Tuesday, April 9, 2013

MI கண்ட தமிழ் சங்கம் II






முதல் ஒரு வாரம் Life skill development programme நடைபெற்றது. நிறைய விளையாட்டுக்கள், குட்டி குட்டி நாடகங்கள் என்று tract suit, shoes சகிதம் M.I இன் கல்லு முள்ளு எல்லாம் அலைந்து திரிந்திருந்தோம். இயல்பிலேயே நான் ஸ்போர்ட்ஸ் இல் கொஞ்சம் வீக். அதனால் கொஞ்சம் தலையிடியாகவே இருந்தாலும் இரசித்தேன். நாங்கள் கொஞ்சம் விசிறி பேச முயற்சிப்பதும் அவர்கள் தமிழை கொலை செய்யவே துணிந்ததும் ஒரே சிரிப்பாக இருந்தது. ஒருவன் ஜீனிடம் வந்து “ உனது கங்கள் முட்டை கங்கள்” என்று அடித்து விடவும் ஜீனுக்கு ஒன்றுமே புரியவில்லை. பிறகு அவன் ஆங்கலத்தில் கூறிய பிறகு தான் புரிந்தது. அவன் யாரோ ஒரு தமிழ் சங்கத்திடம் “u’ve got beautiful eyes” என்பதை தமிழில் கேட்டிருக்கிறான். அந்த பிரகிருதி “உனது  கண்கள் முட்டை கண்கள்” என்று சொல்லி கொடுத்து விட்டிருக்கிறது!
ஆனால் தொடர்ந்து இந்த விளையாட்டை ஏனோ சகிக்க முடியவில்லை. பிறகு ஒரு மாதம் ஆங்கில வகுப்புகள் நடந்ததால் நாங்கள் ஆங்கிலத்திலேயே தொடர்ந்தோம். எங்களுக்கு ஒரு மைனோரிட்டி பீலிங் வர ஆரம்பித்து விட்டது என்றே நினைக்கிறேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உணவுக்குழுவை நியமித்து அந்த நாளுக்குரிய உணவு மற்றும் பரிமாறல் பொறுப்பு முழுவதும் அவர்கள் தான் செய்ய வேண்டும். கொஞ்சம் தள்ளி உள்ள கிராமத்தவர்கள் சமைத்து தருவார்கள். 180 பேருக்கும் அந்தக்குழு பரிமாற வேண்டும். தம்புள்ள சென்று காய்கறிகள் வாங்கி வருவது ஆண்களின் பொறுப்பு. குழு அமைக்கும் போது ஒரு தமிழ் தான் குழுவில் வருவோம். தலைமை பொறுப்பு மற்றும் அனைத்தையும் தீர்மானித்து என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டும் தான் அந்த உறுப்பினருக்கு தெரிவிப்பார்கள். வேறு வழியில்லையே. எங்களுக்கு அப்போது கலந்துரையாடல் புரியாது. எல்லா நேரமும் ஆங்கிலத்தில் பேசச்சொல்லி கேட்க முடியாதே. மாதம் ஒருமுறை நாங்கள் சமையலுக்கு தேவையான விறகுகளை சேகரிப்போம். ஆண்கள் காட்டில் வெட்டித்தருபவற்றை நாங்கள் கொண்டு வருவோம். ரொம்பவும் பொறாமையாக இருக்கும். தங்கள் மொழியிலையே பேசி சிரித்து எப்படி எப்படியெல்லாம் அனுபவிக்கிறார்கள். கிளிநொச்சி, பரந்தனோடு ஒப்பிட்டால் இந்த M.I தூசுதான். ஆனால் எங்கள் மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்குமா என்று பொருமிக்கொண்டேயிருப்போம். விசிறி தெரிந்தவர்கள் இலகுவாக இணைந்து கொள்ள ஒவொரு தடவையும் ஆங்கிலத்தில் கேட்க கூச்சப்பட்டு அதோடு சின்ன தாழ்வு மனப்பான்மையும் சேர்ந்து கொள்ள மீதிப்பேர் கொஞ்சம் ஒதுங்கி விட்டோம். ஆரம்பத்திலேயே விசிறியை கற்றுக்கொண்டு வந்திருக்க வேண்டும். நாங்கள் இயல்பாகவே இணைந்து எங்களுக்குள் பேசிக்கொள்வதும் அவர்கள் பேசுவது எங்களுக்கு புரியத்தொடங்கினாலும் அவர்களுக்கு எங்கள் தமிழில் எதுவுமே புரியாததாலும் நாங்கள் அவர்களோடு இணைய பிடிக்காமல் தனியாக இருக்கிறோம் என்று குற்றம் சாட்டினார்கள். மொழி தெரியாத நடுக்காட்டில் என் மொழி புரிபவனுடன் நான் இயல்பாக பேச மாட்டேனா? என்ன கொடுமை இது? நாங்கள் சும்மாவே கொஞ்சம் குழப்படிகாரர்கள் என்பதும் அவர்களை போல சட்டங்களை அவ்வளவு மதிப்பதில்லை என்பதும் எந்த நேரமும் பேசி சிரித்தபடியே இருப்பதும் அவர்களுக்கு கொஞ்சம் கடுப்பை கிளப்பியிருக்கும். குழுவில் இருக்கும் போது இருவர் அகப்பட்டால் கொண்டாட்டம் தான். அவர்கள் விசிறியில் கேட்பதற்கு ஒருத்தர் முகத்தை சிரித்தபடி வைத்துக்கொண்டு தமிழில் திட்டினால் மற்றவருக்கு சிரிப்பு வராதா? இப்படி நாங்களும் எங்கள் பங்குக்கு அவர்களை கடுப்பேத்தி விடுவோம். எங்கள் தமிழுணர்வு மிகவும் காயப்பட்ட்டது இங்கேதான். அதையும் மீறி பரந்து விரிந்து கிடந்த அந்த அழகு தேசம், தனிமை , சுதந்திரம் எங்களை அந்த இடத்தை நேசிக்க வைத்தது. தென்னிலங்கையை சேர்ந்தவர்கள் சென்று விட கப்பலில் சென்று வர வேண்டிய யாழ்ப்பாணத்தோர், கடுமையான சோதனைகளை தண்டி செல்ல வேண்டிய வவுனியா, மன்னார், மட்டக்களப்பு மாணவர்களாய் நாம் வார இறுதிகளில் அங்கேயே தங்கிவிட நாங்கள் இன்னும் இறுகி விட்டோம். கிழமை நாட்களை விட வார இறுதிகள் எங்களுக்கு ரொம்பவும் பிடிக்கும். நாங்கள் அந்த வளாகம் முழுவதும் சுற்றுவோம். கடைக்கு போக வேண்டுமானால் ஒரு ஆணை அழைத்து செல்ல வேண்டும் என்ற சட்டத்தை நாங்கள் அடிக்கடி மீறுவதால் எங்கள் ஆண்கள் சங்கத்தோடு கொஞ்சம் உரசல்கள் ஏற்படுவதுண்டு. ஆனாலும் கெக்கிராவ போகும் போது எங்களுக்கு ATM இல்  காசு எடுத்து வருவது, கெக்கிராவ அழைத்து செல்வது , மஞ்சு ஐயா கடைக்கு போவது , விசிறிகளுக்கு தெரியாமல் கொத்து வாங்கித்தருவது ( 100 மாணவிகள் இருக்கும் இடத்தில் சிலருக்கு மட்டும் வாங்கி கொடுக்க கூடாது என்பது அங்கே சட்டம்!) என்று அவர்களும் எங்களுக்கு ஆதரவாகவே இருந்தார்கள்.
விசிறி மாணவிகள் பார்பதற்கு தான் தைரியமாய் இருப்பார்கள் ஆனால் சின்ன சின்ன வேலைகளுக்கும் ஆண்களின் தயவை எதிர்பாற்பது இங்கு மட்டுமல்ல நிறைய இடங்களில் கவனித்திருக்கிறேன். எங்களால் முடிந்தால் நாமே செய்ய வேண்டியது தானே. மென்மையான வேலைகளை மட்டுமே அவர்கள் செய்வார்கள் “அபி கனுலமாய்னே” என்ற சொல்லிக்கொண்டு. வடக்கு கிழக்கில் கொஞ்சம் கடினமாக அடிபட்டு வாழ்ந்து பழகிய எங்களுக்கு எல்லாவதிருக்கும் ஆண்களை எதிர்பார்ப்பது சங்கடமாக இருக்கும். நாங்களே கூட்டணி அமைத்து கிளம்பி விடுவோம். விசிறி ஆண்கள் கண்ணில் பட்டால் எங்களை ஒன்றும் சொல்லாமல் எங்கள் ஆண்கள் சங்கத்தை  திட்டுவார்கள் போலும். இப்படி சின்னச்சின்ன உறசல்களுடன் நாளொரு மேனியும் வண்ணமுமாக எங்கள் M.I கண்ட தமிழ் சங்கம் வளர்ந்தது!
முதலாவது செமஸ்டர் ஆரம்பித்தது. திங்கள் புதன் என்று நினைக்கிறேன் பன்னிரண்டு மணி வரை field practicals. Track suit, ஒரு பெரிய ஒலைத்தொப்பி, சப்பாத்து கையில் மம்பட்டி, மற்றும் பிற கருவிகள். ஒவோருவரையும் பார்க்க செமகாமெடி யாக இருக்கும். நான் B க்ரூபில்.இருந்தேன். நான் நிஷா ,தட்சா, கௌத், ஷ்யாமா, சுதா, ருச்னி மற்றும் பெரும்பாலான ஆண்கள் சங்கமும் AB க்ரூபில் இருந்தோம். பொறுப்பாக இருந்தது பல்லவராயனும் (பல்லு கொஞ்சம் பெரிசு), மொட்டக்கருப்பனும்( கொந்சம் கருப்பு). இருவரும் விசிறிகள் , எங்களை கண்ணிலும் காட்ட முடியாது. பீல்டில் demonstration விசிறிதான். எங்கள் பாடு தான் ததிங்கினதோம். பற்றாக்குறைக்கு individual performance மார்க்ஸ் இருந்தது. குறைய எடுத்தது யார் எண்டு சொல்ல வேண்டியதில்லையே. பல்லனை ஐஸ் வைக்க இல்லாத டௌட் எல்லாம் கேட்போம். இன்று ஒருவர் டௌட் கேட்டால் அந்த குழுவில் உள்ள மீதி சங்க உருபினர்களும் வந்து கவனமாக கேட்பதை போல பாவனை செய்வோம். அடுத்தநாள் இன்னொருவரின் முறை! என்ன எய்து என்ன கடைசியா அவன் எங்களுக்கு B-, C+ தான் தந்தான். படுபாவி!
பெரிய குழுவை ஐந்து பேர் கொண் உப குழுவாக பிரித்து இருந்தனர். மொத்தம் 48 வகை பயிர்களை ஒவ்வொரு உப குழுவும் வளர்த்து அறுவடை செய்ய வேண்டும். ஒவ்வொரு குழுவுக்கும் குட்டி நிலம் தந்திருந்தார்கள். தொடர்ச்சியான மதிப்பீடு இருந்தது. களை இல்லாமல் நல்ல நிலையில் ஒவ்வொரு வளர்சிப்படிநிலைக்கும் ஏற்றது போல இருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் காலை விரிவுரைக்கு போக முதல், முடிந்த பிறகு அதைத்தான் கவனித்து கொள்ள வேண்டும். இங்கே மொழி பிரச்சனை ரொம்பவும் கொடுமையாகி விட்டது. அவரவர் குழு புள்ளிகளை பற்றிய கவனத்தில் இருக்கும் போது ஒவ்வொரு விடயத்தையும் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்து அவர்களுக்கும் கூற நேர மில்லை. கேட்க எங்களுக்கும் மிகவும் சங்கடமாக இருக்கும். இரவுகளில் சங்கமாக நாங்கள் கூடும் போது இந்த கண்ணீர் கதைகளை பகிர்வதுண்டு. “நாங்கள் என்ன பின் தங்கிய மாணவர்களா? இவர்களோடு பார்க்கும் போது நாங்கள் தான் results + Z score toppers! என் எங்கள் நிலை இப்படி ஆகி விட்டது” என்று மனம் பொருமுவதுண்டு. அந்த வகையில் நான் பாக்கியசாலி. அமில, விந்தியா, வசந்தி, மற்றும் சுகு இவர்கள் தான் என் மற்ற உபகுழு உறுப்பினர்கள். சுகு நன்றாக விசிறி பேச கூடியவர் என்பதால் எனக்கு தமிழிலேயே அறிவுறுத்தல்கள் கிடைக்கும் ஆகவே எனக்கு  இந்த பிரச்சினை வரவேயில்லை. மற்ற மூவரும் கூட எனக்கு ரொம்பவும் ஆதரவானவர்கள். முக்கியமாக அமில, என்னுடைய நல்ல நண்பன் இன்னும் கூட. நிறைய நன்றிகடன் பட்டிருக்கிறேன் இவர்கள் நால்வரிடமும்.
பீல்டில் இப்படியாய் மூக்குடைந்தாலும் நாங்கள் வகுப்பில் பின் மூன்று வரிசைகளையும் கைப்பற்றி கொண்டிருந்தோம். சங்கத்தில் சில முன்வரிசை உறுப்பினர்களை தவிர மற்றவர்கள் கல்லுப்பாதையில் ஓடிச்சென்று எல்லோரையும் முந்தி பின்வரிசையில் இடம் பிடிப்பவர்கள் தான். வகுப்பு போரடித்தால் துண்டு எழுதி பாஸ் பண்ணுவோம்.இந்த சிட்டுக்கு பேர் போனது கஜன் தான்! தமிழை யாராலும் வாசிக்க முடியாது என்ற தைரியத்தில் நடுவில் இருக்கும் விசிரிகளிடம் கொடுத்து பரிமாறுவோம். தொல்லை அதிகமானால் கடுப்பாகி முறைப்பார்கள். என்னவோ தெரியாது அவர்கள் விரிவுரைகளில்  அதிகம் சேட்டை செய்வதில்லை!


No comments:

Post a Comment