட்ட கூட்டிட்டு போகணும், நா எப்டியாவது கன்வின்ஸ் பண்ணிடறேன்!

கிழிச்சே!!! அந்த நிலைமையிலும் சிரிப்பு வந்து தொலைத்தது பிரஜித்துக்குள்.நாங்களும் ஏற்கனவே ஒரு ரவுண்டு போயிட்டு வந்து தாண்டி உக்காந்துருக்கோம்!

இத பாருங்க மிஸ்டர் எழில்! என்னால உங்களை அவ கிட்ட அழைச்சிட்டு போக முடியாது. எனக்கு இப்போ ஒரு மீட்டிங் இருக்கு. நான் பாக்டரி கிளம்பணும். சாரி. வேணும்னா ஒண்ணு பண்ணறேன், கால் டாக்சிக்கு கால் பண்ணி விடறேன். அந்த சாங்சுவரிக்கு நேரவே போய் பாருங்களேன்!

அது வந்து பிரஜித்..எழில் கையை பிசைய ஆரம்பித்தான்.

என்ன எழில்?

பிரவீனா நான் தனியா பேசப்போனா கண்டுக்கவே மாட்டா, என்னை தெரிஞ்சது போல காட்டிக்கவோ நின்னு பேசவோ மாட்டா..போன தடவ கூட போலிஸ் மாட்டி விட்ருவேன் னு இஷூ ஆயிடிச்சு!

அட சனியனே! இவ்ளோ கேவலமா அவ உன்னை ட்ரீட் பண்றா..இன்னும் எதுக்குடா அவ பின்னாடி சுத்தறே!

அது உங்க ப்ராப்ளம் எழில்..ஆனா இப்போ நீங்க தனியா தான் போகணும். டாக்சியை கூப்பிடவா வேணாமா?என்ற படி அவன் ஜாடையாக மணி பார்க்க அவசரமாய் கால் பண்ணுங்க பிரஜித் என்றான் எழில்!

அவன் போன பின்பும் அப்படியே தெருவை பார்த்துக்கொண்டு நின்றான் பிரஜித்.

அவ அவன் சொல்றதை கேட்றுவாளோ?

ச்சே ச்சே பழம் மாதிரி இருக்கான்.இவன் பேச்சையா கேப்பா?

ஒருவேளை கேட்டுட்டா? அர்த்தமற்ற பொறாமை ஒன்று அவன் மனதில் புசு புசுவென புகைய ஆரம்பித்தது.

நீ தான் அவளை விட்டு விலக முடிவு எடுத்தவனாயிற்றே! இனி அவள் யார் சொல்லை கேட்டாலென்ன விட்டாலென்ன? நீ ஏன் கிடந்தது மாய்கிறாய்? உள்ளத்தின் கேள்விக்கு அவனிடம் பதிலில்லை.
*********

பிரவீனா தோளில் தோள்பையை சுமந்த வண்ணம் பிரதான வீதியில் இருந்து பிரிந்த வீதியில் நடந்து கொண்டிருந்தாள். சக்தி சொன்னதை கேட்டு அதிர்ந்தவள் பிரஜித் இந்த அளவுக்கு போவான் என்று கனவிலும் எண்ணவில்லை. இன்று மதியம் எழில்வேந்தனை அனுப்பியது கூட அவனாக தான் இருக்கவேண்டும். செக்கியூரிட்டியிடம் சொல்லியனுப்பி விட்டு சந்திக்காமலே தவிர்த்தாள்.

விடாது கருப்பு! ஒன்றல்ல இரண்டல்ல மூன்று வருடங்களாக அவளை விடாது துரத்துகிறது! நாடகம் ஒன்றிற்காய் சரஸ்வதி வேடத்தோடு அவளை கண்ட நாள்முதல் அவளை பிடித்த கருப்பு அவ்வப்போது அவள் துர்காவாய் மாறும் பொது ஓடிப்போய் விட்டு மீண்டும் விட்ட இடத்திலிருந்தே ஆரம்பிக்கிறது இம்சை! பிரஜித் அவள் மனதை புரிந்து கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. இவனை அனுப்பியதை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவள் அவனை நேசிப்பது உண்மை, அவனோ அவள் மீது சின்ன உரிமையுணர்வு கூட இல்லாதவனாக அல்லவா இருக்கிறான்!

சக்தி தன்னோடு அவள் தங்க முடியாது என்று தவிப்புடன் கைவிரிக்க அதற்குமேல் அந்த பெண்மணியை மனக்கஷ்டத்துக்கு ஆளாக்க மனதின்றி வெளியே வந்தவள் வேறு வழியின்றி  ரஞ்சித்துக்கு அழைத்தாள் தற்காலிக தங்குமிடம் ஏதேனும் ஏற்படுத்தி தரமுடியுமா என்று கேட்பதற்காக! அவர் உடனடியாகவே மானேஜரின் குவார்ட்டசில் வந்து தங்கிக்கொள்ளும் படி கூறிவிட்டார். மானேஜர்கள் பெரும்பாலும்  ஊரிலேயே சொந்த வீடு, குடும்பத்துடன் வசிப்பதால் பெரும்பாலும் குவார்ட்ஸ்கள்  விருந்தினர்களின் பாவனைக்காகவே ஒதுக்கப்படுவதுண்டு! கூடவே ஜூ வில் பணிபுரியும் இரண்டு பெண்கள் உதவிக்கு இருப்பார்கள் எனும்போது அவளுக்கு பயமாக இல்லை. ஆனால் இது பிரஜித் இன் கோபத்தை இன்னும் அதிகரிக்குமே என்னும் போதுதான் மனதுக்கு கஷ்டமாக இருந்தது.

குவார்ட்ஸ் காட்டின் எல்லையில் இல்லாமல் ஊருக்குள்ளேயே  அமைந்திருந்தது. நகரகட்டமைப்புக்கும் கிராமிய கட்டமைப்புக்கும் இடையில் கிராமிய மணம் அதிகமாக கொண்டு அழகாக  அமைந்திருந்தது அவள் தங்கப்போகும் வீடு.சுற்றிலும் பூவரச மரங்களால் நெருக்கமாக எல்லையிடப்பட்டு முற்றத்தில் பெரியதொரு புளிய மரத்தையும் பின் புறம் மாந்தோப்பையும் கொண்டு அமைந்திருந்தது அந்த கல்வீடு. அவள் கலங்கவே தேவையில்லாமல் இன்முகத்தோடு வந்து வரவேற்றார்கள் சுரபியும் அமுதாவும். அவர்கள் அந்த சரனாலயதிலேயே வேலை செய்பவர்கள். ஆதரவற்ற பெண்கள் ஆதலால் அந்த குவார்ட்ஸ் பராமரிக்கவும்  அங்கேயே தாங்கிக்கொள்ளவும் அனுமதி அளித்திருக்கிறது நிர்வாகம். இருவருமே இந்த இரு நாட்களும் அவளுக்கு மிக நன்றாக அறிமுகம் ஆனவர்கள்!

அமுதா அறுபதுகளில் இருக்கும் பெண்மணி, சுரபிக்கு துணையாக அங்கேயே தங்கிக்கொள்பவர். அதிகம் பேசாமல் கண்களாலேயும் செயல்களாலும் பாசம் காட்டும் வகையறா..சாப்பிட்டுவிட்டுத்தான் வந்தேன் என்று அவள்  சொன்ன பொய்யை காதிலேயே வாங்காமல் தங்களுக்கு வைத்திருந்த பிட்டையும் கத்திரிக்காய் பொரியலையும் கணக்கில் கொள்ளாது எங்கோ போய் மாலைச்சந்தையில் இறால் வாங்கி வந்து வெந்தயக்குழம்பு ஆக்க முனைந்து விட்டார் அதற்குள்!

தன பையை இடது பக்க முதலாவது அறையில் வைத்தவள் வீட்டை சுற்றிப்பார்த்தாள் . ஓட்டு வீடுதான் உயரமான திண்ணை பெரிய ஹால் நான்கு அறைகள் கிச்சனுடன் அமைந்திருந்தது. சுற்றிலும் புளிய மரமும் மாமரங்களும் நிழலையும் குளிர்மையையும் அள்ளித்தர ஒரு பிரத்தியேகமான இனிய சுகந்தம் வீசிக்கொண்டே இருந்தது. நல்ல பெரிய வீடுதான்! இந்த ஒருவாரம் முற்றிலும் வித்யாசமான அனுபவமாகத்தான் அவளுக்கு இருக்க போகிறது. இந்த மக்கள் அவர்களுடைய வாழ்வியல் எல்லாமே அவளுக்கு புதிதுதானே.

பின்புறப்படிகளால் இறங்கி நடந்தாள் . கடுங்கபில நிறம்  மண்ணின் வளத்தை சொல்ல  ஓரமாய் வளர்ந்து நின்ற மரக்கறி வகைகளோ  அதன் செழிப்புக்கு ஆதாரமாய் காய்த்துக்குலுங்கின. ஒரு மா பிஞ்சு பிடித்து  கிடக்க மற்ற இரண்டும் பூக்களோடு நின்றனமிகப்பதிவான கிளைகளோடு  குடையாக விரித்து நிற்கும்  மாமரத்தை இங்கு தான் பார்க்கிறாள்! பிஞ்சுகளை எட்டித்தொட முயன்றாள் . தொட முயன்றபோது உயரமாகி விட்டது போல அது கண்ணாமூச்சி விளையாட மீண்டும் எக்கி தொடமுயன்றாள் அவள்.
வீணாக்கா!! பச்சை புளிக்கா அது! வாய்ல வக்க முடியாது! ஆனா பழம் தேனா இனிக்கும்! பின்னாடி நெல்லுப்பெட்டிக்க பழுக்கபோட்டிருப்பாங்க அக்கா. அத வேணும்னா எடுத்துக்கோ!

சுரபியும் இறங்கி வந்துகொண்டிருந்தாள். சுரபி இருபதுகளின் நடுப்பகுதியில் இருக்கக்கூடும். மாநிறமான குழந்தை தனமான முகத்தோடு இருந்தாள். பேச்சு எல்லாம் வெட்டி வெட்டி கத்தி போல வேகத்துடன் வந்துகொண்டிருந்தது. பழகுவதற்கு மிக இனிமையான பெண்ணாக இருந்தாள். நேரடியாக எதையும் வெகுளித்தனத்தோடு சொல்லிவிடுவது சமயங்களில் சிரிப்பாக கூட இருந்தது.
எனக்குத்தான் இனிப்பு பிடிக்காதே சுரபி!!இதுல ஏறிப்பறிக்க முடியாதா? விழுந்துட மாட்டேன்ல ..என்றபடி மரத்தில் தாவி ஏறியவள் ஒரு குழந்தையின் உற்சாகத்துடன் துள்ளியபடி தன்  மொபைலை எடுத்து மரத்தில் இருந்தபடி செல்பிகளை கிளிக்க ஆரம்பித்தாள்.

ஐயோ.. கீழ நான் ஒருத்தி இருக்கேன்ல? அப்புறம் எதுக்கு ஒற்றைகைல போனை பிடிச்சிக்கிட்டு ஒத்தைகால்ல தாளம் போடறீங்க..இங்க கொடுங்க நான் எடுத்து தர்றேன்!

ஹா ஹா அதுக்கு பேர் செல்பி! நான் இறங்கி வந்து அதை காட்டறேன்.நீ என்னை போட்டோ எடுக்கறியா? முழுமரமும் நானும் வரணும் ..இதோ இந்த மாங்காய் எல்லாமே விழணும் சரியா?? என்றபடி மொபைலை குனிந்து  சுரபியிடம் தந்தாள்.

ஏங்கா நிஜமாவே நீங்க இதை பார்த்தது இல்லையா....

அடப்போமா..நான் மாசக்கணக்குல காட்டுக்குள்ள இருந்திருக்கேன்,, ஆனா மரத்துல ஏறி விளையாடினா எப்பவுமே குஷியாயிடுவேன்!என்றவள் பவி விதுவுக்கும்  மரத்திலேறி விளையாடுவது மிகப்பிடிக்கும் என்பதை நினைவு கூர்ந்தாள் . எப்படி இருக்கிறார்களோ..என்ன செய்கிறார்களோ? அவளை தேடுவார்களோஇப்போது அவளது உடைகள் எத்தனை வெட்டப்பட்டதோ தெரியவில்லை. அவன் இப்போது என்ன செய்வான்? இவள் எங்கே  போனாள்  என்று தேடுவானோ? குழந்தைகளிடம் ஆரம்பித்த அவள் நினைவு அவர்களின் தந்தையிடம் வந்து நின்றது.

என்னக்கா நிமிஷத்துல முகம் வாடிப்போச்சு. அவரோட நினைப்பா?

ஒருகணம் அதிர்ந்தவள் ச்சே ச்சே எனக்கு அக்கா குழந்தைகளின் ஞாபகம் வந்து விட்டது. அவர்களை பற்றித்தான் எண்ணிக்கொண்டிருந்தேன்.

அதானே பார்த்தேன்! அவர் இருந்திருந்தா உன்னை அவர் இப்படி அனுப்பிருக்க மாட்டாரே!!

புரியலையே..அவள் இதயம் ஏனோ தடதடக்க ஆரம்பித்திருந்தது.

நாம ஆதரவு இல்லாதவங்க. இந்த ஜூ வந்து இருக்கோம். நைஞ்சு போன மனசுக்கு புள்ளைங்க போல இந்த  மிருகங்களை பாத்து ஆறுதல் படுத்திக்கிறோம். உனக்கு என்ன தலையெழுத்து? நீ தனியாளா இருக்கறதால தானே யாரும் கண்டுக்காம நீ உன்னிஷ்டத்துக்கு சுத்தற! உனக்குன்னு ஒருத்தர் இருந்தா உனக்காக பயந்திருப்பாரே. ஒண்ணுமே இல்லாத விஷயத்துக்கு கூட நமக்காக அவங்க பயப்படறது எவ்ளோ சந்தோசம் தெரியுமா?

பேச்சின்றி அப்படியே நின்றாள் பிரவீனா.

அவளையும் எதிர்த்தார்கள் தான்.

அப்பா எதிர்ப்பதை கணக்கெடுக்க முடியாது ஆனால் பிரஜீத்????

அவனுக்கு அவள் யார்?

அவள் மனதில் அவன் வந்த செய்தியை எந்த சைகையிலும் அவள் அவனிடம் சொல்லிக்கொள்ள வில்லை. ஆனால் அவன் இன்று முழுதும் எடுத்துக்கொண்ட உரிமைக்கு என்ன பெயர்? இந்த நிமிடம் வரை அவள் திரும்பி வரவேண்டும் என்று முயற்சித்து கொண்டல்லவா இருக்கிறான்? தந்தை போல திரும்பி செல்லவில்லையே. அன்று உடை வாங்கும் போது அவளுக்கு வாங்கி கொடுத்தோ தெரிவு செய்தோ கொஞ்சமும் உரிமை எடுத்து கொள்ளாதவன் இன்று நான் அனுமதிக்க முடியாது என்று அழுத்தமாய் சொன்னானே! அவன் என்ன அவன் மனதில் என்ன இருக்கிறது என்று அவளுக்கும் அவள் மனதில் என்ன இருக்கிறதென்று அவனுக்கும் தெரியாது. சொல்லிக்கொள்ளவும் முடியாது. இடியாப்பச்சிக்கல் ஒன்றுக்குள் மாட்டிகொண்டது போன்ற உணர்வில் உடல் வியர்க்க மாங்காயை மறந்து கீழே குதித்தாள் அவள்.

நான் இங்கே வந்தது தப்பு னு சொல்றியா சுரபி? ரிக்கியும் விக்கியும் செத்தாலும் பரவால்லயா?

ஐயோ..அப்டி சொல்வேனா வீணாக்கா! என்ன நீ? சுரபி பதற

அவ சொல்லவந்தது என்னனா...பாவம் அதுங்களை பார்த்துக்கிறதுக்கு இங்கே யாருக்குமே தெரியலை. நீ வந்து உதவி பண்ணது எவ்ளோ நல்ல விஷயம். ஆனாலும் இவ்ளோ படிச்ச வசதியான பொண்ணு நீ, ஒருநாள்ள கொஞ்ச நேரம் வந்து இப்டி இப்டி னு சொல்லி கொடுத்துட்டு  போனா இங்க இருக்கறவங்க பாத்துப்பாங்களே! நீ ஒரு தடவைலயே நானே  எல்லாத்தையும் பார்த்துக்கறேன் நு கிளம்பி வந்துட்டயே! இந்த ஊர் மனுஷங்க எல்லாம் எப்படி நு நீ நினைச்சு பாத்தியா? டீவில காட்டினதும் கெளம்பி வந்துட்ட! உன் அதிஷ்டம் இந்த ஊரும் சரி மனுஷங்களும் சரி தங்கமானவங்களா கிடைச்சிருக்காங்க! கெட்ட இடமா இருந்தா என்ன பண்ணிருப்ப நீ? பொம்பளை புள்ள சட்டு புட்டு னு முடிவு எடுத்துர கூடாது கண்ணு! சுரபியும் அதை தான் சொல்ல வந்துது!!! ஒண்ணும் பயப்படாத..இங்க நீ இருக்கும் வரை நாங்க உன்னை கண்ணுக்குள்ள வச்சு பாத்துப்போம்! சட்டியை கழுவதற்காய் வெளியே வந்த அமுதா நீளமாய் பேசியபடியே கழுவி முடித்து அதற்குரிய கம்பிச்சட்டத்தில் கவிழ்த்து வைத்தார்.


அங்கேயே இருந்து பிரஜித் சமாதானப்படுத்தி இவர்கள் சொல்வதை போல செய்யாமல் அவசரப்பட்டு கிளம்பி வந்தது தவறோ என முதல் தடவையாக சிந்திக்க ஆரம்பித்தாள் பிரவீனா!

தொடர்வேன் 

No comments:

Post a Comment