Saturday, February 9, 2013

விஸ்வரூபம்







சமீப நாட்களில் மிக அதிகமாக பேசப்பட்ட சொற்களில் ஒன்று. அதுவும் வெளியிட்ட படத்தை நிறுத்திவிட்டு ப்ரோமோஷன் செய்தார்கள் பாருங்கள்.கிளாஸ்! அப்பிடிப்பட்ட படத்தை பார்க்க எங்களுக்கெல்லாம் ஆசை வராதா என்ன? அதுவும் நான் விரும்பி படிக்கும் பதிவர்கள் எல்லாம் படம் பார்த்து பாசிடிவ் விமர்சனம் குடுத்ததுமில்லாம படம் பார்க்க போன கதையையே part 1, 2 என்று எழுதி தள்ளுகிறார்கள் எப்பிடிப்பட்ட படமாய் இருக்கும்! படத்தை தியட்டர்ல தான் பாக்கோணும் எண்டு டிசைட் பண்ணி தம்பிட்ட வேற கேட்டு வச்சாச்சு. ஆனா நடந்தது என்ன? ஆனானப்பட்ட இந்தியாவிலேயே படத்தை போட்டுட்டாங்கள், எங்களுக்கு இன்னுமே தடை எடுத்த பாடு இல்லை. தம்பி ஒரு கிழமைக்கு முதல் எங்கேயோ இருந்து CD வாங்கிட்டு வந்தான். நானும் ஒரு கெத்தா நாங்க கமல் விசிறிகள் தியட்டர்ல தான் படம் பாப்போம் எண்டு அறிக்கை விட்டு விட்டேன். தம்பி ஒரு பார்வை பாத்து விட்டு கேட்டான் “அக்கா நீர் எத்தனை படம் தியட்டர்ல பாத்தனீர்?”. சமாளிச்சிட்டன். அவன் கேட்டதில அர்த்தம் இருக்குது. யாழ்ப்பாணத்திலை இருந்த காலத்தில தியட்டர்ல ரெண்டு படம் தான் பாத்தனான். அதுவும் அப்பா எங்களுக்கு தியட்டர் காட்ட கூடி கொண்டு போனவர் ! ஜீன்ஸ் படம் எண்டு நினைக்கிறன், அதுக்கு பிறகு நானும் அப்பாவும் படையப்பா பார்க்கும் ஆர்வக்கோளாரில் ரெண்டாம் நாள் தியட்டர் போய் வந்த சனம் தள்ளி கொண்டு போய் விட கலரிக்கும் முன்னால தான் இடம் கிடைச்சுது எங்களுக்கு. ரஜனி ஏன் வளைஞ்சு வளைஞ்சு நடிக்கிறார் என கொஞ்ச நேரம் புரியவேயில்லை! அப்பா தான் சொன்னார் முன்னுக்கு இருந்ததால தான் அப்பிடி தெரியுது எண்டு! ஒரு வழியா தியட்டர் விட்டு வெழிய வந்த நானும் அப்பாவும் அதுக்கு பிறகு தியட்டர் போகும் விஷப்பரீட்சையை செய்யவேயில்லை!
அதுக்குபிறகு A/L படிக்கும் போதும் நண்பிகளோடு போறதுக்கு எல்லாம் எங்கட வீட்டில விட மாட்டாங்க. அப்பிடியே போறதெண்டாலும் படம் தியட்டர விட்டு போக கொஞ்ச நாள் முதல் தான் பெண்கள் போக முடியும் இல்லாட்டி தேவையில்லாத வம்புகள் பின்னாலேயே வரும் எண்டு எண்ட நண்பிகள் சொல்வதுண்டு. பெடியனா ஏன் பிறக்கேல்லை என்று அடிக்கடி நான் கவலைப்படும் விஷயம் இது. பிறகு கம்பஸ் எண்டு பேராதெனிய போன பிறகு நண்பிகளோட மாற்றான் பாக்க போனம் படம் ரிலீஸ் ஆகி கிட்டத்தட்ட ஒரு மாசத்துக்கு பிறகு! அதுவோ மக்சிமம் மொக்க படமா போக தியட்டர் எண்டாலே கடுப்பாயிடுவன். விஸ்வரூபம் பற்றி சொல்ல வந்து நான் எங்கயோ போயிட்டன். தம்பி வேணுமெண்டே சத்தத்தை கூட்டி வச்சு பாத்துக்கொண்டிருந்தான். படம் முடிய ஆஹா ஓஹோ என்று புளுஹி படம் வந்ததும் முதல் ஷோ பாக்கப்போறதா சொல்லி அறிக்கை விட்டு கடுப்பேத்திகொண்டிருந்தான். என்னாலையும் இருக்க முடியலை என்ன செய்றது வாயை விட்டு விட்டனே! அவன் கொழும்புக்கு போனதும் ஓடிப்போய் அந்த CDயை  தேடினன் பாவி, எங்கயோ ஒளிச்சு வைத்துவிட்டான். ஒரு மாதிரி அவனிட்ட சாட்டர் ஆகி அவன்ட pen driveல இருந்து எடுத்தன். ஒரு CD யை எடுத்ததுக்கா இவளவு பில்ட் அப் என்கிறீர்களா? எல்லாரும் தியட்டருக்கு போகும்போது பெட்ரோல் அடித்தது கூட விமர்சனத்தில எழுதியிருக்காங்க. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கஷ்டம்!!!
முதல்லயே சொல்றன் நான் கமல் விசிறி. அப்பா மனுஷன் எப்பிடி நடிச்சிருக்கார்! அந்த விஸ்வநாதன் கரக்டர்! நடை, பொடி லாங்குவேஜ் கலக்கிட்டாரப்பா. அதோட எங்கட தலைவி அண்ட்ரியா வேற இருக்கிறாங்களே. உன்னை காணாத பாடலின் நடுவில வருமே அந்த குகிங் சீன். வாவ்! பிறகு சடன் ட்ரான்ஸ்பர்மேஷன், ஆப்கானிஸ்தானில் இறுக்கமான smartness! பிறகு வரும் அமெரிக்க சீனில் கொஞ்சம் தசாவதாரத்தை ஞாபகப்படுத்தியது என்றாலும் வாய் மூடாமல் ரசித்து கொண்டிருந்தேன். வசனங்களை கேட்பதற்காகவே இன்னொரு தரம் பார்த்தேன்!

அண்ட்ரியா சொல்லவே தேவையில்லை. என்னவொரு smartness! அந்த இன்வெஸ்டிகேஷன் சீன், அவர் அமர்ந்திருந்த விதம்,சான்சே இல்லை. அந்த “come again!!!” டயலாக் எனது favourite! பூஜா குமார் இயல்பா இருந்தாங்க. சில இடங்கள் பிடிக்க வில்லை. அவருடைய invetigation சீனும் அழகு!
தொழிநுட்ப விடயங்களை விமர்சிக்கும் அளவு எனக்கு ஞானம் கிடையாது. அனால் ஆங்கில படங்களில் பார்ப்பது போன்ற இயல்பு தன்மை மற்றும் பிரமாண்டம் படத்தில் இருந்ததாக பாமரன் எனக்கு தோன்றியது. கட்டாயம் தியட்டரில் பார்க்க வேண்டும். வழக்கமான காதல், செண்டிமெண்ட் இல்லாத ஒரு தரமான முயற்சி. குறை கண்டு பிடிப்பதை விடுத்து ஆக்கபூர்வமான விமர்சனங்களோடு வரவேற்கலாமே! தமிழுக்கு இன்னும் தரமான முயற்சிகள் கிடைக்குமே! இலங்கை தமிழர் எங்களை எடுத்து கொள்ளுங்கள், எங்கள் பிரச்னையை எத்தனை பேர் புரிந்து கொண்டார்கள்? சரியாக எங்களை யார் காட்டியிருக்கிறார்கள்? பெரும்பாலும் நாம் அவமானப்படுத்தப்பட்டதாகவே நினைக்கிறேன். எங்களுக்குள்ளையே சரியான புரிதல் இல்லையெனும்போது கலைஞர்களை குற்றம் சொல்ல முடியுமா? சினிமாவில் இதெல்லாம் சகஜமப்பா!
என்னை பொறுத்தவரை தமிழனாக எனக்கு பெருமைப்பட முடிந்தது. தியட்டர்லயிருந்து வரும் போது நாங்கள் இப்படிப்பட்ட படங்களை தான் எடுக்கிறோம் , பார்க்கிறோம் என்று சகோதர மொழிக்காரர்களுக்கு கலர்ஸ் காட்டுவதற்காகவே தியட்டர் போக போகிறேன்! ரிலீஸ் ஆனால்!

No comments:

Post a Comment