Sunday, May 11, 2014





5

வெளியே பனித்தூவல் நின்று போயிருக்க வெள்ளொளிக்கீற்றுக்கள் பூமித்தரையை தொட்டுத்தெறித்துக்கொண்டிருந்தன. வீட்டினை லேசாய் பனி மூடியிருக்க யன்னல்கள் கூட புகையாய் பனியை பூசிக்கொண்டு உள்ளிருப்பவளுக்கு திரை செய்துகொண்டிருந்தன. உலகமே உன்னை பகைத்தாலும் இயற்கையன்னை, நான் என்றும் உனைக்கைவிடமாட்டேன் என்று சொல்லாமல் சொல்கிறாளா?

குளிர் தொடுத்த அம்புகளை ஹீட்டர் தவிடுபொடியாக்கிகொண்டிருக்க குளிரை உணராமல் அப்படியே நிலத்தில் சுருண்டிருந்த அபியின் முகத்தில் ஏதோ ஈரம் செய்யவும் திடுக்கிட்டு விழித்தவளுக்கு ஜூலியனின் சோக முகம் தான் தரிசனம் தந்தது.

மணி பத்து! இவ்வளவு நேரமா தூங்கினோம்? பாவம் நன்றாக பசித்துவிட்டது போலும்! ஜூலியனின் தலையை வருடிக்கொடுத்தவளுக்கு இவ்வளவு நேரமும் அவள் அமைதியை குலைக்க யாரும் வராமல் இருந்தது ஆச்சர்யம் தந்தது. அதுவும் அனந்த....அந்த செல்வா வந்து விட்டு போன பின்!!! 

ஆச்சர்யம் அவளது பயம் துக்கம் எல்லாம் அகன்று மனம் அமைதியாய் இருப்பதாய்ப்பட்டது. இருப்பதை எல்லாம் இழந்த பின் இனி இழக்க என்ன இருக்கிறது என்ற தைரியம்! மனதைக்கூட இழந்து விட்டாளே!

சிந்தித்தபடியே குளித்து ஜூலியனுக்கும் தனக்குமாய் ஒரு அவசரச்சமையலை ஒப்பேற்றி சாப்பிட்டு முடித்தபோது அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை அவள் மனமும் திட்டமிட்டு முடித்திருந்தது,

மைக்கல்!

அவளுடைய உயிர் நண்பன், அடுத்த மாநிலத்தில் வசிப்பவன், தந்தையார் போலிஸ் கமிஷனர். தந்தையின் இறப்புக்கு பின்னர் அவருடைய உயிர் நண்பர்கள் பொய்த்துப்போய் இவ்வளவு காலமும் கூட வளர்ந்த வேலையாட்களால் மனநிலை பாதிக்கப்பட்டவள் என பட்டம் சூட்டப்பட்டு, அடைக்கலமடைந்த போலிஸ் கூட பணத்துக்கும் நட்புக்கும் வாலாட்டியதால் வீட்டுக்காவலில் வாடியவளுக்கு யாரையும் நம்பவோ யாரையும் தன்னால் துயரத்துக்குள்ளாக்கவோ முடியவில்லை. இலகுவாக பிடிபட்டுப் போய்விடுவேன் என்பதாலேயே தன் நெருங்கிய நண்பர்களை விடுத்து வெளிநாட்டில் தன்னோடு கற்ற செரிலை தேடிப்பிடித்தாள். ஆனால் இப்பொதோ அவளுக்கு தனியாக செயல்படும் தெம்பில்லை. நெஞ்சில் அனந்தன் அடித்த அடியின் வலி எப்போதும் எங்கேயும் உறவென்று அவளைத்தாங்கும் நண்பன் வேண்டுமென்றது. அத்தோடு அங்கிளிடமும் ஆலோசனை கேட்கலாமே!




**************


உறைய வைக்கும் குளிருக்கு நன்றி! லேயர் லேயரான உடைகளுக்குள் உடலோடு சேர்த்து தன் அடையாளத்தையும் மறைத்தவள் காதைச்சுற்றியிருக்கும் ஷாலை லேசாக முகத்தை மறைக்குமாறு இழுத்துவிட்டுக்கொண்டு ஜூலியனை வண்டியிலிருந்து இறக்கினாள். 

பிறகு வண்டியை ஒருதடவை திரும்பிப்பார்த்தவள் அப்படியே ஸ்டேஷன் நோக்கி நடந்தாள். குளிரை சபித்தபடி நடந்துகொண்டிருக்கும் மக்களுக்கோ வீடு சென்று ஹீட்டரின் கதகதப்புக்குள் ஒண்டிக்கொள்ளும் அவசரம்! இதில் மனநிலை பாதித்திருப்பதாய் பிரகடனப்பட்டிருந்த அவளை கண்டுபிடிப்பது யார்

சென்ட்ரலுக்கு ரெண்டு டிக்கட்!

பக்கத்துவரிசையில் நின்ற ஓரிரு தலைகள் அவளை அசுவாரசியமாகவும் ஜூலியனை சுவாரசியமாகவும் பார்த்துவிட்டு திரும்பிக்கொள்ள வெறிச்சோடிக்கிடந்த பெஞ்சொன்றில் அமர்ந்துகொண்டு ரயிலுக்காய் காத்திருக்க ஆரம்பித்தாள் அபி!

இரவு பதினோரு மணிக்கு ஜூலியனைஒரு கையிலும் முதுகில் பக்பாக்குடனும் வந்துநின்ற அபியை அந்த நேரம் எதிர்பார்க்கவே இல்லை என்று கதவைத்திறந்த விமலா ஆன்ட்டியின் அதிர்ந்த முகம் அறிவிக்க ஐயோ ஏழரைச்சனி வீடு தேடி வந்திருப்பதாய் எண்ணிக்கொள்வார்களோ என்று உள்ளுக்குள் மறுகியவள் தங்கம்! எங்களை கூட மறந்துட்டியா என்றபடி ஆன்ட்டி இழுத்தணைத்துக்கொள்ள இலவம் பஞ்சாய் மனம் இலேசானாள். ஆன்டிடியின் கனத்த உடலுக்குள் கோழிக்குஞ்சாய் ஒண்டிக்கொண்டவளின் கண்ணீர்த்துளிகளோ ஆன்ட்டியின் சேலை மடிப்பில் காணாமல் போய்க்கொண்டிருந்தன.

விமலா அவளை உள்ளே விடும்மா, அம்மாடி நீ இந்த நேரம் தனியா வரலாமா? ஒரு போன் பண்ணிருந்தா நேரே நான் வந்திருப்பேனே! சரி சரி முதலில் வெந்நீரில் அலுப்புத்தீர குளி...என்று பேசிக்கொண்டே போன வேதநாயகம் அவள் கண்களின் அலைபாய்தலைக்கண்டதும் மைக்கேல் இல்லையம்மா. குவார்ட்டஸ்ல இருக்கிறான். உன்னைக்கண்டதும் அவனுக்கு சொல்லிட்டேன், வந்துகிட்டே இருப்பான்என்று கூடுதல் தகவலையும் பகிர்ந்தார்.

அதற்குள் அவளை உள்ளே அழைத்துவந்திருந்தவிமலா அபி சோபாவில் அப்படியே விழுந்ததை பார்த்ததும் சூடாய் காபி கொண்டுவருகிறேன் சாப்பிட்டு விட்டு குளிக்கலாம் என்றபடி சமையலறைக்கு ஏறக்குறைய ஓடினார்.

ஆன்ட்டி...அந்த தீனக்குரல் தனதா என்று அபிக்கே சந்தேகம் முளைத்தது!

என்னம்மா...

பசிக்குது ஆன்ட்டி...மத்யானம் பதினோரு மணி போல நானும் இவனும் பொங்கல் போல எதையோ கிண்டி சாப்பிட்டோம், பயத்துல வழில இறங்கி சாப்பிடவும் இல்லை, பயங்கரமா பசிக்குது.....அப்புறமா குளிக்கிறேனே...

கண்கலங்கிப்போன விமலா ஆண்டி ஒரே நிமிஷம்மாஎன்றபடி உள்ளே விரைய அவருக்கு உதவி செய்வது போல அவளை அமைதியடைய விட்டுவிட்டு வேதனாயகமும் சமையலறைக்குள் மறைந்தார்.

***********

அவளை கூப்பிட்டு மட்டும் கேட்க முடிஞ்சதா உனக்கு?

நீ என்ன ஆனாய்? எப்படி இருகிறாய் எதுவும் தெரியாமல் தாறுமாறாய் வரும் நியூஸ் எல்லாம் கேட்டு எவ்வளவு பதறிட்டோம் தெரியுமா?

என்ன நடந்திச்சு அபி?

இவ்வளவு கேக்கிறேன் பதில் சொல்றாளா பார்! ஷூவை கூட கழற்றாமல் சாப்பாட்டு அறையில் வந்து கத்திய மைக்கலை உண்பதை நிறுத்தி விட்டு நிமிர்ந்து பார்த்த ஜூலியன் மறுபடியும் உணவில் மூழ்கி விட இன்னும் கடுப்பானது மைக்கலுக்கு! 

அபி ஆவி பறக்கும் உப்புமாவை தேங்காய் சட்னியில் தோய்த்து வாய்க்குள் தள்ளிக்கொண்டிருந்தவள் ஆன்ட்டி கொண்டுவைத்த இட்லியையும் போட்டுக்கொண்டாள். இன்னும் அவள் சுவைக்க மீதியாய் கறி தோசை, தயிர்சாதம் மேஜையில் காத்திருக்க இப்போதைக்கு அவன் கேள்வி காதில் விழுந்தால் தான் அதிசயம்! காதடைக்கும் பசி, மன இறுக்கம் தளர்ந்ததால் இலகுவான உள்ளம் எல்லாமும் சேர்ந்துகொள்ள அவள் ரசித்து ரசித்து உண்டுகொண்டிருந்தாள். காபியை தன் கையால் ஆற்றியபடி வந்த வேதநாயகம் மகனை முறைத்தார்.

அவள் சாப்பிட்டு குளித்து வந்தபின் எல்லாம் பேசலாம்! என்ன அவசரம் இப்போ?

அப்பா....

நீயும் டிரஸ் மாத்திட்டு வாடாம்மா..அபியோடு சாப்பிடலாம்! அழைத்த அன்னையின் குரலா இல்லை மேஜையிலிருந்த உணவின் வாசனையோ தெரியவில்லை, மனதை மாற்றிக்கொண்டு தன்னறை நோக்கி நடந்தான் மைக்கேல்.

*********


குளித்து புத்துணர்வாய் மாறியிருந்த அபியை இன்னும் தன கைகளுக்குள்ளேயே வைத்துக்கொண்டிருந்தார் விமலா. பத்து வயதிலிருந்து மகனோடேயே சுற்றுபவள் இன்னுமொரு மகள் தான் அவருக்கு! தாயில்லாப்பெண் என்று இன்னும் ஒருபடி வாஞ்சை உண்டு அவள்மேல் விமலாவுக்கு!

இந்த குழந்தையை போய் இப்படி வதைத்திருக்கிறார்களே! எப்படி தாங்கியிருப்பாள் அதுவும் தனியாக! நினைக்க நினைக்க தாங்கவில்லை அவருக்கு! இருபுறமும் சோபாக்களில் மைக்கேலும் வேதனாயகமும் இறுகிப்போய் அமர்ந்திருந்தனர்.

ம்ம்ம்...சும்மா இருந்தா அப்பா நினைப்பு பைத்தியம் பிடிச்சிடும் னு தான் கம்பனிக்கு போனேன். ரெண்டு வாரம் அதிகம் அங்கிள்! ஒரு நெட்வொர்க் மாதிரியே வச்சிருந்தாங்க. அக்கவுண்ட்ஸ் எல்லாமே அவங்க பொறுப்பில தான், யாரும் கேள்வி கேக்க முடியாது! ஒண்ணு ரெண்டா இருந்தா பேசாம விட்டிருப்பேன்! எவ்வளவு நம்பின அப்பாவை இப்படி எமாத்துனாங்களே என்ற கோபந்தான். போய் கேட்க என்னை அவங்க சீரியஸா எடுத்துக்கவே இல்லை! என்னை வளத்தவங்க வேறையா? என்னாலேயே அவங்க கெட்டவங்க னு நம்ப முடியலை! 

ஒவ்வொரு கம்பனி கம்பனியா போனேன், பார்த்தேன் எல்லாமே இதே நிலை தான்! அப்பா ஒரு டம்மியா, ஐடியாக்களுக்கு மட்டும் தான் இருந்திருக்கார், முழுக்க முழுக்க இவங்க இராட்சியம் ஆகி பத்துவருஷத்துக்கு மேல ஆகியிருக்கு! 

ஏன் அபி? அவங்களும் பார்ட்னர்ஸ் தானே? 

Sas
ல அபியோட அப்பா சத்ரியன் மட்டும் தான் 90 வீதமான முதலீடு பண்ணவர்! ஜீனியஸ் அவருக்கு வியாபார தந்திரங்கள் புரியாது, ஆனா அஷோக்கும் சர்வாவும் நரி மாதிரி! இவங்க ரெண்டு பேரும் தான் மார்க்கட்டை பாத்துப்பாங்க. அவரை நம்ப வச்சுட்டு திரை மறைவுல நிறைய கோல்மால் பண்ணிட்டு இருக்காங்க னு சந்தேகம் ரொம்ப காலமா உண்டு என்று வேதநாயகம் மகனுக்கு பதில் சொன்னார்.

அப்பாக்கும் சந்தேகம் வரத்தொடங்கியிருக்கு அங்கிள்! அவசர அவசரமா யாருக்கும் தெரியாம உயில் எழுதி விபரங்களை செல்வியிடம் மட்டும் சொல்லிருந்தாரே! என்ன பிரயோஜனம்? அப்பிடியொண்ணு இருக்கறதே இனிமேல் யாருக்கும் தெரியப்போறதில்லை! ஆனந்தனின் நினைவில் அவள் முகம் கறுத்தது.

ஏன்மா ஹவுஸ் அரஸ்ட் ல வைக்கற அளவுக்கு நிலைமை போனது?

ஒருநாள் வாய் தகராறு முத்திடிச்சு அங்கிள், அம்மாவை அனுப்பின இடத்துக்கே உன்னையும் அனுப்பிடுவோம்! அவளும் இதேபோலத்தான் மூக்கை நுழைச்சா னு சொல்லிட்டாங்க! 
எங்கம்மாவ கொன்ன பாவிகள் என்றதுமே கொஞ்சம் நஞ்சம் இருந்த பாசமும் போயிடிச்சு! பயந்துட்டது மாதிரி நடிச்சிட்டே ஒவ்வொரு கம்பனிக்கும் அவுட் சோர்சிங் வச்சு முழு அனலிசிஸ் பண்ணினேன், 

ஒருமாசம் எடுத்தது முடியறதுக்கு! அதுக்குள்ளே நான் பண்றது புரிஞ்சு போச்சு அவங்களுக்க! கொலை மிரட்டல், ஐஞ்சு வருசமா பைத்தியம் எனக்கு னு பிரஸ்ல அனௌன்ஸ்மென்ட் னு தொடர்ந்து வர எதை எப்படி சமாளிக்கிறது ஒண்ணுமே புரியலை!

ம்ம்ம்..நீ காடு மலைன்னு சுத்தினதால உன்னை யாருக்கும் தெரிஞ்சும் இருக்காது. அதுவும் அவங்களுக்கு வாய்ப்பாயிருந்திருக்கும்!

ம்ம்ம்...செல்வி தவிர எல்லாரும் நான் மெண்டல் னு சொன்னாங்க அங்கிள்!யாரை நம்புறது ஒண்ணுமே புரியலை! கடைசியா எவிடன்சோட ரகசியமா கமிஷனர் அங்கிளை..பார்த்தேன்! அதுக்கு பரிசு தான் மூணு நாள் ஹவுஸ் அரஸ்ட்! ஒருவழியா தப்பிச்சு செல்வியையும் இவனையும் மட்டும் கூட்டிகிட்டு வெளியே வந்தேன்! என்னால இன்னும் நடந்ததை எல்லாம் நம்ப முடியலை!

இவ்வளவு நடந்திருக்கு! என்கிட்டே ஒருவார்த்தை சொல்லத்தோணலையே என்று மைக்கல் மறுகி நிற்க

உயில் விஷயம் எப்படி அவங்களுக்கு ?????? என்று யோசனையாக ஆரம்பித்த வேதநாயகம் ஓ அந்த வக்கீல் தானே??? கண்டுகொண்ட வேதனையுடன் நிறுத்தினார்.

அவரே தான் அங்கிள், அப்பா எவ்வளவு வெகுளியா இருந்திருக்கார்! நினைக்கவே கஷ்டமா இருக்கு. ஒரே ஒரு சந்தோஷம், இதையெல்லாம் பார்க்காம போய்ட்டார்!

சரி சரி நடந்ததையே நினைக்காம இனிமே என்ன பண்றது என்று சொல்லுங்களேன்! விமலாவின் குரல் அனைவரையும் சிந்தனைக்கு தள்ளியது,

இங்க இருக்கறது யாருக்கும் தெரியாது. எங்க கூடவே அபி இருக்கட்டும்! மைக்கல் சொல்ல 

இல்லை! இப்போது அபி நல்லா இருக்கிறாள், அதுவும் எங்களோடு இருக்கிறாள் என்று மீடியாவுக்கு அறிவிப்பது தான் முக்கியம்! அது அவள் இதற்குப்பிறகு எடுக்கப்போகும் நடவடிக்கைகளுக்கு உதவும்!அவங்க ரெண்டு பெரும் நேரடியா தலையிடலை..நாமளும் அதையே பாலோ பண்ணலாம்,நான் இருக்கும் போது அவளுக்கு எதுவும் ஆகாது! வேதநாயகம் சிந்தனையாக முடித்தார்.

***************


மறுநாள் காலை ஆங்கில வர்த்தக நாலேடுகலில் எல்லாம் அபியின் பேட்டி தலைப்புச்செய்தியாயிருந்தது!

அப்பாவின் மறைவுக்கு பின் எனக்கு மன அமைதி தேவைப்பட்டது. அதனால் தான் எங்கள் குடும்ப நண்பர்கள் வீட்டுக்கு சென்ட்ரல் வந்தேன்! Sasக்குள் எந்த பிரச்சனையும் இல்லை. தேவையில்லாத வதந்திகளை குறித்து என்னிடம் கேட்காதீர்கள். சிறிது நாட்கள் ஓய்வுக்கு பின் மறுபடியும் நிர்வாகத்தில் பங்கெடுக்க வருவேன்! என் ஆசைக்கு சுற்றியாயிற்று! இனி அப்பாவின் கனவை நனவாக்குவதுதான் திட்டம்! பளீர் சிரிப்புடன் அபி பேசியிருந்தாள்.

செல்வா வின் வரவு பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

அவரை நான் இன்னும் பாக்கலை. இனிமேல் அங்கே போனதும் தான் என்று கத்தரித்திருந்தாள்!

அதே பக்கத்தில்....

Sas
கம்பனிக்கு இப்போஎன் உதவி தேவைப்படுது! கம்பனில பங்கெடுக்கிறது பத்தி இன்னும் எனக்கு ஐடியா கிடையாது! இப்போதைக்கு கம்பனியை ஸ்திரப்படுத்திட்டு இருக்கேன்! என்று உதட்டில் இறுகிய சிரிப்புடன் அனந்தனும் வாய் திறந்திருந்தான்!

அபிநயாவை சந்தித்தீர்களா? அவரை பற்றி பல செய்திகள் உலாவுகின்றனவே!

அவரை சந்திக்க முடியவில்லை, இக்கட்டான நேரத்தில் செய்திகளுக்கு சிறகு முளைப்பது சகஜம் தான் என்று அவனும் நறுக்குத்தெரித்திருக்க

இறுதியில் பெட்டிச்செய்தியாக 

வாரிசுகளிடையே மோதல்? செல்வாவின் வரவு, அபினயாவின் சென்ட்ரல் விஜயத்துக்கு காரணமா? என்று பத்திரிக்கை தன் போக்கில் ஆராய்ந்திருந்தது!



No comments:

Post a Comment