Tuesday, April 9, 2013

MI கண்ட தமிழ் சங்கம் III






நீங்களும் நாங்களும் என்றைக்கும் ஒன்றல்ல என்று எங்கள் மனதில் ஆணியடித்தது ஒரு சம்பவம். அது ஷ்யாமாவதாரம்! அவளுக்கு சின்னம்மை வந்து விட்டது. ஹாஸ்டலில் வைக்க முடியாது என்று அவளை ஒரு தனி குவார்ட்டசில் தங்க வைத்தார்கள். நியாயம் தான். வீட்டினர் வருவதாயின் கப்பலில் ரெண்டு நாள் பயணித்து வரவேண்டுமென்ற நிலையில் அவளை நாங்கள் தானே கவனித்து கொள்ள வேண்டும். அதற்கு எங்கள் அறைகளில் இருக்கும் மற்றவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை. எதோ உயிர்க்கொல்லி நோய் போலவும் நாங்கள் அவர்கள் அனைவரையும் கொல்லப்போவது போலவும் அப்படி பேசினார்கள். ஷிரோ அன்று தலைவிக்கு கொடுத்த கிழி என்னால் மறக்கவே முடியாதது. அவர்களின் பயத்துக்கு காரணம் இருந்தாலும் அவளை அப்படி விட்டு விட முடியுமா? படங்களின் கிளைமாக்ஸ் இல் ஆவேசமாய் மாறும் மக்கள் ஆகி விட்டோம்! இப்போது நினைக்க சிரிப்பு வருகிறது. போராட்ட வீரர்கள் போல நாங்கள் ஹாஸ்டல் உள்ளும் ஆண்கள் சங்கம் ஹாஸ்டலுக்கு வெளியிலும் விழித்தபடி அன்றிரவு தூங்கவில்லை. இரண்டு நாட்களின் பின் அவளை அழைத்துக்கொண்டு வுவுனியா சென்ற காலை நாங்கள் இருபத்தைந்து பேரும் பல்லவராயனின்  practicalகு  போக வில்லை!
அரசியல் இருக்கட்டும் பகிடிவதை பற்றி சொல்லவே இல்லையே. எல்லாம் தொலைபேசி மூலம் தான் ஏனெனில் இங்கே தான் யாருமில்லையே! முதல் ரவுண்ட்டில் மாட்டிக்கொண்டவர்கள் அழுது கொண்டே சொன்ன தகவல்களை வைத்து பேசும் போது ஆங்கிலம் பாவிக்க கூடாது, கேள்வி கேட்க கூடாது போன்ற முத்தான ஐடியாக்கள் கிடைத்தன. ஒருநாள் எனது அறையில் இருந்தேன். அறைக்கு வெளியே உரத்த தமிழ் குரல் கேட்டது. சந்தேகமே இல்லை அஜா தான்! சிரிப்புடன் வெளியே வந்தேன் அப்போது தானே பாயிண்டுகளை பொறுக்கி நக்கல் அடிக்க முடியும்! ஆனால் அஜா  சாதாரணமாக பேசவில்லை. முற்றுமுழுதாக அரச பாஷை அது. ஆணையிடுங்கள் அரசே என்று மட்டும் தான் கூறவில்லை. அப்பிடியொரு அரச நாடகங்களில் பேசும் accent! பிறகு தொலைபேசியை வைத்துக்கொண்டே அழுகை! வெளியே பாத்தால் ஒவ்வொரு தூண்களை பிடித்தபடியும் எங்கள் சங்கம்! என்ன நடக்குது என்று சைகையில் கேட்டால் சுமி “அது சிரேஷ்டர்கள்” என்றாள். கிழிஞ்சுது தெரிஞ்சிருந்தா வெளியிலயே வந்திருக்க மாட்டனே என்று நான் எண்ணமிட்ட வேளையில் அவர்கள் சிரிக்க ஆரம்பித்தனர். என்னடா என்னாச்சு எல்லாருக்கும்??? என்று எண்ணிய வேளையில் அஜா என்னை தட்டி தொலைபேசியை நீட்டிக்கொண்டிருந்தார்! ஆஹா....காதில் வைத்தவுடன் ஆரம்பித்தது தான் கண்ணீர் வராமல் இருக்க ரொம்பவும் சிரமப்பட்டுவிட்டேன். பிறகு வாரம் ஒரு நாள் அது பழகி போனதுமில்லாமல் அவர்கள் அழைப்பு எடுத்ததும் நாங்கள் loudஇல் போட்டு சுற்றியிருந்து கேட்பதுவுமாய் ஒரு என்டர்டையினர் ஆகவே மாறி விட்டது!
அதை விட கொடுமை என்னவென்றால் ஒரு ரெண்டு நாள் தொடர்ந்து எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. சரியாய் நானும் தமிழில் வணக்கம் எல்லாம் சொல்லி விடுவேன் அது ஞாபகம் இருந்தது. தூக்கத்தில் senior பேசியது போலவே இருக்கும். பிறகு அந்த அழைப்பு  இரவு 11 க்கு வரும். முதல் நாள் சரியான கும்பகர்னி என்று திட்டினான்.ஆஹா சீனியரை நான் தூக்கத்தில் ஏதோ திட்டி விட்டேன் போலும் என்று பயந்து மன்னிப்பு கேட்டேன். அனாலும் ஒரு சந்தேகம் அவன் “நீ நான்” என்று மரியாதையாய் பேசினான், ரெண்டு தடவைகளும் வேறு யாரிடமும் கொடுக்க சொல்லவில்லை. மூன்றாவது நாள் நானே கேட்டேன் “மற்ற மாணவிகளிடம் கொடுக்கவா?” அவன் சிரிக்க ஆரம்பித்து விட்டான். பிறகு அடுத்த நாள் மெசேஜ் வந்தது. அவன் சீனியர் இல்லையாம் நான் தூக்கத்தில் சீனியருடன் பேசுவது போல உளறியதால் அவனும் என்னை மிரட்டினானாம். கடுப்பாகி அவனை பிளாக் பண்ணி விட்டேன். என்னை மறந்து தூங்குவது ஒரு தப்பா??
extension பாடத்துக்கு எங்களை சேனபுர கிராமத்துக்கு அழைத்து சென்று ஒவ்வொரு உப குழுவுக்கும் ஒவ்வொரு குடுப்பத்தை தெரிவு செய்ய சொன்னார்கள். அவர்களோடு 6 மாதங்கள் பழகி அவர்களின் விவசாயம் தொடர்பான வாழ்வியலை பற்றி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். எங்களுக்கு கிடைத்தவர்கள் வெள்ளந்தி மக்கள். எங்கள் சீனியர்ஸ் உடன் எடுத்துக்கொண்ட படங்களை ப்ரேம் செய்து மாட்டியிருந்தார்கள். சனி, ஞாயிறு மற்றும் வேலையில்லாத பின்னேரங்களிலும் அங்கு போவோம். சைக்கிளில் போவதும், நாங்கள் ஐவரும் அவர்கள் வீட்டில் கழித்த பொழுதுகளும்  மறக்க முடியாதவை. நான் தடுமாறி தடுமாறி விசிறி பேசுவது அவர்களுக்கு ரொம்பவும் பிடிக்கும். அந்த அன்ரி அவித்து தரும் மரவள்ளி கிழங்கு இன்னும் நாவிலேயே நிற்கிறது.
engineeringக்கு நாங்கள் நீர்ப்பாசன வடிகாலமைப்பின் கட்டுமானங்களை பார்வை இட்டுக்கொண்டும் சரிவை அளப்பதற்கு ஸ்டேடியாவையும் தூக்கிக்கொண்டு M.I ரோட்டுகளில் சுற்றுவோம்.பயோலஜியில் படம் வரம் வரைவதாக கூறி நடு வெய்யிலில் எங்கள் சங்கத்தின் மாநாடுகளை நடத்துவோம். சேற்றுக்குளியல் அனுபவங்கள் அப்போது கடுப்பானாலும் இப்போது நினைக்கும் போது சிரிப்பு வரும். மருந்து வாங்கப்போன வாசு சேற்றில் குளித்து திரும்பியது ஒரே சிரிப்பு.
ஒருநாள் எங்களுக்கு எகானமிக் கற்பித்த தாத்தாவின் கொலைவெறியிலிருந்து தப்பிக்க நாங்கள் கையெழுத்து போட்டதும் ஹாஸ்டலுக்கு ஓடி விட்டோம். சற்று நேரத்தில் தொலைபேசி மெசேஜ் வந்தது. தாத்தா கடுப்பாகி விட்டதாகவும் மறுபடியும் அட்டன்டன்ஸ் எடுக்க போவதாகவும் இல்லாதவர்களை பெயிலாக்கி விடப்போவதாகவும் எங்களை உடனடியாக வரும் படியும் கேட்டிருந்தார்கள். வெளியே வந்தால் முக்கால்வாசி தமிழ் சங்கமும் ஒரு பத்து விசிறிகளும் மொத்தம் இருபத்தைந்து பேர் இருப்போம். முன்புறத்தால் விரிவிரை மண்டபத்துக்குள் புக முடியாது. பக்கக்கதவை பாப்போம் என எல்லோரும் பக்கத்தில் இருந்த வெறும் வளவில் புகுந்து கம்பியை வெட்டி புகுந்து வளாகத்துள் வந்து விட்டோம். அந்த நேரம் ஆசிரியரை சுற்றி மறைத்து கொண்டு உள்ளேயிருந்தவர்கள் டவுட் கேக்கவும் எங்களுக்கு மெசேஜ் வந்தது. மெதுவாக உள்ளே புகுந்து விட்டோம். அவர் புரிந்து கொண்டாலும் யாரை என்று பிடிப்பது? கோபமாக போய் விட்டார். நல்லவேளையாக அன்று ஒரு பெயிலில் இருந்து தப்பித்தோம். எல்லாப்புகழும் “batch fit”கு தான்!
பூச்சி பெட்டி என்று நாங்கள் செல்லமாக அழைத்த இன்செக்ட் பாக்ஸ் செய்தது கலக்கலான அனுபவம். பட்டியலிட்ட பூச்சிகளை பிடித்து விஞ்ஞானபெயருடன் ஒரு பெட்டியில் சரியாக அமைக்க வேண்டும். காடு களம் வயல் என கையில் நெற்றோடு பூச்சி பிடிக்க அலைந்ததை மறக்க முடியுமா? அதுவும்  எனக்கு மட்டும் அந்த மஞ்சள் நிற அந்துப்பூச்சி மட்டும் தான் பிடிபடும்! யார் என்னோடு பேசினாலும் கடித்து குதறும் கொலைவெறியில் இருப்பேன்.சங்கத்தில் சிலருக்கு இது வாழ்நாளிலேயே மறக்க  முடியாதஅனுபவமல்லவா? களை ஆல்பம் செய்யும் போதும் இதே கதை தான். சுமி விஞஞானபெயர்களை மனனம் செய்து தூக்கத்திலும் பேசுவது ஞாபகம் இருக்கிறது.
“பள்ளம”வுக்கு நாங்கள் செவ்வாயில் soil science என்று நாடகம் போட திட்டமிட்டு சீநியர்சிடம் பேச்சு வாங்கியது. பிறகு நிஷா, தட்சா, விஜி, சுதா, பிரியந்தி, ஜீன் நடனம் ஆடியது, கஜனும் லக்சியும் “முதல் மழை” பாடல் பாடியது எல்லாம் மறக்க முடியாதவைகள். பெரதேனியவிலிருந்து கரோலின், தரமி, வித்யாஷினி, பிரியந்தி எல்லாரும் வந்த போது பெருமையாக ஊர் சுற்றி காட்டியது. அவர்கள் சொன்ன கதைகளை சுற்றியிருந்து கேட்டது முக்கியமாக கரோலின் எனக்கு அறிமுகமானது அன்று தான்.
கடைசியாக அறுவடைக்காலம் வந்து விட்டது. ஒவொரு பயிரையும் நாமே அறுவடை செய்தோம். ஆனால் சோளம், கச்சான் அறுவடைக்கு முதலே களவு போய் விடும். இதில் கச்சான் களவை பாரிய அளவில் செய்தது மை, வினோ மற்றும் ஷிரோ தான் விசிறி பெண்கள் பயந்தவர்கள் ஆகவே பெரும்பான்மை தமிழ் சங்க அறையும் இருந்ததால் இவர்களின் களவு தொடர்ந்தது. சோளகொள்ளைக்கு பெயர்போனது மற்ற அறை தான் ஜீன், சுமி, ஷ்யாமா, ருஸ்னி நால்வரும் தான் பெரும் புள்ளிகள். ஒரு முறை இவர்கள் இருட்டி விட்ட நேரத்தில் கொள்ளையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது யாரோ கூட்டமாக வரும் அரவம் கேட்டு பற்றைக்குள் பதுங்கியதாகவும் பின்னர் அது கொள்ளையடிக்க வந்த ஆண்கள் சங்கம் என்று தெரிந்ததாகவும் பின் இருவரும் அசடு வழிந்தபடி திரும்பியதாகவும் தகவல்கள்  கிடைத்தன. உண்மையோ தெரியவில்லை! ஒருமுறை ரெண்டு அணியும் கூட்டுக்களவில் ஈடுபட்டு கொள்ளை பொருட்களை எங்கள் ஹாஸ்டலுக்கு கொண்டு வந்தார்கள். பிறகு வாளிக்குள் ஹீட்டர் வைத்து அதை அவித்து ஆண்கள் சங்கத்துக்கு அரை பங்கை கொடுத்தனர். இரவு அங்கிருந்து வந்த பின்னூட்டம் சோளத்தில் உப்பு இல்லை என தெரிவித்து விட்டதால் கடுப்பாகி திரிந்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இன்னொரு மூலையில் Zn test சோளத்தில் செய்திருந்தார்கள், சுமி இங்கு நடத்திய ஒன் வுமன் ஷோ வினால் கடுப்பான பல்லவராயன் நஞ்சு அடையாளம் வரைந்து மாட்டி  விட்டது பெரிய காமெடி!
ஒன்றை சொல்லியாக வேண்டும் M.I ஐ விட்டு வழக்கமான கல்லுரி வாழ்க்கைக்கு பேராதெனிய போகப்போகிறோம் என்றதும் எல்லோருடைய ஞாபகத்திலும் இருக்க வேண்டும் என்று fun ஆக நான் செய்த ஒரு செயல் நிறைய பேரை வேதனைப்படுத்தி விட்டது. சின்னபிள்ளைத்தனமாக சண்டை போட்டுக்கொண்டோம். உடனே சமாதானமாகி விட்டாலும் அந்த நேரம் பலர் பட்ட வேதனை என்னால் தானே என்பது என்னை உறுத்திக்கொண்டேயிருக்கும். இந்த இடத்தில் நான் அதற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். நான் என்னவோ பிள்ளையாரை தான் பிடிக்க போனேன் அது ஆஞ்சநேயராய் வந்து அமைந்து விட்டது!
பிறகு கொஞ்ச காலம் எங்களுக்கு விடுமுறை இருந்தது பரீட்சைகளுக்காக. க்ரூப்ஸ்டடியில் சங்கமே மும்முரமாகி விட்டது, நான் சத்தம் போட்டு மற்றும் நடந்து கொண்டே படிக்கும் பழக்கம் உள்ளதனால்  பாகல் தோட்டம், அந்த சின்ன வீட்டு தோட்டம், பின்புறம் என்று ரேடியோவும் புத்தகமுமாக சுற்றிக்கொண்டிருப்பேன். அநேகமான தருணங்களில் விஜியும் வாசுவும் சேர்ந்து கொள்வார்கள். எப்படியோ பரீட்சைகளை எழுதி முடித்தோம்.
கடைசி நாட்கள் எனும்போது ஞாபகம் வரும் இன்னுமொரு விடயம் ஷ்யாமாவின் பக்கட்டிங்! அவளவு நாளும் அமைதியா வாயல மட்டும் பேசிக்கொண்டிருந்தவள் அன்று அக்சன் அவதாரமே எடுத்திருந்தாள். வாளிகளில் தண்ணீர் எடுத்து வந்து தனது ரூமிற்குள் சங்கத்தினர் மீது அபிஷேகம் செய்து தான் ஆரம்பித்தாள். ஹாஸ்டல் முழுவதும் நாங்கள் கத்திகுழறியபடி ஓடியதும் நனைந்தவர்கள் பதிலுக்கு ஷியாமாவுக்கு அபிஷேகம் செய்து தப்பித்த மற்றவர்களை துரத்தியதுமாய் ஹாஸ்டலே திமிலோகப்பட்டது. சங்கத்தினர் பலர் தூக்கிச்செல்லப்பட்டும் தண்ணீர் தொட்டிக்குள் போடப்பட்டனர். நான் எப்படியோ தப்பி ரூமிற்குள் வந்து மற்ற விசிறிகளுடன் ரூமை தாளிட்டு ஒளிந்து கொண்டு விட்டேன். இப்போது ஷ்யாமாவின் பார்வை விசிறிகள் பக்கம் திரும்ப அவர்களுக்கும் துரத்தி துரத்தி அபிஷேகம் நடந்ததை நான் கட்டில் மீது ஏறி யன்னல் துவாரத்தால் பார்த்து கொண்டிருந்தேன்! சற்று நேரத்தில் ஷ்யாமாவும் குழுவினரும் அறைகளுக்குள் இருந்தவர்களை வலுக்கட்டாயமாக நனைய வைத்தனர். இப்போது அவளுடன் விசிறிகளும் இணைந்திருந்தனர். கடைசியாக எங்கள் ரூமிற்கு முன்னாள் வந்து கதவைத்திறக்குமாறு எனக்கு கொலை மிரட்டல் விட்டாள். எனது சகாக்கள் பயந்து நடுங்கினர். அப்போது ஷ்யாமாவுக்கு விசிறி அவளவு வராது. விசிறியும் ஆங்கிலமும் கலந்து அவளுக்கேயுரிய ஷ்யாமா tone இல் அவள் மிரட்டவும் எனக்கு உள்ளே சிரிப்பு தாங்கவில்லை. கதவின் மேல் மற்றும் கீழ், கம்பி வழியாக தண்ணீர் மழை அறைக்குள் பொழிந்தது. எனக்கோ வெளியில் பொய்விட ஆசையாய் இருந்தது அனால் மற்றவர்கள் திறக்க விடவில்லை. அப்போது ஷ்யாமா தமிழில் மிரட்ட ஆரம்பித்தாள். மறக்கவே முடியாத அவளது டயலாக் “ எடியே சமுத்திரா வெளில வாடி “ அப்போதுதான் வந்தது.எத்தனை நாள் கோபமோ தெரியாது! பொங்கி சிரித்த என்னிடம் அவர்கள் விளக்கம் கேட்க நான் அல்லாடிய போது தான் உள்ளே வந்து ஒழிய நினைத்த என் முட்டாள் தனத்தை நொந்தேன். ஒருவாறு அவள் போய் விட்டாள். அன்று தப்பித்தது நானும் என் room சகாக்களும் தான். ஆனால் அன்று தப்பியது ஏனோ மகிழ்ச்சியை தரவில்லை.

பரீட்சைகளின் பின் அடுத்த நாள் பேராதெனிய கிளம்ப போவதினால் முதல் நாள் முழுவதும் MI முழுதும் சுற்றி நடந்து வாழ்ந்த இடங்களை நினைவு படுத்தினோம். ரொம்பவும் எமோஷனல் ஆன தருணம் அது!எங்களை போன்ற தமிழ் சங்கங்கள் MIக்கு புதிதல்ல. ஒவ்வொரு வருடமும் அது ஒவ்வொரு புதிய சங்கங்களை கண்டு கொண்டு தான்  இருக்கிறது. ஆனால் எங்களுக்கு எவ்வளவு தான் கசப்பான அனுபவங்கள் அங்கே  கிடைத்திருந்தாலும் அந்த வாழ்க்கை தனிதான்!


No comments:

Post a Comment