Monday, February 24, 2014

காதலர் தினம்!





என்னவருக்கு!



இதுவரை காதல் என்று தலைப்பு கொடுத்தால் அடுத்த நிமிடமே மூன்று பக்கங்கள் எழுதிதள்ளும் நான் மூன்று நாட்களாய் ஒற்றை சொல்லும் எழுதாமல் விழித்துக்கொண்டிருக்கிறேன் என்பதே எனக்கும் காதல் வந்திருக்கிறது என்று எனக்கு உணர்த்தியது!
நீ நானாக தெரிந்தெடுத்தவனில்லை.
என் தந்தை தந்த பரிசு!
பதட்டத்தோடு தான் பிரித்துப்பார்த்தேன்!
ஒவ்வாமைகளின் எண்ணிக்கை கண்டு அதிர்ந்து நின்றேன்!
கண்ணீர் குளத்தில் முழுகிக்கொண்டிருந்தேன்!


ஒற்றை கையாலும் நான் நீந்த முயலவில்லை. ஒவ்வொரு அசைவையும் எனக்காய் நீயே அசைத்தாய்! உயிர் கொடுத்தாய், நமக்கு முகம் ஏதோ புகையில் செய்த ஓவியமாய் தான் நினைவிருந்தது. குரல்கள் மட்டும் தான் எங்கள் உறவு வீணைக்கு நாதம் இசைத்தன!
காதல் யார் மீதும் வரலாம்!
எப்படியும் வரலாம்!
முகமோ தோற்றமோ அவசியமில்லை!
உன்னுடையது என்ற உணர்வு தோன்றி விட்டால்
மீதியை காதல் பார்த்துக்கொள்ளும்!

தொலைபேசி வழியாய் ஒவ்வொரு நாளும் நமக்குள்ள முரண்பாடுகளையும் மீறி எனக்குள் நீ வந்து கொண்டிருந்தாய்! காதல் பக்கங்கள் என்னுள் வெறுமைஎன்று நண்பிகளால் கிண்டல் செய்யப்பட்ட நான் உன் குரல் கேட்க ஒவ்வொரு நாளையும் செலவு செய்து கொண்டிருந்தேன்! காலை எழுந்ததும் நீ முதல் நாளிரவு பேசிய பேச்சுக்களை எண்ணி உதட்டில் சிரிப்புடன் அலுவலகம் செல்வதும் அங்கே உன் அதட்டலுக்காயே வேளா வேளைக்கு உணவுண்பதும் உன் குறுஞ்செய்திகளை படித்துக்கொண்டு கவனமின்றி இருந்துவிட்டு பறந்தடித்து வீடு வந்து கைபேசி முன் தவம் கிடப்பதுமாய் எப்படி நான் மாறிப்போனேன்! சிலசமயம் அலாரம் வைத்து குட் மார்னிங் குறுஞ்செய்தி டைப்பி விட்டு மறுபடியும் தூங்கியதும் நடந்தது. நாளின் பிறப்பே இரவில் கேட்கும் உன் குரலுக்காய் தான் என்பது எழுதா விதியானது! என் பொழுதுபோக்குகள், எழுத்து, கல்வி அத்தனையையும் புறம் தள்ளி நீயும் உன் சார்ந்த நினைவுகளும் மட்டும் போதுமாயின! இத்தனை மாற்றத்தையும் உன் வெறும் குரல் தான் செய்தது! உன் முகம் எனக்கு தேவைப்படவே இல்லை!
உன் உலகத்தை தலைகீழாய் புரட்டிப்போட்டு விட்டு
காலாட்டி அமர்ந்து ஐஸ்க்ரீம் சாப்பிட காதலால் தான் முடியும்!
நீயும் ஒத்துழைப்பாய்!

சில சமயங்களில் உனக்கு அதிகம் வேலையாகும், நள்ளிரவில் உன் களைத்த குரல் கேட்டு தூங்க சொல்லிவிட்டு வீணாய்ப்போன அந்த நாளை எண்ணி தூங்காமல் விழித்திருப்பேன் நான். நீயே சொல்வது போல் நான் ஒரு மௌன ராகம் தான்! உணர்வுகளை வெளிப்படுத்த தெரியாத ஊமை, தொலைபேசியை அணைக்காமல் என்னோடு பேசு என்று சண்டையிட்டிருந்தால் நீ மகிழ்வாய் என்பது புரியாமல் போனது! உன் தூக்கம் கெடுமே என்று உனக்காய் பார்த்துக்கொண்டிருந்தேன்! 
நீ என்னை பார்க்க வருகிறேன் என்று சொல்லி முடியாமல் போனதுக்காய் வருத்தமாய் பேசுவாய், என் ஏமாற்றத்தை மறைத்துக்கொண்டு உனக்கு ஆறுதல் சொல்வேன்! எனக்கு கொஞ்சமும் வருத்தம் இல்லையென்று நீ ஊடல் கொண்டாய்! 
காதலுக்கும் தாய்மைக்கும் வித்யாசம் அன்று புரிந்தது!
உரிமை கோருவது!

தலையே போனாலும் நீ எனக்கு இதை செய்து தான் ஆகவேண்டும் என்று துணையின் தொல்லை கூட உதட்டில் சிரிப்பையும் பரவசத்தையும் தருவது காதலில் மட்டும் தான்!

துணையின் மேல் உரிமை கொண்டாடுவதும் உரிமை எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் காதலுக்கே உரியது!

உனக்காய் பார்க்காமல் எனக்கு வேண்டியதை அடம் பிடித்து பெற்றுக்கொள்ள நீ அன்று கற்றுத்தந்தாய்!


கடைத்தெருவில் எனக்கு என்று வாங்கும் போது கண்ணில் படும் விலைப்பட்டியல் உனக்கு வாங்கும் போது மட்டும் கண்ணில் படுவதில்லையே! என்னால் முடிந்த சிறந்ததைஎல்லாம் உனக்கு தந்து விட வேண்டும் என்ற உணர்வும் காதலல்லவா? குழந்தை கெட்டுவிடும் என்று பெற்றோர் கூட கண்டிப்பு காட்டுவார்கள்! காதல் தான் கேட்காததையும் செய்யும்! சீதை கேட்டதற்காய் ராமன் மானின் பின்னே போகவில்லையா? 


காதல் என்பது முழுக்க முழுக்க கொடுப்பது!
அது எவ்வளவு தூரம் திரும்பி வருகிறது என்பது துணையை பொறுத்தது!
கடுகே கிடைத்தாலும் அதை மலையாய் எண்ணி மகிழ்ந்து போவதும்
காதலில் தானே சாத்தியம்! 


காலையில் இருந்து மாலை வரை நடந்ததையெல்லாம் உன்னிடம் ஒப்புவிக்கிறேன்! தொலைவில் இருந்தாலும் உன்னோடு வாழ்க்கையை பகிர்ந்து கொள்ளும் எண்ணத்தில்! கடுகளவு மனகசப்பு யாருடனாவது வந்துவிட்டால் பூவென ஊதிச்செல்பவளுக்கு உன்னிடம் ஒப்புவிக்கும்போது மட்டும் அதெல்லாம் மலையளவு மாறி கண்ணீரையும் கொண்டு வந்து விடுகிறதே! நீலிக்கண்ணீர் தான்! அப்போது தானே நீ பதறி அழாதே செல்லம் வெல்லம் என்றெல்லாம் ஆறுதல் சொல்வாய்! காதல் திருட்டுத்தனமானது!


நீ திட்டுவாய் என்று தெரிந்தும் பிடிக்காததை செய்து விட்டு நீ திட்டும் போதும் ஆனந்தமாய் கேட்டுக்கொள்கிறேன்! உன்னிடம் திட்டு வாங்குவது ஏதோ விருது வாங்குவது போலல்லவா இனிக்கிறது!

உயிர் நண்பியிடம் கூட பலவீன தருணங்களை மறைத்து இரும்பு போல் நிற்பவள் அனைத்தையும் உன்னிடம் ஒப்புவித்து பூனைக்குட்டியாய் உன் முகம் பார்த்து நிற்கின்றேன்!

குழந்தை போல என்று யாரும் சொன்னால் புலிபோல் சிலிர்த்துக்கொள்பவள் சொல்பவன் நீ என்றால் அப்படியே மகிழ்ந்து போய் மானசீகமாய் ஓடிவந்து உன் மடியில் படுத்துக்கொள்கிறேன்!


நீ நீயாய் இருக்க முடிவது காதலில் தான் சாத்தியம்!
உன் முழு பலவீனங்களையும் அறிந்து தாங்குவதும் காதல் தான்!
ஆரம்ப படிகளில் ஈகோ இருக்கலாம்,
இறுக இறுக சுவடற்று உதிர்ந்து விடும்!
காதல் என்று கேட்டதும் நீ கற்றுத்தந்த காதலை பற்றித்தான் நான் இவ்வளவு நேரம் பேசினேன்! நீ என்னை பற்றி என்ன நினைக்கிறாயோ உணர்கிறாயோ எனக்குத்தெரியாது! எனக்கு புரிந்ததெல்லாம் நான் உன்னை காதலிக்கிறேன்! உலகத்தில் காதலின் வரலாறோ யார் யாருக்கு என்ன செய்தார்கள் என்றோ எனக்குக்கவலையில்லை! இது என் காதல்! எனக்கு மட்டுமே சொந்தமான காதல்! என்னிடம் உனக்காய் பிறந்த எனது காதல்! நீ கூட தலையிடமுடியாத நேசம்! எனது காதலை வேறு யாருடனும் ஒப்பிடக்கூட எனக்கு பிடிக்கவில்லை! கைரேகை எப்படி தனித்துவமோ காதலும் தனித்துவமானது! என் காதலை என் உணர்வுகளை நீங்கள் உணர முடியாது! அது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் தனித்துவமானது! பரவசம் மட்டும் தான் பொதுவானது! என்னை விட என் காதலை யாரும் அதிகமாய் காதலிக்க முடியாது!

வன்முறையாய் பேசுகிறேனா???
இதுவும் காதல் தான் எனக்கு கற்றுத்தந்தது!
இந்த நிமிர்வும் பெருமையும்!
ஒவ்வொருத்தனையும் ஒவ்வொருத்தியையும்
எந்த ஒப்பீடும் இன்றி
நாயகர்களாக்கும் உன்னத தயாரிப்பாளர் காதல்!

இறுதியாய் சொல்கிறேன்! என் எண்ணங்கள் ஆசைகள் அத்தனையும் விட்டு உன்னை மட்டுமே முதன்மை ஆக்கிக்கொண்டிருக்கிறேன்! என் இறுதிவிழி மூடும் வரை உன் முகத்தில் ஒரு சிணுக்கம் கூட இன்றி நெஞ்சத்தில் பொத்தி வைத்து காக்க நினைக்கிறேன்! பதிலாக எனக்கு உன் நெஞ்சத்தின் ஓரத்தில் கொஞ்சமாய் நேசம் போதும்!

என் பிறந்த நாளை மறந்து விட்டாயா? போடா எருமை என்று திட்டிவிட்டு போய்விடுவேன்! யாரும் சொன்னதற்காய் வைரமோதிரம் வாங்காதே! என்னால் தாங்கிக்கொள்ள முடியாது! 


எனக்கான ஒவ்வொன்றும் உன்னிடமிருந்து மட்டுமே வரவேண்டும்!
நீயாய் உணர்ந்து செய்ய வேண்டும்!
கடுகத்தனை இருந்தாலும் மலையென மகிழ்ந்து போவேன்!
மொத்தத்தில் நீ என்னிடம் நீயாய் இரு....
அது போதும்!


-உன் காதலி

No comments:

Post a Comment