Sunday, May 11, 2014





4


அபி!!!!

லேப்டாப் திரையில் கண்ணீருடன் விழிகளை பதித்திருந்த அபி திடுக்கிட்டு நிமிர்ந்தாள்.

ஜூலியன் பின் தொடர அனந்தன் தான் வந்துகொண்டிருந்தான் அவசரமாய் கைகள் மேலேறி கண்களை துடைத்துக்கொள்ள சகஜமாய் முகத்தை வைத்துக்கொள்ள முயன்றாள் அவள். அவன் பார்வை அவள் முகத்தில் ஒருநிமிடம் கூர்மை பெற்று விலகியதோ? பார்த்தானோ???

அழுகிறாயா என்ன???

ச்சே... நிறைய நேரமாக இதைப்பார்த்துக்கொண்டே இருக்கிறேனா?? அதுதான் லேசாய் கண் கலங்கிவிட்டது..

பொய் சொல்லாதே நீ அழுதாய்!

சரி!!! எதுக்கு நான் அழணும்??? அதை சொல்லுங்க!!!

ஏன் நாளைக்காலைல நான் போய்டுவேனே அதுக்கு!!

அடிங்க்க்க்....நினைப்புத்தான்!!!

ஐ ஐ..அதோ கண்ணு கலங்குது! கண்ணீர் வரப்போவுது... வரப்போவுது ஒன் டூ த்ரீ அழும்மா.........அவள் முகத்துக்கு மிக அருகில் வந்து கண்களையே உற்றுப்பார்த்தவண்ணம் குழந்தையாய் முகத்தை வைத்துக்கொண்டு அனந்தன் ஆரம்பித்தான்.

கமோன் அபி ஸ்டார்ட் க்ரையிங்!!

லேசாய் இருந்த கண்ணீரும் கண்ணோடு மாயமாய் விட பொங்கிச்சிரிக்க ஆரம்பித்தாள் அபி!

ப்ளீஸ் அனந்தன்!!!!

அனந்தா உனக்கு கொடுத்து வைத்தது அவ்ளோ தான்! போலியாய் முகத்தில் சோகபாவனையை தத்தெடுத்த வண்ணம் அங்கிருந்து அகன்றான் அவன்!

அவனின் பின்புறத்தோற்றத்தை இன்னும் அடங்காத சிரிப்புடன் பார்த்திருந்த அபிக்கு எதையோ கேட்கவந்தானே என்ற எண்ணம் வந்ததும் மீண்டும் சிரிப்பு பலமானது.

இன்று முழுதும் சமையலறைக்குள் கும்மாளமிட்டவன் அவளை உள்ளேயே விடவில்லை! பிறகு வீட்டை ரசனையுடன் ஒழுங்கமைத்து எப்போதும் எதையோ செய்துகொண்டே இருந்தான். இவள் அருகில் போன நேரமெல்லாம் கலாய்த்து சிரிப்பு மூட்டி இவ்வளவு உற்சாகத்துடன் ஒருவன் இருக்க முடியுமா என்று அவளை ஏங்க வைத்தான்! சரிதான் போடா என்று அவள் முன்புறம் சோபாவில் வந்து அமர்ந்து விட ஐந்து நிமிடத்துக்கொரு தடவை அது எங்கே இது எங்கே என்று சாட்டுச்சொல்லியபடி அவளிடம் வந்து கொண்டே இருந்தான். ஐந்து நிமிடம் தொடர்ந்து அவளை விட்டு பார்வையை விலக்க அவன் பிரயத்தனப்படுவது அவளுக்கும் புரிந்தே இருந்தது! நமுட்டுச்சிரிப்புடன் அவள் பார்த்துக்கொண்டே இருந்தாள்!

அவள் மட்டும் என்னவாம்! ஏதோ காலகாலமாய் பழகியவன் போல அல்லவா அவனுடன் பழகுகிறாள்! அவன் குறும்பு சிரிப்பு அழகு உதவும் குணம் நடவடிக்கைகள், பொது அறிவு ஒவ்வொன்றும் அவளை ஆகர்ஷிக்கின்றனவே! வராத புயலுக்காய் அவனை அவளோடு தங்க வைத்த இறைவன் வாழ்க!! நாளைக்காலை அவன் புறப்பட்டுபோய்விடுவான் என்ற எண்ணம் வர இதயம் வெறுமையானது போலானது அபிக்கு!

அபி டைகருக்கு பசிக்கிதாம்!!!

முடியல உங்க ரெண்டு பேர் தொல்லையும்! என்று செல்லமாய் சலித்துக்கொண்டு எழுந்து சமையலறை நோக்கி நடந்தாள் அபி. எதற்காகவோ அழ ஆரம்பித்தவளுக்கு அந்த எண்ணமே மறந்து போயிருந்தது!

**************


வெளிச்சக்கீற்றுக்கள் கண்ணை உறுத்த லேசாய் கண்ணைக்கசக்கியபடி எழுந்து அமர்ந்த அபி திடுக்கிட்டாள். 

மதிய நேரம் போல வெளிச்சம் இருந்தது! வெளியே பனித்தூறலும் நின்று போயிருந்தது! புயல் வரவே இல்லை! 

இவ்வளவு நேரம் அவளை எழுப்பாமல் அனந்தன் என்ன செய்கிறான். ஒற்றை புறமாய் எழுந்த லேசான தலைவலியை பொருட்படுத்தாது கட்டிலில் இருந்து இறங்கினாள்.

அனந்தன்!!!!!!!!

மதியம் பதினோரு மணி என கடிகாரம் காட்ட வீட்டில் ஒரு அசாதாரண வெறுமை தெரிந்தது! வீடு சுத்தம் செய்யப்பட்டு பூக்களுடன் இருக்க சமையலறை மேசையில் காலை உணவு மூடி வைக்கப்பட்டிருந்தது! ஜூலியன் லேசாய் திறந்திருந்த வாசல் கதவில் தலைவைத்து சோகமாய் சாய்ந்திருந்தது இவளைக்கண்டதும் எழுந்தோடி வந்தது!

ஏதோ ஒன்று ஹோ வென இதயத்துள் அடைத்துக்கொண்டது! போய் விட்டானா?? ஒருவார்த்தை கூட சொல்லாமல்! கண்கள் பொங்கி நீரை கன்னங்கள் வழியே பாய்ச்ச ஆரம்பிக்க அப்படியே மடிந்து தரையில் மடிந்து அமர்ந்தவள் கைகளால் ஜூலியனின் தலையை தடவ ஆரம்பித்தாள்

அழுகையில் துடித்த உதடுகள் மறுபடி மறுபடி போய்ட்டான்என்று முணுமுணுக்க வாய் விட்டு அழ ஆரம்பித்தாள் அபி. 

நேற்று முழுதும் அவன் கண்களிலும் செய்கையிலும் கண்டதெல்லாம் கானல் நீரா??

மேஜையில் இருந்த காகிதம் ஒன்று வெறும் நன்றி என்ற சொல்லோடு அவன் கையெழுத்தை தாங்கி நிற்க அழுகையோடு சுக்கல் சுக்கலாய் கிழித்தெறிந்தவள் அப்படியே நிலத்தில் படுத்துக்கொண்டாள்.

பல் கூட விளக்காமல் ஜூலியனை அணைத்தபடி குளிர் பிடுங்கும் வெறும் நிலத்தில் எவ்வளவு நேரம் கிடந்தாளோ தெரியவில்லை, கண்ணீரும் நிற்கவில்லை.

எதுதான் அவளுக்கு நிலைத்திருக்கிறது? அம்மா, அப்பா, இப்போது இவன்!!....

சரி காதல் கண்றாவி எதுவும் இல்லை என்றாலும் முகத்தை பார்த்து சொல்ல முடியாத அளவுக்கு முக்கியத்துவம் இல்லாதவளாய் போய்விட்டேனா???? கழிவிரக்கம் பொங்கினாலும் அப்படியே வாடிக்கிடந்தால் அவள் அபி இல்லையே! எழுந்து போய்வெகுநேரம் ஷவரடியில் நின்று சுத்தமாக குளித்தாள்! பயங்கர பசி இப்போதுதான் உணர முடிந்தது! அவன் மூடிவைத்திருந்த உணவை திறந்து பார்த்தாள்! 

வெஜிடபிள் புலாவ்!!! அழுது முடித்து மதியம் தான் எழுவாள் என்று எண்ணினானோ??? அவ்வளவிற்காவது கரிசனம் கொண்டிருக்கிறான். இகழ்ச்சிப்புன்னகையோடு அவ்வளவு உணவையும் தின்று தீர்த்தாள்! உணவை எடுத்துக்கொண்டு ஜூலியனிடம் போக அதுவோ சாப்பாடு வேண்டாம் என்று போய் படுத்துக்கொண்டது!

டேய் யாரோ எவனோ வந்தான், போய்ட்டான்! அதுக்கேன் நீ சாப்டாம இருக்கே???

சொல்லிட்டேன்! டேஸ்டா பண்ணி வச்சிருக்கான்! இன்னிக்கு விட்டா உன்னால ரொம்ப நாளைக்கு இப்டி சாப்ட முடியாது!

அவன் எதற்கும் அசையாமல் சோக முகம் காட்டிக்கொண்டிருக்க தன் இயலாமையும் சேர்ந்து சாப்பிட்டா சாப்பிடு வேணாட்டி போ!என்று கோபமாகி தட்டை ஜூலியனின் முன் வைத்துவிட்டு ஹாலுக்கு போனவள் மதிய வெந்நீர்க்குளியலும் அளவுக்கு மீறிய உணவும் கண்களை சுழற்ற கதவை தாழிட்டு விட்டு போய் கட்டிலில் விழுந்தாள். மறுபடி அவள் கண்விழிக்க நேரம் மாலை ஆறு மணி!

ஜூலியனின் தட்டில் இப்போது உணவு காலியாகியிருக்க மெல்லிய சிரிப்போடு மறுபடியும் குளித்து விட்டு வந்தவளின் மனம் இப்போது ஓரளவுக்கு அமைதிப்பட்டிருந்தது. வீட்டை கூட்டி அடுக்கி சின்னதாய் தனக்கும் ஜூலியனுக்கும் சமையல் செய்து விட்டு பசி இல்லாததால் ஹால் சோபாவில் விழுந்து லேப்டாப்பில் செய்தி வாசிக்க ஆரம்பித்தாள் அபி!

மேலோட்டமாய் கிடந்த செய்திகளை பார்த்து இகழ்ச்சி சிரிப்புடன் மெல்லக்கடந்தாள்.

SAS
கம்பனி இனி முற்று முழுதாக AS நண்பர்களின் இன் கைகளில்!

Giant S
தனக்குப்பின் சொத்துக்களை யாருக்கும் வழங்காததாலும் மனநிலை பாதிக்கப்பட்ட மகள் அபிநயா தலைமறைவு ஆனதாலும் கோர்ட் தற்காலிகமாய் அனைத்து அதிகாரங்களையும் AS நண்பர்களுக்கு வழங்கியுள்ளது!

அன்னையின் வழியிலே அபிநயா தற்கொலை????? giant S குடும்பத்தை பீடிக்கும் துயரம்!

இகழ்ச்சிப்புன்னகை மாறாமலே கடந்து போனவள் கீழிருந்த செய்தியை கண்டதும் இடி தாக்கினாற்போல அதிர்ந்து நின்றாள்! கண்களை கசக்கிக்கொண்டு பார்த்தாலும் உண்மை மறைந்து விடுமா???

இதுவரை தொழிலில் பங்கெடுக்காமல் புகைப்படத்துறையில் ஈடுபாடு கொண்டிருந்த AS நண்பர்களின் ஒரே ஆண் வாரிசு செல்வா வந்து வியாபாரத்தில் பங்கு கொள்வார் என்று கம்பனி வட்டாரத்தில் பரபரப்பு செய்தி! செல்வா இரண்டு நாட்களின் முன் நாடு திரும்பியபோது என்ற குறிப்போடு வெகுவேகமாய் கடந்து செல்பவன் போல புகைப்படத்தில் இருந்தவன் அனந்தன்!!!!!!

பாவி!!! துரோகி!!! இவனா???? அழக்கூடத்தோன்றாமல் அபியின் உலகமே ஸ்தம்பித்திருக்க வெகு வேகமாய் சிந்தனைகள அவளுக்குள் சுழல மனமோ செய்தியை கவனமாய் ஆராய்ந்தது.

செல்வாவை அவளுக்கு எட்டு வயதிருக்கும் போது தெரியும்! அவளது கொஞ்சம் பெரிய விளையாட்டுத்தோழன்! உயிராய் இருப்பாள் அப்போது! அவனது பன்னிரண்டாவது வயதில் அடம்பிடித்து தாய்வழி தாத்தாவிடம் வெளிநாடு சென்று விட்டான். பிறகு தொடர்பே இல்லை! அவனது உண்மைப்பெயர் அனந்தன் தான்! எப்படி மறந்தாள்??? பார்த்திருக்கிறேன் என்று தான் மனம் சொல்லியதே!!!

பிறகு அவள் சாகசங்களில் ஆர்வம் கொண்டு அட்வெஞ்சரஸ் குரூப்பில் சேர்ந்து விட்டதன் பின் அவளுக்கு வெளியுலக தொடர்பே மறந்து போனதே! தந்தையை காண்பதே அரிது அதில் இவனை பற்றிய விபரங்களை அவள் எப்படி அறிவாள். சுத்தமாய் மறந்து விட்டிருந்தாளே!

அது நேற்றிரவு எட்டு மணிக்கு வெளியான செய்தி!

நேற்று லப்பை தொட விடாமல் சேட்டை செய்து கரம் விளையாட அழைத்தது நினைவுக்கு வந்தது! தன் குட்டு வெளிப்பட்டு விடுமே!

அவனே தான் பால் கலந்து தந்தான்? தலைவலி, வெகு நேரம் தூங்கியது! சரிதான் பாலில் எதையோ கலந்திருக்கிறான்!

ஆனால் எதற்காக??? 

சிந்தனையில் மின்னலடிக்க ஓடிச்சென்று தன் அலுமாரியை இழுத்துக்கொட்டினாள். நினைத்தது சரிதான்!!! அவள் தந்தை தனக்கு பிறகு அவளை வாரிசாக்கி எழுதியிருந்த உயில் காணாமல் போயிருந்தது!

ஐயோ ஐயோ அடுக்கடுக்கான அதிர்ச்சிகள் அவளை தாக்க நிலைகுத்திப்போன விழிகளோடு கீழே சரிந்தாள் அபி!



No comments:

Post a Comment