Wednesday, November 26, 2014

18








மெஷின்களின் இரைச்சலுக்கு போட்டியாக ஆங்காங்கே தொழிலாளர்களின் சத்தமும், நாசிக்கு பழகிப்போய் உணரவே முடியாத நிலைக்கு வந்து விட்ட ஒரு ரப்பர் வாசமும் அவனை சுற்றி வந்து கொண்டிருக்க மெதுவாக நடை பழகிக்கொண்டிருந்தான் பிரஜித்.ரப்பர் பால் வெள்ளை எரிமலை குழம்பாக பிரமாண்ட தட்டுக்களில் பெல்டின் மேல் பயணித்துக்கொண்டிருக்க ஆங்காங்கே அவனுக்கு வணக்கம் சொன்ன மேற்பார்வையாளர்களுக்கும் எதிர்ப்பட்ட தொழிலாளர்களுக்கும் சிரிப்புடன் தலையசைத்து அவன் பாணியில் வணக்கம் சொல்லியபடி நடந்தவனை ஸ்ரீ ராமின் குரல் கவனம் கலைத்தது.

மெல்லிய சிரிப்புடன் மடிப்புக்கலையாமல் எதிரே நின்று கொண்டிருந்தவனை ஏறிட்டான் பிரஜித். டிசைனர் எனவும் பல நகை வடிவமைப்புக்கலையில் டைவா வாகவும் பல பெண்களின் கனவுக்கள்வனாகவும் திகழ்ந்த பிரஜே ப்ருஷோத்தமன் இந்த தொழிற்சாலையை வாங்கி தொழிலதிபர் அவதாரம் எடுத்த போது அந்த எஸ்டேட்டிலேயே பிறந்து வளர்ந்து பல்கலைக்கழகம் முடித்த ஸ்ரீ ராம் கணக்காளர் வேலைக்கு அவனை தேடி வந்தான். அந்த சில மணி நேரங்களிலேயே அவனை கண்டு கொண்ட பிரஜித் அவனை முகாமை பயிற்சியாளராக சேர்த்துக்கொண்டு இரண்டு மாதங்களிலேயே தனக்கு அடுத்த நிலைக்கு அதிரடி பதவியுயர்வு வழங்கினான். அவன் கணக்கு தப்பவில்லை, ஆரம்ப காலங்களில் ஸ்ரீராமின் அனுபவமே பிரஜித்துக்கு மூலதனமாக இருந்தது. கஷ்டப்பட்டு முன்னேறியவன் ஆதலால் நேர்மையை உயிராய் கடைப்பிடிப்பான். பிரஜித் என்ன முயன்றாலும் சில இன்ச்சுகளுக்கு மேல் அவன் புன்னகை விரியாது!

ஸ்ரீ..என்னடா...

ஒரு இன்டர்ன் பொண்ணுக்கு ஆபரேஷன்ஸ்ல ஆபர் கொடுத்திருந்தோமே, ராதா னு! அவளோட அப்பா வந்திருக்கார். உன்னை பாக்கணுமாம்! ஆள் கொஞ்சம் நெர்வஸா பேசறார் அதுதான் நானே நேர்ல சொல்ல வந்தேன். பொறுமையா பேசு!

அந்த பொண்ணு ராதாவை எப்போ வரச்சொல்லியிருந்தே?

நாளைக்கு பத்து மணிக்கு!

சரி வா.. என்றபடி அணிந்திருந்த பிளாஸ்டிக் ஏப்ரனை கழற்றி அதற்குரிய இடத்தில் வைத்து விட்டு ஸ்ரீயோடு கூட நடந்தான்.

நீயும் வா..

நான் எதற்கு? உன்னிடம் அவர் பேச வந்திருக்கும் போது!

அந்த பெண்ணை தெரிவு செய்தது முதற்கொண்டு சகல விடயங்களையும் நீ தான் கவனிக்கிறாய்! சோ .... என்று நிறுத்தியவன் ஸ்ரீ ராம் புறம் திரும்பி “வா” என்று முடித்து விட்டு கண்ணாடிக்கதவை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தான் பிரஜித்.

ஹலோ சார்..நான் பிரஜித். MD, இவன் ஸ்ரீராம் மானேஜர். நீங்க தான் மிஸ் ராதா வோட அப்பா இல்லையா?

ஆமா...விறைப்பாகவே இருந்தார் அந்த மனிதர். உடை பாவனைகளில் கிராமத்து வெள்ளந்தி மனம் வெளிப்பட்டுக்கொண்டிருந்தது. அந்தப்பெண் ராதாவின் வீடு இருந்தது இங்கிருந்து ஒருநாள் பயணத்தொலைவில்! மிகவும் பின் தங்கிய பிரதேசப்பெண். அவளே அதை ஒரு நிமிர்வாக சொன்ன விதம் தான் அவர்களை கவர்ந்திருந்தது.

சொல்லுங்க சார்...என்ன விஷயம்?

சார்..எம் பொண்ணுக்கு இங்கே வேலை ஆயிருக்கு.

வேலை இல்லை. அவள் வேலை கற்றுக்கொள்ள மூன்று மாதங்கள் அனுமதித்திருக்கிறோம்!

என்னவோ தம்பி! மூணு மாசம் எம் புள்ள இங்க வேலை செய்யப்போகுது. அப்பன் காரன் தெரிஞ்சுக்க வேணாமா? என்று அதிரடியாக ஆரம்பித்தவர் அவ கூட ஆம்பளை பசங்க வேலை பாப்பாங்களா? என்று முதல் கேள்வியை வீசினார்.

ஆமாம் சார், ஆனால் இங்கே பெண்களும் வேலை பார்க்கிறார்கள்! தரக்குறைவாக நடந்து கொள்பவர்களுக்கு என்னிடத்தில் இடமில்லை. மேலும் உங்கள் மகள் இவரின் நேரடிப்போறுப்பில் தான் இருக்கப்போகிறாள். ஆகவே பயமில்லை.

என்ன தம்பி பொறுப்பில்லாம பேசறீங்க? ஏன் தம்பி உங்களுக்கு கல்யாணமாச்சா? அவர் இப்போது நேரடியாகவே ஸ்ரீ இடம் கேள்வி கேட்டார்.

கேள்விகள் போகும் திசையை இறுக்கத்துடன் பார்த்திருந்த ஸ்ரீ முகம் இப்போது கல்லாகிவிட இல்லை என்று தலையசைத்தான் அவன்!

அப்போ கல்யாணமாகாத பையன் கூட மூணு மாசம் என் பொண்ணை விட்டு வைக்கறதா? அவளுக்கு தனியா இடம் கொடுக்க மாட்டீங்களா? அப்புறம் எதுக்கு பொண்ணுங்களை சேர்த்துக்கிறீங்க?

சார்... உங்க பொண்ணை இங்கே வர வேணாம் னு சொல்லிடுங்க! இவ்வளவு கஷ்டப்பட்டு அவங்க இங்க வரதேவைல! ஸ்ரீ வெடிக்க வாய் பிளந்து பார்த்தவன்

ஒரு நிமிஷம் சார். என்று ராதாவின் தந்தையிடம் அனுமதி கேட்டுக்கொண்டு ஸ்ரீ யை கண்களால் வெளியே இழுத்துப்போனான்.

டேய்! என்னடா இது? என்னை பொறுமையா இருக்க சொல்லிட்டு நீ பொங்குறே?

பின்ன என்ன? பொண்ணுங்க எப்ப வரும்னு காத்துக்கிடக்கேனா நான்?இது வரை யாரும் என் காரக்டரை தப்பா பேசினதில்ல தெரியுமா? ஸ்ரீ இன்னும் கொந்தளித்து கொண்டிருந்தான்.

பாவம்டா..கிராமத்து மனுஷன்! நான் பேசறேன்..நீ கொஞ்ச நேரம் வாய மூடிட்டு இரு. என்றவன் அதிசயமா இருக்கு ஸ்ரீ நீயா இப்டி பேசினே? என்று மறுபடியும் வியந்து கொண்டு உள்ளே சென்றான்.

சார்... எங்களுக்கு மூன்று மாதம் என்பது பெரும் நேர விரயம். கல்லூரியில் திறமையான பெண் என்று சான்றிதழோடு அந்த பெண்ணின் ஆர்வத்தையும் பார்த்து விட்டு தான் நாங்கள் இந்த உதவியை அந்த பெண்ணுக்கு செய்யலாம் என்று முடிவு செய்தோம். நீங்கள் பயப்படுவது போல உங்கள் பெண்ணுக்கு எந்த கௌரவ குறைவும் வராது. நீங்கள் வேண்டுமானால் உங்கள் பெண் வேலை செய்யப்போகும் இடத்தை முழுவதுமாக சுற்றிபார்க்க வசதி செய்கிறேன். பார்த்து விட்டு நீங்களே முடிவு செய்யுங்கள். எந்த முடிவானாலும் எங்களுக்கு சரிதான் என்று புரிய வைத்தவன் பெண் ஊழியர் ஒருவரை அழைத்து அந்த மனிதருக்கு தொழிற்சாலையை சுற்றிக்காட்ட சொல்லி அனுப்பினான். ஸ்ரீ யையும் கன்டீனுக்கு துரத்தினான்.

ஒரு மணி நேரம் கழித்து வந்தவர் முகமெல்லாம் சந்தோசம்.
என்னை மன்னிச்சிடுங்க தம்பி. உள்ள பாக்கவே புல்லரிக்குது. எவ்ளோ பெரிய இடத்துல எம் பொண்ணு வேலை பாக்க போவுது! கூட வந்த பொண்ணு, என்ன அன்பா பேசுறா..நிறைய பொண்ணுங்க வேற இருக்காங்க....பேசிக்கொண்டே போனவரை சிரிப்புடன் இடைமறித்தவன் அப்போ உங்க பொண்ணு வருவாங்களா என்று வினவினான்.

கண்டிப்பா தம்பி! எனக்கு பொண்ணு இவ்ளோ தூரம் வந்து படிக்கிறதில எல்லாம் இஷ்டமே இல்லை. ஆனா எம் பொண்ணு கெட்டிக்காரி, அவ சந்தோசம் இது தான் ங்கற போது நான் எப்புடி குறுக்க நிக்கறது? அதான் நானே வந்து எல்லாத்தையும் கேட்டு தெரிஞ்சு கிட்டு பாதுகாப்பான இடமா இல்லியா நு முடிவு பண்ணலாம்னு வந்தேன். நா படிக்காதவன் தம்பி ஏடாகூடமா பேசிருந்தா மன்னிச்சிடுங்க. அந்த தம்பிகிட்டையும் சொல்லிடுங்க என்றபடி கைகூப்பி விட்டு கிளம்பியவரை போய் வாருங்கள் என்று சொல்ல கூடத்தோன்றாமல் வெறுமே தலையசைத்து வைத்தான் பிரஜித்.

அவர் பேசிய வார்த்தைகள் அவனை கேள்வி கேட்டன. பிரவீனா விடயத்திலும் அவன் இதை தான் செய்திருக்க வேண்டுமோ? படிப்பறிவு வாசனையில்லாத அந்த மனிதரின் பெருந்தன்மை அவனுக்கில்லாமல் போய் விட்டதா?

ட்ரின்க்...ட்ரின்க்.....

ஹலோ பிரஜித் ஹியர்...

தம்பி..பவி அழுதுகிட்டே இருக்கா. ஒருதடவை பேசுங்களேன். தொலைபேசி கைமாற்றப்பட பவியின் விம்மல் சத்தம் பெரிதாய் கேட்டது.

பவிக்குட்டி...ஏன் தங்கம் அழறீங்க?

குழந்தை இன்னும் பலமாக விம்மினாளே தவிர அவளால் பேச முடியவில்லை.

அவனுக்கு புரிந்து போனது. இரண்டு நாட்களாக அவர்களோடு அவன் நேரம் செலவழிக்க வில்லை. பெரியவர்கள் செய்யும் பிரச்சனைக்கு குழந்தைகள் என்ன செய்வார்கள்?

தங்கம் அழக்கூடாது கண்ணா...அப்பா இதோ இப்போ வர்றேன்..ஐஸ் கிரீம் பாலஸ் போலாம் என்ன?

அழுகை மாயமாகி விட்டது. பிராமிஸ்?

பிராமிஸ் டா தங்கம். போனை பாட்டி கிட்ட கொடு

சொல்லுங்க தம்பி.

ரெண்டு பேரையும் டிரஸ் பண்ணி ரெடியாக்குங்க, நான் இதோ வர்றேன்.

சொல்லிக்கொண்டே காண்டீனில் இன்னும் முகம் மாறாமல் காபி கொலைவெறியாக குடித்துகொண்டிருந்த ஸ்ரீ இடம் சொல்லிக்கொண்டு மதியத்தோடே வீட்டுக்கு கிளம்பினான் அவன்.

அவன் வந்த போது குதித்த படி இருவரும் தயாராக இருக்க இருவரையும் ஏற்றிக்கொண்டதும் காரை ஐஸ்க்ரீம் பாலஸ் நோக்கி விட்டான்.

என்ன ஐஸ் கிரீம் வேணும்? சொல்லுங்க பார்ப்போம்..

எனக்கு கேக்!!! வெட்டினா...சாக்கி ஓடுமே அது!!!

ஓகே விதுவுக்கு லார்வா கேக்!  பவிக்கு என்ன வேணும்?

எனக்கு மாகி ஸ்பெஷல்!!!பெரீ....சா இருக்குமே! ரெட் கலர் ஜெலி லாம் வச்சு..

“மகி நா நூடில்ஸ் டி..மண்டு!” செல்லமாக அவள் தலையில் கொட்டியவன் “மெகா ஸ்பெஷல்” என்று திருத்தினான்.

காரை பார்க் செய்ததுமே நாங்கள் ஆர்டர் சொல்ல போகிறோம் என்று இருவரும் கவுண்டரை நோக்கி ஓடிவிட சிரிப்புடன் உள்ளே அமர்வதற்கு கண்களால் ஒரு டேபிளை தேடியபடி நடந்தான் பிரஜித்.

பிரஜி................... நீ வேலைக்கே போமாட்டியா? சங்கியின் குரலை பட்டென கண்டு கொண்டவன் ஹா ஹா நீ மட்டும் இங்க வேலையா பாக்குறே? என்று திருப்பினான். இருவரது வாண்டுகளும் கவுண்டரில் சந்தித்து கொண்டிருக்க வேண்டும்! கீச்சுக்குரல்கள் அந்த ஹாலை நிரப்பி அனைவரின் தலையையும் கவுண்டரை நோக்கி திருப்பியது.

அந்த பெரிய டேபிளுக்கு போவோம் வாயேன் என்ற சத்ரியனை தொடர்ந்தார்கள் பிரஜித்தும் சங்கவியும்.

என்னடா..பிரவீ டிவி ல எல்லாம் கலக்கிட்டிருக்கா!!!

ம்ம்...

இப்போ ஜூ ல தானே?

தெரியல!

என்னடா..இப்டி சொல்றே? அவ எங்க இருக்கா பின்னே?

அங்கே போறது எனக்கு பிடிக்கலை. அதான் என் வீட்டை விட்டு போய்ட்டா..

சத்ரியனும் சங்கவியும் இதை எதிர்பார்க்கவில்லை என்று கண்கள் காட்டிய அப்பட்டமான அதிர்ச்சியே சொன்னது.

ஏன் பிரஜி...அவ எக்ஸ்பர்ட்டாமே... டீவில சொன்னாங்க.நீ ஏன் வேணாம் னு சொல்றே? பயமா?

ஹேய்..அதுல பயப்பட ஒண்ணுமே இல்லப்பா..மூணு மாசம் ஆகும் வரைக்கும் நாய்களோடு கூட அதுங்களை சேர்த்து வளர்க்கலாம். அவ ட்ரைன்ட் வேற! என்று சத்ரியன் சொல்ல

பாவம் டா போய் பேசு... என்று ஆரம்பித்த சங்கி பிரஜித்துக்கு தெரியாமல் கணவன் கண் காட்ட அப்படியே நிறுத்திக்கொண்டாள்.

“நாம ஏன் இன்னிக்கு லீவ் தெரியுமா? டீவில பார்த்த நாள் முதல் அந்த புலிக்குட்டிங்களை போய் பாக்கணும் நு ஒரே அடம்! கை உடைஞ்சதோட சின்னவன் ரொம்ப டவுன் ஆயிட்டான். சர்ப்ரைஸ் ஆ அங்க தான் இப்போ கூட்டிட்டு போகப்போறோம்! குழந்தைங்களை அனுப்புடா..நான் கொண்டுவந்து விடறேன்.

வேணாம்..இன்னொரு நாள் நானே... என்று ஆரம்பித்தவன் வாண்டுகள் திரும்பி வர அந்த பேச்சை அப்படியே நிறுத்திக்கொண்டான். பிறகு அந்த டேபிள் முழுவதும் கொஞ்ச நேரம் ஒரே கூச்சலும் கும்மாளமுமாய் தொடர்ந்தது.

@@@@@@@@@@@

கூடை நாற்காலிக்குள் சுருண்டு இருந்தபடி வானத்தை வெறித்துக்கொண்டிருந்தாள் பிரவீனா. அவளது மனதை போலவே நிலவை தொலைத்து விட்டு வானமும் அப்பப்போ மின்னிக்கொண்டிருந்தது. தூக்கம் வராமல் வெகுநேரம் புரண்டு கொண்டிருந்தவள் வெளிப்புறம் வந்து அமர்ந்து கொண்டிருந்தாள்.
பகல் முழுதும் இன்றே அவளுக்கு வேலையற்று போய் விட்டது. ரிக்கியும் விக்கியும் நன்றாக பால் குடிக்க ஆரம்பித்து விட இவள் அந்த சரணாலயம் முழுவதும் சுற்றிக்கொண்டிருந்தாள். மனம் பிரஜித்திடம் குழந்தைகளிடமும் தான் இருந்தது. அதுவும் பிரஜித் அவளோடு கோபமாக இருக்கிறான் என்ற உணர்வே பெரும் தவிப்பாக இருந்தது அவளுக்கு. அவனோடு சண்டையிட்டு வந்தது தவறு தான் என்று அவள் முடிவே கட்டிக்கொண்டிருந்தாள். மறுபடியும் போய் விடலாமா என்று கூட அவள் சிந்தித்தாள் தான் ஆனாலும் மிச்சசொச்சமாய் கிடக்கும் தன்மானம் அவளை தடுத்துக்கொண்டிருந்தது.

பவி விதுவோடு அலைபேசுவாள் தான் தினமும் இருந்தும் அவள் மிஸ் பண்ணுவது அவர்களின் தந்தையை அல்லவா! என்ன இருந்தாலும் அவள் ஊருக்கு திரும்ப வேண்டியவள் தானே.. என்ன செய்யப்போகிறாள் இனிமேல்? இப்படி ஒரு சிக்கலில் போய் மாட்டிக்கொண்டாளே...எண்ணியபடி ஏதோ சிக்கலின் நூல்முனையை தேடுவது போல வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்தாள் பிரவீ...

கண்கள் தாமாகவே அன்று பிரஜித் காட்டிய அந்த இரண்டு பிரகாசமான நட்சத்திரங்களை தேட கண்டு கொண்டவள் வெகு நேரம் அந்த இரண்டு சுருள்களையும் பார்த்துக்கொண்டிருந்தாள். ஒன்று நான் ஒன்று நீ என்று எண்ணிக்கொண்டாயா பிரதீ? பக்கத்திலிருந்தும் உன் மனது புரியாமல் எதிரெதிர் திசையிலே!

அதுவும் வலப்பக்கம் இருந்த நட்சத்திரம் அசையாமல் அவளையே பார்ப்பது போன்றிருக்க அவளையும் அறியாமல் மானசீகமாக அதனோடு பேச ஆரம்பித்து விட்டாள் பிரவீ.

ஏனடி போனே! என்கிட்டே சொல்ல கூட உனக்கு தோணலையா? உனக்காக தானே நான் ஒவ்வொண்ணும் பண்ணினேன். உனக்கு நான் ஒண்ணுமே இல்லையா?

பதில் சொல்டி!!!

பிரஜித்தை நான் ரொம்ப லவ் பண்றேன் பிரதீ! உனக்கு கோவம் வருமா? நீ ஏன் அவனை விட்டுட்டு போனே?

இன்னிக்கு கார்த்திக், சுதனன் வந்தப்போ பவியையும் விதுவையும் பாக்கணும் போலயே இருந்திச்சே... அவங்களை கூட நீ பாக்காம ஏண்டி போனே!

இப்ப நான் என்ன செய்யணும்? எனக்கு புரியலையே...உனக்கு என்ன தோணுது?

“வீணாக்கா! இந்த சாமத்துல வானத்துல என்ன ஆராய்ச்சி பண்ணிட்டிருக்கே” என்று அதட்டியபடி அருகில் வந்து அமர்ந்து கொண்டாள் சுரபி. திடுக்கிட்டு விழித்தவள் பின் சிரித்து சமாளித்தாள்.

போ போ உண்மைல நான் உனக்கு தங்கை! நீ என்னை அக்கானு கூப்பிடறியே!

எல்லாத்தாலயும் பெரியவ நீ. வயசு என்ன வயசு..விட்டுத்தள்ளு என்றவள் ஏன் தூக்கம் வரலையா?காபி ஏதும் போட்டுத்தரட்டுமா? என்று பரிவாக விசாரித்தாள்.

ச்சே ச்சே..சும்மா தான் தூக்கம் வரல சுரபி.
அவளை ஊன்றிப்பார்த்தவள் அதற்கு மேல் வேறு ஏதும் துருவவில்லை!

அதுசரி..யாரவன் ரெண்டு நாளா உன்னை சந்திக்கணும் நு செக்கியூரிட்டி கூட சண்டை போடறான். உன் ஆளா?

அடச்சே வாய கழுவு!

அப்போ கதையை சொல்லு..

ஹா ஹா அவன் என்னை மூணு வருஷம் முன்னாடி கானடா ல பார்த்தானாம். அப்பவே வந்து சொன்னான் நான் மாட்டேன்னு சொல்லிட்டேன். அப்புறம் இவன் ஊருக்கு போனதால கொஞ்ச காலம் நிம்மதியா இருந்தேன் , இப்போ நான் வந்ததும் மறுபடியும் ஆரம்பிக்கிறான். பிரவீ யின் முகத்தில் எரிச்சல் கோடுகள்!
உனக்கு பிடிக்காதா/

ம்ஹ்ம்..எனக்கு அவன் குணம் ஒத்தே போகாது. ஒண்ணா சேர்ந்தா ரெண்டு பேர்ல ஒருத்தர் தற்கொலை பண்ணிப்போம் கண்டிப்பா! ஒண்ணையும் யோசிக்காம பின்னாலே சுத்தறான்! தலை வலிக்குது..
ஷ்..விடு நான் பாத்துக்கிறேன் அவன! இன்னிக்கு எனக்கு ஐஸ் வாங்கி கொடுத்தான்  தெரியுமா?

என்னது??????????????????

உம்.....நான் மப்டில வந்திருக்கற பொம்பளை போலிஸ், யாரை ஒளிஞ்சு நின்னு பார்க்கற னு மிரட்டினேன். ஆள் ரொம்ப பயந்துட்டான். சரி சரி ஐஸ் வாங்கி கொடு னு மிரட்டினேன். சும்மாதான். சட்டுன்னு வாங்கிட்டான் லூசுப்பயல்! கடைக்கார அண்ணாச்சி! என்னம்மா சுரபி, பையனை மிரட்டுறியா? இன்னிக்கு லீவா என்ன? னு கேட்டு எல்லாத்தையும் சொதப்பிட்டார்.

ஹா ஹா ஹா ஹா


தொடர்வேன்!

Tuesday, November 25, 2014

மனோ தைரியம் யாருக்கு அதிகம்? ஆணுக்கா பெண்ணுக்கா?





பெண்மையின் நீயா நானா பகுதியில் நான் முன்வைத்த வாதம் இது! :)


என் தமிழாம் செந்தமிழை வணங்கிக்கொண்டு.... ;) ஹி ஹி ஹி

மனோதைரியம் யாருக்கு அதிகம்?ஆணுக்கா பெண்ணுக்கா இது தான் எங்கள் தலைப்பு!

முதலில் மனோ தைரியம் என்பது என்ன? ஒரு நேர்மையான செயலை செய்து முடிப்பதற்கான உறுதி, வெற்றி அடையும் வரை தொடர்ச்சியான முயற்சியை செய்யக்கூடிய பொறுமை, அந்த செயலின் விளைவை அது நல்லதோ கெட்டதோ, தானே ஏற்றுக்கொள்ளும் பொறுப்புணர்வு இத்தனையையும் இணைத்த கூட்டு இயல்பே மனோ தைரியம்! கெட்ட அழிவுக்குரிய செயலை செய்பவனை/ளை மனோதைரியம் மிகுந்தவனாக /ளாக நாம் குறிப்பிடுவதில்லை.

அடுத்ததாக ஆண் பெண் மனோ தைரியத்தை விஞ்ஞானம் எப்படி பார்க்கிறது? சமீபத்திய விஞ்ஞான ஆய்வு முடிவுகள் ஆண் பெண் இருவருக்கும் விஞ்ஞான ரீதியில் உளவியல் சக்தி சரி சமம் அதாவது மிகக்குறைந்த வேறுபாடுகளே உள்ளன என்பதை தெளிவாக நமக்கு தெரிவிக்கின்றன. அதை யார் அதிகம் பயன்படுத்துகிறார்கள் யாருக்கு அந்த தேவை அதிகம் எழுகிறது என்பதை பொறுத்து அங்கே மனோ தைரியம் வெளிப்படுத்தப்படுகிறது! ஆண்களா பெண்களா அப்படி அந்த சக்தியை வெளிப்படுத்துகிறார்கள் என்று கேட்டால் நான் பெண்கள் பக்கமே! பெண்கள் தான் ஆண்களை விட மனோ தைரியத்தை கற்பனைக்கெட்டாத அளவில் வெளிப்படுத்துகிறார்கள். காரணம் அவர்களே இந்த உலகில் அதிகம் ஒடுக்கப்படுபவர்கள். ஆண்களுக்கு பொதுவாக இந்த உலகம் சாதகமானதே, ஆகவே அவர்கள் மனோ தைரியத்தை வெளிப்படுத்த வேண்டிய தேவை பெண்களை போல எழுவதில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

லேனா எழுதுகிறார் "அவசியமே ஒரு மனிதனுக்கு ஆற்றலை தருகிறது! அகத்தியர் கடலைகுடித்தாக வேண்டிய அவசியம் ஏற்பட்டதால் அவரால் குடிக்க முடிந்தது. நமக்கும் அந்த அவசியம் ஏற்பட்டால் நாமும் குடித்தே தீருவோம்." அவசியம் இல்லாத இடத்தில் நம்மிடம் ஆற்றலோ சக்தியோ வெளிப்படாது. ஆண்களும் அப்படியே!

சமுதாயக்கட்டமைப்பு பெண்களை நிறைய கட்டுப்பாடுகளுக்குள் அடக்கி வைத்திருக்கிறது. ஒவ்வொரு சிறிய சிறிய செயல்களுக்கும் அவள் போராட வேண்டும். ஆப்கானிஸ்தானில் பெண்களை பாருங்கள்! கல்விக்கு கூட உயிர் கொடுக்கும் நிலை பெண்களுக்கு! அங்கிருந்தும் ஒரு மலாலாவுக்கு உலக சமாதானத்துக்கான நோபல் பரிசு கிடைத்தது. 

சில குடும்பங்களில் தான் நினைத்ததை சமைப்பதற்கு கூட சில பெண்களுக்கு மனோ தைரியம் தேவைப்படுகிறது காரணம் அவர்களது குடும்ப அமைப்பு அவர்களுக்கு அவ்வளவு சுதந்திரம் தருவதில்லை. ஆண்கள் அப்படியல்ல மக்களே..இந்த சமுதாய அமைப்பு காலம் காலமாக அவர்களுக்கு கட்டற்ற சுதந்திரத்தை கொடுக்கிறது. ஆண்கள் உயிரைக்கொடுத்து என்ன தான் செய்தாலும் சமூகம் அவர்களுக்கு சாதகமாக தான் இருக்கும் அவர்களின் இடத்தில் ஒரு பெண்ணோடு ஒப்பிடும் போது!

லியாண்டர் பயஸ் உம் கஷ்டப்பட்டார். சானியா மிர்சா வும் உழைத்தார். இருவருக்கும் கிடைத்த விமர்சனங்கள் ஒன்றா மக்களே?அவரின் திறமை அடையாளம் காணப்படும் வரை தான் ஒரு ஆண் இற்கு கஷ்டம் இருக்கும். அதன் பின் உலகம் கொண்டாடும். பெண்ணோ திறமையை நிரூபித்த பின்னும் கூட தீக்குளிக்க வேண்டும்!சானியா  அணியும் உடை கூட கலாசாரக்காவலர்களால் கிண்டல் செய்யப்பட்டது!எத்தனை கல்வீச்சுக்கள்! குணத்தை பற்றிய தவறான பரப்புரைகள், இத்தனையும் தாண்டி சாதிப்பதற்கு அந்த பெண் எவ்வளவு மனத்தைரியம் கொண்டவளாயிருக்க வேண்டும்?

ஆனாலும் இத்தனை விடயங்களும் சாதகமாக இந்த பூமியில் ஆண்களுக்கு இருக்கும் போது ஆண்களின் தற்கொலை விகிதம் பெண்களோடு ஒப்பிடும் போது நான்கு மடங்கு அதிகம் என்று புள்ளிவிபரங்கள் பிட்டு வைக்கின்றன. பழைய காலம் என்றால் ஆண்களின் அதிகமான  பொறுப்பு அழுத்தம் என்று சொல்லலாம். இந்த வருடம் அமெரிக்காவில் இது இருபது மடங்கு என்கிறது உறுதிப்படுத்த படாத புள்ளி விபரம்! ஆகவே ஆண்களின் பொறுப்பு வாதம்  இங்கே அடிப்பட்டு போகிறது! தங்களுக்கு அவ்வளவு தூரம் சாதகமற்ற உலகிலும் பெண்கள் மனோதைரியத்தொடு போராடுகிறார்கள் ஆண்கள் போராட்டத்தை கைவிட்டு விரைவிலேயே வாழ்வை முடித்து கொள்கிறார்கள் என்பதற்கு இதை விட சிறந்த ஆதாரம் எதுவுமே இருக்க முடியாது.

நமது காவியங்களிலும் கூட தமயந்தியை விட்டு ஓடிப்போன நளன் இருக்கிறான். அதே நேரம் மனோ தைரியத்தோடு தீக்குளித்த சீதையும் இருக்கிறாள்.

ஆண்களுக்கு குடும்ப பொறுப்பு அதிகம்.பாரத்தை தூக்கி தோளில் சுமக்கிறார்கள். அழாமல் உணர்ச்சிகளை அடக்கி தைரியமாக இருக்கிறார்கள் என்றெல்லாம் வாதிட முடியும். 
குடும்பத்தலைவன் என்று தன்னை வடிவமைத்தது ஆண், அவன் போய் மூட்டை தூக்கினாலும் அந்த சமுதாயம் எதுவும் சொல்லாது. ஒரு பெண் அதை நினைத்து பார்க்க முடியுமா? உடலியல் மனவியல் என்று அந்த பெண்ணுக்கு எத்தனை கஷ்டம் வரும்? அதையும் தாண்டி சில பெண்கள் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

விதவை தாய் குழந்தையோடு தனியே இருக்கிறாள் என்று வையுங்கள். அதே போல ஒரு தந்தை. இருவரும் குழந்தையை ஊர் மெச்ச வளர்கிறார்கள். இதில் யாருக்கு மனோ தைரியம் அதிகம்? அந்த தாய்க்குத்தானே? எத்தனை கழுகுகள் உடல்பசியில் அவளை சுற்றி வட்டமிட்டிருக்கும்? அவளது ஒவ்வொரு நடத்தையும் ஊரால் அலசப்பட்டிருக்கும்? அத்தனையையும் தாண்டி தான் அவள் அந்த குழந்தையை வளர்க்கிறாள். சந்தர்ப்பங்கள் சாதகமாக இருக்கும் போது அங்கே மனோ தைரியத்துக்கு அவசியம் இல்லை மக்களே. இப்போதைய இந்த உலகில் ஆண்களுக்கான சந்தர்ப்பங்களே சாதகமாக இருக்கிறது. அதனாலேயே ஆயிரம் விண்வெளி வீரர்களில் அரிதாக வரும் கல்பனா சாவ்லாக்கள் கொண்டாடப்படுகிறார்கள்!

குடியை பற்றி பலர் விவாதம் செய்தார்கள், அது இந்த விவாதத்தில் நிச்சயம் கருத்தில் எடுக்கப்படவே முடியாதது. குடி என்பது ஒரு போதை. ஆல்கஹோல் மனிதனின் உடலில் நுழைந்தால் அது அவனை அடிமைப்படுத்தி சுயநினைவை மழுங்க வைத்து சகல நாசங்களுக்கும் உட்படுத்தும். அதற்கு ஆண் பெண் பாகுபாடு கிடையாது. 
எம் நாட்டில் ஆண்கள் அதிகம் வெளியே செல்பவர்கள், அத்தோடு சமூக கட்டுப்பாடுகள் என்பவற்றால் பெண்களுக்கு அது அடையப்படாத பொருளாக இருக்கிறது, ஆண்கள் தொடர்ச்சியாக பயன்படுத்தும் சந்தர்ப்பம் அமைவதால் அடிமையாகிறார்கள். அவ்வளவே. சில மேல் நாடுகளில் ஆண் பெண் இருவருமே சரி சமமாக குடிப்பார்கள். மது எப்போதுமே சமத்துவமாய் தனது வேலையை பெண் உடலிலும் காட்டும்! இங்கே பெண் ஆணை திருத்துவது என்பதெல்லாம் படு முட்டாள் தனமான வாதம். ஏனெனில் மது ஒரு சமூக பிரச்சனை..ஒரு அடிமைத்தனம், மனோ தைரியத்துக்கும் அதற்கும் அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் உள்ள சம்பந்தம் தான்.

கணவன் மதுவின் அடிமை என்றால் அங்கே மனைவி முதலில் அதை நிறுத்த முயல்வாள். அது முடியாவிட்டால் மேல் நாடுகளில் சுலபமாக பிரிந்து போய் விடுவார்கள். நம் நாடுகளில் என்றால் அந்த பெண்ணை வேலியில்லா பயிராக பல எருமைகள் மேய வரும், அதை தவிர எத்தனை பிரச்சனைகள்? அதற்கு அந்த மது அடிமையின் தொல்லையே பரவாயில்லை என்று குடும்பத்திற்காக தாங்கிக்கொள்ள முயல்வார்கள். அது மனோ தைரியத்தின் உச்சம். அங்கே குழந்தைகளின் கல்வி, குடும்ப பாரம், தன் குடும்பத்தின் பாதுகாப்பு பிறகு கணவனின் துன்புறுத்தல்கள் இத்தனையும் ஒருத்தியாய் அவள் தலையில் விழுகிறது. அத்தனையையும் தாங்கிக்கொள்கிறாள். தன்னால் முடிந்தவரை பிள்ளைகளை ஆளாக்குகிறாள். தன்னுயிரை மாய்த்துக்கொண்டாள் என்று நாம் கேள்விப்பட்டதில்லை! இந்த பெண் எந்த வகையில் கல்பனா சாவ்லாவை விட குறைந்து போய் விட்டாள்? அப்பாக்கள் தற்கொலை செய்யலாம். அம்மா தற்கொலை செய்வது மிகக்குறைவு! 

மாறாக தன் விருப்பத்திற்கு மாறாக குழந்தைகள் திருமணம் செய்தாலோ, மனைவி ஓடிப்போனாலோ கடன் அதிகரித்தாலோ அனைவரையும் நடுரோட்டில் விட்டு தான் மட்டும் பிரச்சனையில் இருந்து உயிரை விட்டு தப்பித்துக்கொள்ளும் தந்தைமாரை நாம் கண்டிருக்கிறோம். பெரும்பாலான ஆண்களுக்கு தூணாக ஒரு தாயோ, மனைவியோ, தோழியோ தேவை. தன்னந்தனியாக ஜெயித்த ஆண்கள் இருக்கிறார்கள் ஆனால் மிகக்குறைவு.அப்படி தன்னந்தனியாக போராடும் சந்தர்ப்பங்களும் அவசியமும் கூட  அவர்களுக்கு குறைவே. ஆனால் தன்னந்தனியாக போராடி ஜெயித்த பெண்களை ஒவ்வொரு தசாப்தத்திலும் கண்டு கொண்டு தான் இருக்கிறோம். 

சின்ன விஷயத்தையும் பெரிது படுத்துகிறார்கள். புரணி பேசுகிறார்கள் என்று குற்றம் சுமத்தாதீர்கள்! நீங்கள் அப்படி இருக்கிறீர்களா? நானுமப்படி இல்லை. இருக்கிறார்கள் தான் ஆனாலும் அதையும் மீறி அவர்கள் சாதனை அதிகமாக இருக்கிறது. கூனி ராமாயணத்தில் என்றால் சகுனி மகா பாரதத்தில்!

அழுகிறார்கள் என்பது அவர்கள் குற்றமல்ல, உணர்வுகள் லிம்பிக் பிரைன் ஆல் ஆளப்படுவது! அதை பெண்களுக்கு பெரிதாகவும் அடிக்கடி அவர்களின் சிந்தனை பகுதியோடு அதை இடையிடுமாறும் படைத்த கடவுளின் குற்றம். ஆண்கள் ஏன் அந்த அளவுக்கு அழவில்லை அடக்கி கொள்கிறார்கள் என்றால் அவர்களின் நினைவுகள் பெண்கள் அளவுக்கு உணர முடியாது. இது ஒரு சாதனை குணமா மக்களே? சமமாக இருந்து தைரியத்தோடு அடக்கிகொள்கிறார்கள் என்றால் சரி நீ தைரியம் மிக்கவன் என்று நான் ஒத்துக்கொள்வேன். அவர்களால் அந்த அளவுக்கு உணரவும் முடியாது ஆனால் அதிகம் உணர்ந்தவர்கள் போல தற்கொலையையும் அதிகம் செய்கிறார்கள். இது ஒன்றே போதும் ஆண்களின் மனதைரியத்தை சொல்ல!

ஆகவே இறுதியாக விஞ்ஞானம் ஆண் பெண் இருவருக்கும் மனோ சக்தி சமம் என்று சொன்னாலும் ஆண்களுக்கு மனோதைரியத்தின் உச்ச அளவை வெளிப்படுத்த அவசியம் இல்லை எனவும் அப்படியே ஏற்பட்டாலும் அவர்களின் தற்கொலை வீதங்கள் ஏனோ அதை அவர்கள் உச்ச அளவுக்கு பயன் படுத்துவது இல்லை எனவும் தான் காட்டுகின்றன.

ஆனால் பெண்ணுக்கோ இப்போதைய சூழல் சின்ன சின்ன சாதனைகளுக்கு கூட ஏகப்பட்ட மனோ தைரியம் தேவை என விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் பெண்களின் சாதனை வீதம் தேங்கி நிற்கவில்லை. பல்வேறு துறைகளிலும் அவர்கள் சாதித்து கொண்டே செல்கிறார்கள்! மனோ தைரியத்தை ஒப்பிடும் சூழலையும் சமூக கட்டுக்களையும் கவனத்தில் கொள்ளுமாறு தயையுடன் கேட்டுக்கொண்டு மனோதைரியம் பெண்ணாலேயே அதிகம் வெளிக்காட்டப்படுகிறது என்று அடித்து கூறி இத்துடன் முடித்துக்கொள்கிறேன்! ;)