Sunday, May 11, 2014





2

எதை எதிர்பார்த்து ஓடினாளோ தெரியாது, ஆனால் சத்தியமாய் இந்தக்காட்சியை எதிர்பார்க்கவில்லை! 

வீட்டின் இடதுபுறம் மரம் ஒன்றின் அருகே ஒரு நெடியவன் விழுந்து கிடக்க முனகியபடி அவன் சட்டைக்காலரைப்பற்றி இழுக்க முயன்றுகொண்டிருந்தது ஜூலியன்!

ஜூலியா!!!!!

இவள் குரலுக்கு தலையை திருப்பி பார்த்துவிட்டு அது தன் வேலையை தொடர மெல்ல மெல்ல அருகில் சென்றாள் அபி. மனதிலோ ஆயிரம் கேள்விகள்!

அந்த நெடியவனுக்கு வயது பின்னிருபதுகளில் இருக்கலாம், சிவப்புக்கும் மாநிறத்துக்கும் இடையில் கற்றையாய் மீசையுடன் அழகாக இருந்து தொலைத்தான்! யாரோ எவனோ என்றே தெரியவில்லை இந்த நேரத்தில் உனக்கு சைட் கேக்குதா? என்று மனதுக்கு ஒரு குட்டு வைத்தவள் அவனை கவனமாய் ஆராய்ந்தாள். 

நெற்றியில் ஒரு கீறல் காயம், லேசாய் ரத்தத்தை பூத்திருந்தது. மரக்கீறல்களாக இருக்க வேண்டும்.

லெதர் கோட் எதுவுமின்றி வெறும் ஜீன்ஸ் டீஷர்ட்டில் இருந்தான், இந்தக்குளிருக்குள் இப்படி ஊர்வலம் கிளம்பினால் விறைக்காமல் என்ன ஆவான்? பைத்தியமா?? ஒரு கோட் கூடவா கிடையாது!

நெற்றிக்காயத்துக்கு இவன் இப்படி அசையாமல் விழுந்து கிடக்க முடியாது, குளிரில் விறைத்து தான் கைகால் வெட்டிக்கொண்டு விழுந்திருக்கிறான்!

அவனிடம் எந்த ஆயுதங்களும் இல்லை, ஜீன்ஸில் இருந்த பர்சும் உருப்படியான தகவல் எதையும் தரவில்லை!

உடனடியாய் முதலுதவி செய்தாக வேண்டுமே!
வீட்டுக்குள் எடுத்துப்போகவும் பயமாக இருந்தது. யாரோ எவனோ!

உள்ளே வந்தபின் எப்படி நடந்து கொள்வானோ?

நடிக்கிறானோ? 

தனியாக வந்தானா? இல்லை கூட்டம் ஏதும் இருக்குமோ???

சிந்தனைகள் சுழற்றியடிக்க நின்றவள் ம்ஹ்ம் என்ற வேதனை முனகலுடன் உடலை குறுக்கியவனை கண்டதும் ஒரு கணமும் தாமதிக்க வில்லை!

வருவது வரட்டும்.

எண்ணிவிட்டாளே தவிர அவனை உள்ளே கொண்டுபோவது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை! அநியாயத்துக்கு கனமாக இருந்தான்! கையை பிடித்து இழுத்துப்பார்த்தவள் அவன் கொஞ்சமும் அசையாதிருக்க தோள் புறம் வந்து பற்றி இழுத்தாள். ஜூலியனும் மறுபுறம் உதவிக்கு வந்தது. இருவருமாய் கொஞ்சம் கொஞ்சமாய் அவனை இழுத்து கணப்பின் அருகில் விட்டு விட்டு கதவை தாளிட்டாள்.

இப்போது அவன் முகம் நன்றாகத்தெரிந்தது! 

எங்கேயோ பார்த்த முகம் போலிருந்தாலும் அவளுக்கு நினைவே வராதிருக்க அந்த சிந்தனையை ஒதுக்கிவிட்டு முதலுதவிப்பெட்டியோடு வந்தாள்.

அவன் காயத்தை டெட்டோல் கொண்டு துடைத்து பஞ்சில் மருந்திட்டு பிளாஸ்டர் கொண்டு ஓட்டினாள். மருந்து காயத்தில் பட லேசான எரிச்சல் வந்திருக்க வேண்டும், முனக ஆரம்பித்தான். இன்னும் நடுக்கம் நிற்கவில்லை.

அவன் உடைகள் முழுதும் ஈரமாக இருந்தன, முதலில் மாற்ற வேண்டுமே! இவனது அளவுக்கு அவள் எங்கே போவாள்?

ஓடிப்போய் தன்னுடைய தொள தொள பான்ட் பெரிய டீஷர்ட் ஒன்றுடன் வந்து தயக்கமாய் அவன் டிஷர்ட்டை கழற்ற முயன்றாள். தலைவழியே தான் கழற்றியாக வேண்டும். மெதுவாக அவனை உயர்த்தியபடி அவள் டிஷர்ட்டை கழற்ற அவன் வாய் கொஞ்சம் பெரிதாக எதையோ முனகியது!

என்ன சொல்கிறான்? உற்றுக்கேட்டாள்!

வேண்டாம்!!!!

அடிங்கோய்யால!!! நான் என்ன உன்னை ரேப் ஆ பண்ண போறேன்!!! பாவம்னு பாக்குறேன்! 
இல்லைனா நடக்குறதே வேற!

கோபம் வந்தாலும் சும்மா இருக்க முடியாமல் அவன் மார்பை பரபரவென்று துடைத்து கொலோன் இட்டு அங்கங்கே தேய்த்து விட்டு தன டிஷர்ட்டை மாட்டிவிட்டாள்.

ஜீன்சை மாற்றவேண்டாம், டீஷர்ட்டை கழற்றியதற்கே வேண்டாம் என்றவன் ஜீன்சை கழற்றினால் எழுந்தபின் என்ன சொல்வானோ! 
வேண்டாம்.

கணப்பின் அருகில் அவனை விட்டு விட்டு அருகே அமர்ந்தவள் அவனது ஈரமான தலையை கண்டதும் அனிச்சைசெயலாய் எழுந்து போய் தலையை துவட்ட ஆரம்பித்தவள் தான் செய்வது புரிந்ததும் விதிர்த்துப்போய் விலகி கண்களைத்திறந்த படி தன்னையே சுவாரஸ்யமாக பார்த்துக்கொண்டிருந்த அந்த நெடியவனை கண்டதும் ரத்தமென சிவந்தாள்!

சட்டென சுதாகரித்துக்கொண்டு என் பெயர் அபி! இது என் வீடுதான்! நீங்கள் வெளியே விழுந்து கிடந்தீர்கள்.அதுதான் உள்ளே அழைத்துவந்தேன்! என் பான்ட் பெரிதாக இருந்தாலும் மாற்றிக்கொள்ளுங்கள், நான் சூடாக எதையேனும் எடுத்து வருகிறேன்என்றபடி அவன் கண்களை பாராமல் உளறி விட்டு சமையலறை நோக்கி விரைந்தாள்.

ஹீட்டரை ஆன் செய்து காபிக்கு தயார் செய்துவிட்டு சமையலறை மேடையினை இறுகப்பற்றி தன்னை ஆசுவாசப்படுத்த முயன்றாள் அபி.

என்ன இது? அவள் பார்க்காத பழகாத ஆண்களா? ஏன் இப்படி நடந்து கொண்டாள்? என்ன நினைத்துக்கொண்டிருப்பான்! முதலுதவியல்லவே அது! சட்டென்று எழுந்த உந்துதலில் அல்லவா நடந்தது!

காபியை எடுத்துக்கொண்டு ஹாலுக்கு வந்தபோது அவளது பான்ட் அவனுடலில் இருந்தது! பெரிதாகவும் இல்லை சிறிதாகவும் இல்லை! அவனுக்கென்றே செய்தது போல! விழிப்பு வந்திருந்தாலும் அவன் எழ முடியாமல் கம்பளியை சுற்றிக்கொண்டு அமர்ந்திருந்தான். அவள் கொடுத்த காபியை வாங்கி சொட்டுசொட்டாய் பருகியவனை பார்த்தபடி அபி சோபாவில் அமர்ந்திருந்தாள்.

அனந்தன்!

என்னது????

என் பெயர் அனந்தன் என்றேன்! அவன் குரலில் சற்றே ஏளனம் தெரிந்ததோ?

..

வண்டியில் வந்துகொண்டிருந்தேன், வண்டியை மறித்து யாரோ லிப்ட் கேட்க நிறுத்தினேன், அவ்வளவுதான் தெரியும்! என்னை அடித்துப்போட்டு விட்டு வண்டி பொருட்களோடு போய் விட்டார்கள்! ஏதேனும் வீடு தென்படுகிறதா என்ற படியே கஷ்டப்பட்டு வந்தேன்! உன் வீட்டின் முன் விழுந்து விட்டேன் போலிருக்கிறது! ரொம்ப நன்றி எல்லாவற்றிற்கும்

பரவாயில்லை, நீங்கள் சரியானதும் போலிஸ் கம்ப்ளைன் அல்லது வேறு நடவடிக்கை எடுக்கலாம்! ஏதாவது சாப்பிடுகிறீர்களா?

எனக்காக சிரமப்பட வேண்டாம்!

ஹா ஹா நான் ஒன்றும் அவ்வளவு சமையல் வித்தகி இல்லை! இருப்பதை சூடாக்கி தரப்போகிறேன் அவ்வளவுதான்!

ஹா ஹா ஹா சரி!

**************

சமையலறையில் அபியின் சிந்தனை தாறுமாறாக ஓடிக்கொண்டிருந்தது! கணப்பின் முன் தூங்கலாம் என்று எண்ணியிருந்தவள் இனி இருக்கும் ஒரேயொரு தனியறையில் தான் படுத்தாக வேண்டும்! குளிர் வாட்டப்போகிறது! பேசிய வரையில் படித்தவன், நல்ல்லவன், டீசண்டாக தான் தெரிகிறான்! நாளை காலை இவனை எப்படி கிளம்பு சொல்வது? வண்டி வேறு இல்லை அவனுக்கு! ஏனோ அவனை திருடர்களிடம் அடி வாங்கும் சாந்தமான காரோட்டியாய் அவளால் கற்பனை செய்ய முடியவில்லை!

அதுவும் உண்மை தான் சொன்னான் என்பதில் என்ன நிச்சயம்??? அவளே இங்கு உயிருக்கு பயந்து தான் வந்திருக்கிறாள், இவன் அவர்களுடைய ஆளாக இருப்பானோ? இருக்காது, இவன் அந்த கொடியவர்களை சேர்ந்திருக்க மாட்டான்! 

எதுவாயிருந்தாலும் நடப்பது நடக்கட்டும் காலையில் பார்த்துக்கொள்ளலாம்! 
பாஸ்தாவை ஒருவாறு ஒப்பேற்றி எடுத்துக்கொண்டு ஹாலுக்கு வந்த அபிக்கு சிரிப்புத்தான் வந்தது!

கம்பளியை தன்னைச்சுற்றி இறுக்கிக்கொண்டு கணப்பின் முன்னே வட்டமாய் அனந்தன் சுருண்டு கிடக்க கிட்டத்தட்ட அவன் வயிற்றில் சுருண்டு கிடந்தது ஜூலியன்! இருவருமே நல்ல தூக்கத்தில் இருந்தார்கள்! 

யாரிடமும் சட்டென்று ஒட்டாத ஜூலியன் இவனிடம் நிமிடத்தில் பழகி ஒட்டிக்கொண்டது எப்படிஎன்ற மில்லியன் டாலர் கேள்வி மற்றக்கேள்விகளோடு மனதில் ஒட்டிக்கொள்ள பாஸ்தாவை பிரிட்ஜில் வைத்து விட்டு கணப்பின் கதகதப்பு கொஞ்சமும் எட்டாத அறைக்குள் நுழைந்து தாளிட்டு விட்டு கம்பளிகளுக்குள் புகுந்து கட்டிலில் விழுந்தாள் அபி! அவளது துரத்தல்கள், பயங்கள், இன்றுடன் ஆரம்பித்த தலைமறைவு வாழ்க்கை, அனந்தன் என்று சிந்தனைகள் தொடர அன்று தூக்கம் இமைகளை தழுவ வெகுநேரம் ஆயிற்று அவளுக்கு!

***************


கண்களைக்கசக்கி கொண்டு எழுந்தவளுக்கு முதலில் எதுவுமே புரியவில்லை, எங்கிருக்கிறாள் அவள்? வழக்கமாய் விழிக்கும் பிங்க் நிற திரைச்சீலை, அதன் மேலுள்ள அம்மாபடம் எதுவும் இல்லையே! பிறகு தான் ஷெரில் வீடு, அனந்தன் எல்லாம் வரிசையாய் நினைவுவர பதறியடித்து எழுந்தவள்

இதமான கதகதப்பு அறையை சூழ்ந்திருப்பதை உணர்ந்தவள் குழந்தையின் உற்சாகத்துடன் கணப்பை ஓடிச்சென்று பார்வையிட்டாள், பச்சை விளக்குடன் தான் இயங்குவதை சொல்லிற்று அது!

அதன் மின்னிணைப்பில் ஒரு சின்ன பிரச்சனை இருந்தது. சரிசெய்துவிட்டேன்! ஆண்குரலில் திகைத்து திரும்பியவள் சமையலறையில் இருந்து எட்டிப்பார்த்து பதில் சொன்ன அனந்தனை புதியவனைப்போல பார்த்தாள்!

இப்போதுதான் அவன் முழு உயரமும் தெரிகிறது! 

நேற்று அணிந்திருந்த உடைகளை வாஷிங் மாசினில் போட்டு எடுத்திருந்ததை எடுத்து அணிந்து கொண்டிருந்தான். புன்னகையில் இருபுறமும் கன்னம் குழிய தடித்த கம்பி முடிக்கற்றைகள் நெற்றியில் விழுந்து வழிய பல் கூட துலக்காத அவளை தாழ்வுணர்ச்சிக்கு உள்ளாக்கினான்! எட்டுமணிக்கு பின்னும் தூங்குகிறாள் என்று தப்பாக எண்ணுவானோ!ச்சே! நான் தான் வீட்டுக்காரி! அவன் விருந்தாளி! அதுவும் அழையா விருந்தாளி! அவன் என்ன நினைப்பது என்று எண்ணியபடி சமையலறைக்குள் நுழைந்தாள் அபி!

புதிதாய் பொரித்தேடுக்கப்பட்ட ஸ்ப்ரிங் ரோல்கள் வரிசையாய் வீற்றிருக்க இறைச்சிதுண்டங்கள் சில மசாலா தடவிக்கொண்டு கிரிலில் வெந்து கொண்டிருந்தன! தேர்ந்த சமையலாளின் லாவகத்துடன் தன் வீட்டில் இயங்குவது போன்ற உரிமையுணர்வுடன் அவன் நடமாடியது அபியை வெகுவாக கவர்ந்தது! 

ம்ஹம்ம்ம்ம்...

குட் மோர்னிங் ஜூலியன்!

அவன் தான் காலை பசியுடன் என்னை எழுப்பியது! உன்னிடம் அனுமதி கேட்காமல் அவனுக்கு உணவு தயாரித்து கொடுத்துவிட்டேன்! அப்படியே எனக்கும்! மன்னித்துக்கொள், அவ்வளவு பசி!

ஹா ஹா பரவாயில்லை! பாஸ்தா இருந்ததே!

சமையல் வித்தகி இல்லை என்பது சமையலறைப்பக்கம் போனதே இல்லை என்பதை குறிக்கும் என்பது உன் பாஸ்தாவை பார்த்து தான் புரிந்தது எனக்கு! ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை நான்!

ஏய்!!!!!!!!!

பிடிக்கவில்லைஎன்றால் நேராக சொல்லியிருக்கலாம்! இப்படி பாஸ்தாவை காட்டிஎல்லாம் மிரட்டி ஓடவைக்க கூடாது! ஹா ஹ ஹா....

அவன் சிரிப்பும் கேலிப்பார்வையும் சீண்டலாய் அவளுக்குள் ஊடுருவ குழம்பிப்போனவலாய் எல்லாம் நேரமப்பா! நீங்கள் சாப்பிடுங்கள்! குளித்துவிட்டு வருகிறேன்! என்ற படி அவசரமாய் அவ்விடம் விட்டு அகன்றாள் அபி

இடத்தை கொடுத்தால் மடத்தை பிடுங்குவது என்பது இதுதானா??

*****************


வேறொன்றுமில்லை, பிடிப்பதில்லை அவ்வளவுதான்!

அதுதான் ஏன்???

தெரியலையே! எங்கம்மாவும் இறைச்சி சாப்பிட மாட்டாங்களாம், எனக்கும் அந்த டேஸ்ட் பிடிக்கறதில்லை!

மேஜையில் எதிரே அமர்ந்திருந்து அவள் சாப்பிடும்போது பேசிக்கொண்டிருந்தவன் எழுந்து சுவரில் பொருத்தப்பட்டிருந்த வானொலியை ஆராய்ந்தான்.

அது வேலை செய்யலை 

பார்க்கலாம்! என்றபடி அதை திறந்து உள்ளே எதையோ திருகினான்.

ஹேய்! அதை என்ன பண்றீங்க? என்னை ஷெரில் கிட்ட பைன் கட்ட...

அதற்குள் வானொலி உயிர்த்துவிட்டிருந்தது!

வாவ்!

அதான் சொன்னேனே! யானையின் பலம் தும்பிக்கை மனிதனின் பலம் நம்பிக்கை! என்று ராகம் போட்டு சொல்லிவிட்டு கைகளால் மூக்கைப்பற்றி தும்பிக்கை போல அவன் ஆட்டிக்காண்பிக்க சிரிப்பில் குலுங்கினாள் அபி!

அழகான வீடு! ஹனி மூன் வர்றதுக்கு சூப்பர் இடம் தெரியுமா??? 

இப்போது மட்டும் என்ன? தனியாய் ஆணும் பெண்ணுமாய்....கடவுளே!

இந்த ரணகளத்துல இவருக்கு ஒரு கிளுகிளுப்பு தேவைப்படுது! வெடுக்கென்று சொல்லிவிட்டு எழுந்தது கைகழுவப்போனாள் அபி.

பின்னே? அவள் உயிருக்கு பயந்து வந்திருக்கிறாள்! அவனோ எல்லாவற்றையும் திருடனிடம் கொடுத்து வந்திருக்கிறான், இப்போது இந்தப்பேச்சுத்தான் குறைச்சல்!

கடும் பனிப்புயல் அபாயத்தால் பாடசாலைகள் காலவரையறையின்றி மூடப்பட்டிருக்க மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று கேட்டுக்கொள்ள படுகிறார்கள்! பிரதான சாலைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கிறது!திடும்மென வந்த ரேடியோ அறிவிப்பை செவிகள் உள்வாங்கிக்கொள்ள முன்னரே இருவர் பார்வையும் கலக்கத்துடன் ஒருவரையொருவர் பார்வையிட்டன!

சட்டென்று கைகளை மேலே தூக்கிய அனந்தன், ரிலாக்ஸ் அபி, நான் இங்கேயே தங்கி விட மாட்டேன் பயப்படாதே! என்னை அழைத்துச்சென்று பிரதான வீதியில் விடச்சொல்லலாம் என்றிருந்தேன், இப்போது அது முடியாது! ஒரு ஓவர்கோட் மட்டும் கொடு போதும், நான் போய்க்கொள்வேன்! பயப்படாதே! என்று அறிவித்தான்

நான் போகச்சொல்லி கேட்டேனா? இந்தக்காலநிலையில் உங்களை அப்படியெல்லாம் அனுப்ப முடியாது! எல்லாம் சரியானதும் நானே கொண்டுபோய் விடுகிறேன்! உளறாமல் வேலையை பாருங்கள் என்று படபடத்தாள் அவள்!

அவன் முகம் ஆனந்தத்தில் ஒளிர்ந்ததோ??

உனக்கு கொஞ்சமும் ஆட்சேபனை இல்லைத்தானே?

இல்லை என்கிறேனே!

சரி ஒரு நிபந்தனை! ச்சமாய் என்னை பார்ப்பது, சந்தேகம் எல்லாவற்றையும் நிறுத்திவிட வேடும்! நான் கொஞ்சம் நல்லவன் தான்! ஒரு நண்பன் என்று நினைத்துக்கொள்ளேன்! இப்போதைய நிலையில் வேறு எந்த எண்ணமும் எனக்கில்லை!
அவன் என்ன கூறுகிறான் என்பது புரிய லேசாய் முகம் சிவந்தவள் சரி என்று தலையாட்டி வைத்தாள்! விசித்திரமாய் ஒரு நிம்மதியும் இனிமையும் அவளுள்ளே பரவியது ஏனென்று அவளுக்கு காரணம் தெரியவில்லை!





No comments:

Post a Comment