Sunday, May 11, 2014





6


மூன்று மாதங்கள் அப்படியே ஓடிப்போக பனி உருகி வசந்த காலம் துளிர்விட்டிருந்தது. மைக்கலோடு அவனுடைய வைல்ட் லைப் தொலைக்காட்சி நிலையத்துக்கு அபியும் போய் வரத்தொடங்கியிருந்தாள். கையில் ஒரு பிடிமானம் இல்லாத நிலையில் மறுபடியும் அங்கே செல்ல அபியும் பிரியப்படவில்லை. ஏதாவது ஒரு விடயம் சிக்கும் என்று அவள் கொக்கைப்போல காத்துக்கொண்டிருந்தாள்.

அடிக்கடி செய்திகளில் அனந்தன் அதே இறுக்கமான முகத்துடன்அடிபடுவதுண்டு. இப்போது அவளுடைய கம்பனியின் டைரக்டர் பதவியை வகிப்பது அவன் தான். 

அவனுடனான முகமறியா பழைய ஞாபகங்களும் உறையும் பனிக்குளிரில் இருவருமாய் கழித்த அந்த ரெண்டு நாட்களும் அவள் சிந்தனைக்குள் உலாவர படத்தை பார்த்தபடி அப்படியே அமர்ந்திருப்பாள். பிறகு அதுவும் பழகி விட ஒரு வலியோடு அதைத்தவிர்க்க பழகிக்கொண்டாள். அவளுடைய இடத்தில் துரோகியே ஆனாலும் அவன் இருப்பது அவளுக்கு கோபத்தை தரவேயில்லை!

பூவாளியின் நீர் துளித்துளியாய் பூக்களின் மேல் விழ தலையசைத்து சிரித்த பூக்களை உணர்வின்றி பார்த்துக்கொண்டிருந்தன அவள் விழிகள். அடுத்த கட்டம் என்ன? எத்தனை நாட்களுக்குத்தான் நண்பனின் தயவில் வாழ்வது? கிட்டத்தட்ட ஒருமாதமாக அவள் மனதில் ஓடுவது இந்த எண்ணம் தான்! விடைதான் புரிபடவே இல்லை!

ஏதாவது வெளிநாட்டுக்கு மேல்படிப்பு படிப்பதாக விமலாம்மா விடம் காரணம் சொல்லி கிளம்பி விடலாமா? அவள் பெயரில் இருக்கும் பணம் நன்றாகவே போதுமே!

கடைசி மரத்துக்கும் நீரூற்றி முடித்து வாளியை அருகிலிருந்த மரமொன்றில் கொழுவி விட்டு கைகால்களை கழுவி வந்தவள் சார்ஜில் கிடந்த ஐ பாட்டை திறந்து மேல்படிப்பு சம்பந்தமான தளங்களை தேட ஆரம்பித்தாள். பிரவுசர் சுழன்று லோட் ஆகும் நேரத்தில் கை தன்போக்கில் sas தளத்தை திறந்தது.

யார் சென்றாலும் கவலையில்லை! ஆலமரத்தை யாராலும் அசைக்க முடியாது! எனக்கு நேர்மையே முக்கியம். Sas சிறு தளம்பல் கூட இன்றி நடைபெறும் என்று அனல் பறக்க அறிவித்திருந்தான் அனந்தன்!

என்ன நடந்தது????

அவசர அவசரமாய் தளங்களை தடவியவள் கொட்டை எழுத்துக்களில் மிளிர்ந்த செய்தியை அப்படியே பார்த்திருந்தாள்.

Sas
சிதறியது! அஷோக் மோசடி செய்ததாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வெளியேற்றபட்டார்! செல்வா அதிரடி! தனக்கு சரிபாதி வேண்டுமென்று அஷோக் கோர்ட்டில் வழக்குத்தாக்கல்! 

சிரிப்பா அழுகையா என்று அவளுக்கே தெரியவில்லை! சிரித்தாள் சிரித்தாள் வாய் விட்டு சிரித்துக்கொண்டே இருந்தாள்! விமலாம்மா ஓடிவந்து அவளை ஆதரவாய் அணைத்துக்கொண்டபின்னும் அவள் அமைதியடையவில்லை!

தங்களுக்குள்ளேயே வெட்டிக்கிறாங்க ஆண்ட்டி! ஆண்டவன் இருக்கான் ஹா ஹா ஹா

சரிடா சரிடா என்ற படி தோளில் சாய்த்து விமலா அவளை ஆறுதல் படுத்த முயன்ற கணம் அபீ ................... என்று அலறியபடி மைக்கல் ஓடி வந்தான்.

ப்ரேக்கிங் நியூஸ் வரபோகுது. டிவியை ஆன் பண்ணு!
டேய்! அவளுக்கு தெரியும்டா...

இல்லமா!!! இது இப்போ தான்.... அன......நி..நிவாஸ் போன் பண்ணினான்! துண்டு துண்டாய் வார்த்தைகளை கோர்த்த மைக்கேலை வியப்பாய் பார்த்தாள் அபி!

இவன் ஏன் இப்படி பதறுகிறான்? அவளுக்கு சோகச்செய்தி இனிமேல் என்ன வரபோகிறது????

டிவியை ஆன் செய்து நிவாஸின் சானலை மாற்றியவன் அதில் எதுவும் அறிகுறி இல்லாதிருக்க அவளருகில் வந்தமர்ந்து 

அபி, டென்ஷன் ஆக கூடாது சரியா??? என்று பேசிக்கொண்டிருந்தபோது செய்தி ஆரம்பித்தது! மூவரும் கவனத்தை அதிலே குவித்தனர்!

மைக்கல் முகத்தில் கவலைக்கொடுகளுடன் அபியையே பார்க்க விமலா ஆண்ட்டி அதிர்ச்சி மற்றும் ஆனந்தக்கலவையாய் அபியின் கையை இறுகப்பற்றியிருக்க என்ன உணர்கிறோம் என்றே தெரியாமல் முகம் வெளுத்திருக்க துடித்துப்போராடிக்கொண்டிருந்த உதடுகள் வெடித்து அம்மா என்ற தீனக்குரல் வெளியேற அப்படியே மயங்கிச்சரிந்தாள் அபி!

அனைத்தையும் சரி செய்து உண்மையான உரிமையாளரிடம் கம்பனியை ஒப்படைத்து விட்டேன்! என சிரிப்புடன் அபியின் அன்னை சுபத்ரா வை அறிமுகப்படுத்திக்கொண்டிருந்தான் அனந்தன்!

அப்படியானால் உங்கள் தந்தை???

அவர் செய்தது தவறுதான் ஆனாலும் அப்பா தானே! முழுக்க முழுக்க என் தந்தையாய் அவர் திரும்பி வரும் நாளுக்காய் நான் காத்திருக்கிறேன்!

அபியின் பெயரிலிருந்த உயிலை அவன் கோர்ட்டில் ஒப்படைத்ததும் அன்னை முறையாய் பதவியேற்றதும் அபிக்கு தெரிய வாய்ப்பில்லை! அவள் காய்ச்சலில் விழுந்திருந்தாள்!

**************


இரண்டு நாட்களில் நடந்தவை எல்லாமே அதிரடி மாற்றங்கள்! 

மொடமொடக்கும் கஞ்சியிட்ட காட்டன் சேலையில் நரைத்திரையே இன்றி அபியின் சற்றே முதிர்ந்த முகத்துடன் இருந்த சுபத்திராவின் ஆளுமைக்கு முன் அனைவரும் அடங்கிப்போயிருந்தார்கள். சத்ரியனின் மறைவுக்கு இரண்டு நாட்களின் முன் கப்பலொன்றை கவிழ்ந்ததாக கூறி நாடகமாடி பலகோடி பெறுமதியான சொத்துக்களை கொள்ளையிட்ட குற்றமே நண்பர்கள் இருவரின் மீது சுமத்தப்பட்டு ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டது. அநேகமான நேரங்களில் அனந்தன் அதே இறுக்கத்துடன் சுபத்திராவுடன் கூட இருந்தான். அபிக்கு இப்போது எல்லாமே நன்றாக புரிந்திருந்தது ஆனால் சிந்திக்க கூட முடியாத உணர்வுப்போராட்டத்தில் சிக்கியிருந்தவள் இப்போதெல்லாம் செய்திச்சானல்கள் எதையும் படிப்பதையோ கேட்பதையோ நிறுத்தியிருந்தாள்.

காதில் ஒலிக்கும் பாடல் குறித்த பிரக்ஞையே இன்றி கண்மூடியிருந்த அபியின் காலில் சுருண்டு கிடந்தது ஜூலியன், இப்போதெல்லாம் அவள் எங்கு சென்றாலும் விலகாமல் அவளையே அடை காக்கிறது அது!

அபீ ஓடி வாடா பரபரப்பாய் அழைத்த விமலாம்மாவின் குரல் அவளை விழிக்க வைக்க உச்சி முதல் உள்ளங்கால்வரை தொற்றிக்கொண்ட பதற்றத்துடன் எழுந்து ஓடினாள் அபி. 

அவள் எண்ணம் தப்பவில்லை, வெள்ளை நிற காரொன்றில் இருந்து இறங்கிக்கொண்டிருந்தார் சுபத்ரா, அவள் நினைவுகளிலிருந்த அம்மாவில் சற்றே இறுகிவிட்டிருந்தது தவிர கொஞ்சமும் மாற்றமில்லை! இன்னும் வெள்ளை பைஜாமாவிலேயே இருக்கிறோம் என்ற உணர்வுகூட இன்றி அவள் போர்டிகோவில் இருந்து இறங்கி ஓடினாள்.

எவ்வளவு அழகு அவளுடைய அம்மா! முதன் முதலாய் தோன்றிய எண்ணம் அதுதான்! அவள் பார்த்ததைப்போல உச்சிமுதல் உள்ளங்கால்வரை மகளை உதடு துடிக்க பார்த்துக்கொண்டே இருந்தார் சுபத்ரா. உணர்ச்சி வெள்ளங்கள் இறுக்கி அணைக்க துடித்தாலும் உணர்வுகளை தமக்குள்ளே அடக்கிகொள்வதில் இருவருமே இணையற்றவர்கள் ஆயிற்றே. பக்கவாட்டில் தொங்கிய கைகள் இறுகப்பொத்திக்கொண்டிருக்க நின்றுகொண்டிருந்தவர்களில் அபி தான் முதலில் தளர்ந்தவள்! தந்தையின் நெகிழ்ச்சியின் கலப்படமாயிருந்தாளோ! ஓடிப்போய் அன்னையின் அருகில் நின்றவளை இப்போது அணைத்துக்கொண்டார் சுபத்ரா. அவரது கண்களில் ஒரு சொட்டுக்கண்ணீர் கூட உருளாமல் கண்களுக்குள்ளேயே கண்ணீர் சுற்றுவட்டத்தை முடித்துக்கொண்டது.

அனந்தன் வாப்பா..ஏன் கார்லயே இருக்கே? சுபத்ரா அழைக்க அப்போதுதான் அவனைக்கவனித்தவள் வீம்பாக அன்னையையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

நான் கிளம்புறேன் ஆண்ட்டி. கொஞ்சம் வேலை இருக்கு

அட..எல்லாம் அப்புறம் பாத்துக்கலாம் இறங்கு!

இல்லை ஆண்ட்டி அவசரமான வேலை சுபத்ராவுக்கு மேல் அழுத்தமாய் பதில் சொன்னாலும் கண்கள் ஏதோ எதிர்பார்ப்பாய் அபியை தழுவியதோ? அவள் பார்க்கமாட்டேன் என்பதாய் பிடிவாதமாய் தாயையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள்.

விருட்டென கார் கிளம்பிச்செல்லும் ஓசை கேட்டாலும் அவள் திரும்ப வில்லை. ஏனோ கோபமும் வந்தது!

அதுதான் அம்மா கூப்பிட்டார்களே, வர வேண்டியது தானே!

*******************


என்ன இருந்தாலும் இத்தனை வருடங்களாய் ஒரு தொடர்பு கூட இன்றி இருப்பார்களாமா? அன்னை மேல் கோபம் கொண்டாலும் எதுவும் கேட்கவில்லை அவள். 

அழகாய் கண்ணியமாய் முடி திருத்தி நக நுனியில் கூட அழுக்கின்றி கம்பீரமே உருவாக ஆஷ் நிற பாண்டுக்கு வெள்ளை சில்க் ப்ளவுஸ், கார்டிகனுடன் வேதநாயகம் விமலாவுடன் சம்பாஷித்துக்கொண்டிருந்த அன்னையை ரசிக்க மட்டுமே முடிந்தது அவளுக்கு! 

முடிவில் இன்னும் வாராத தலையுடன் வெள்ளை பஜாமாவில் ஜூலியனின் பாதங்கள் வேறு கோலம் வரைந்திருக்க போளியொன்றை உள்ளே தள்ளிக்கொண்டிருந்த தன்மேலேயே சுய பச்சாத்தாபம் வர எழுந்து குளிக்க கிளம்பினாள்.

எத்தனையோ ஆதாரங்களை காட்டியும் நான் சொல்வதை கொஞ்சமும் நம்பவேயில்லை சத்ரியன். என்னைப்பற்றி அவர்கள் நன்றாகவே விஷம் கலக்க ஆரம்பித்திருந்தார்கள். சம்பாதிக்க ஆரம்பிக்கும் காலமல்லவா! என்னைத்தொலைக்கும் வெறி அதிகம் இருந்திருக்கும்! என்ன தான் இருந்தாலும் கட்டிய மனைவியை நம்பாமல் நண்பர்களின் பேச்சை கேட்டு என்னை அவர் முடக்கியதும் குடும்ப உறவுகள் மீது நம்பிக்கையே போய் விட்டது.
அப்படியிருந்தும் தோற்கக்கூடாது என்ற வெறியோடு போராடினேன். விளைவு கொல்லத்துரத்துமளவுக்கு ஆகிவிட்டது. அந்த ரயிலில் இருந்து தப்பியது தெய்வாதீனம் தான்! 

அப்படியே வெளிநாடு சென்றவள் இன்னும் இன்னும் படித்தேன், ஒரு குழந்தைகள் காப்பகம் நடத்தும் பொறுப்பு கிடைத்தது, இன்று வரை அதை தான் செய்துகொண்டிருந்தேன்! படங்கள் செய்திகளாக இவளின் வளர்ச்சி காணக்கிடைத்தது. அதுவே போதுமென்றிருந்தேன்.

என்னையும் அழைத்துச்சென்றிருக்கலாமே அம்மா..இப்படிப்பட்டவர்களிடம் எப்படி விட்டீர்கள்? தோளில் டவலுடன் அறைவாசலில் நின்று கேள்வி கேட்டவளை அமைதியாய் பார்த்தார் சுபத்ரா.

நீ தான் காரணம் அபிம்மா. அந்த நேரம் உனக்கும் சத்ரியனுக்கும் இடையிலிருந்த உறவு அப்படிப்பட்டது. என்னை விட்டு இருந்து விடுவாய் அவரை விட்டு உன்னால் இருக்கவே முடியாது. தைரியத்தில் என்னைப்போல இருந்தாலும் உணர்ச்சிகளை அப்படியே கொட்டுவதில் நீ அப்பாவை போலத்தான். அவருக்கும் நீ உயிர். என்ன நடந்தாலும் சத்ரியனின் மூளையின்றி எதுவும் செய்யமுடியாது அவர்களால், அதனால் அவருக்கு எதுவும் வராது. ஆகவே உனக்கு எப்போது தேவைப்படுமோ அப்போது நான் திரும்பி வர வேண்டும் என்று தான் காத்திருந்தேன்! 

மூன்று வருடங்களின் முன் அனந்தனை தற்செயலாக சந்தித்தேன். அவன் மூலம் எல்லாம் தெரிந்து கொள்ள முடிந்தது. சத்ரியன் மறைந்ததுமே என்னை தடுத்து விட்டு கிளம்பி வந்துவிட்டான். என் கடமையை செய்ய விடுங்கள் என்று கேட்டபோது என்னால் மறுக்க முடியவில்லை. 

அவர்களின் நம்பிக்கையை பெற்று அந்த கப்பலின் ஆதாரங்களை திரட்டி, எல்லாம் செய்தது அவன் தான்!

அந்த கப்பல் கவிழ்ந்த செய்தி கேட்டு த்தான் அப்பாவுக்கு அட்டாக் வந்தது! அப்ப கூட என் கூட பேசிட்டு ,,,,,,,,,,, வசனத்தை முடிக்க முடியாமல் அழுகை பொங்கி வர டவலை எறிந்து விட்டு ஓடி வந்து அன்னையை கட்டிக்கொண்டு கதறத்தொடங்கினாள் அபி. அவளை இறுகக்கட்டிக்கொண்டு இப்போது தானும் கண்ணீர் உகுத்தார் சுபத்ரா. அடக்கிவைத்த அழுகையெல்லாம் பாசாங்கு இல்லாமல் இருவர் கண்ணிலிருந்தும் பொங்கி வர வெகு நேரம் அழுதுகொண்டே இருந்தனர் தாயும் மகளும் இறந்து போன தங்கள் குடும்பத்தலைவனுக்காக!




No comments:

Post a Comment