Sunday, May 11, 2014





3

டைகர்! 

வர்றியா ஜாலியா கொஞ்ச தூரம் போயிட்டு வரலாம்!

அறையில் தன் ஏற்கனவே அடுக்கி முடித்திருந்த பொருட்களை அபி நிமிர்ந்தாள்.

டைகர்??????????
கொஞ்ச தூரம் வெளியே?

கையிலிருந்த பேப்பரை அப்படியே போட்டு விட்டு ஹாலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்!

அவனருகில் ஏதோ பதற்றமும் பரபரப்புமாய் உணர்ந்ததால் ஏதோ வேலை போல அறைக்குள் பின் வாங்கியிருந்தவளுக்கு ஹாலில் ஜூலியனின் தலையை வருடிய வண்ணம் நின்றவனை கண்டு மீண்டும் அவையெல்லாம் மனதில் ஊர்வலம் வர ஆரம்பித்தன.

எப்போதிலிருந்து ஆணைக்கண்டதும் தடுமாறும் பழக்கம்? ச்சே!

அவன் பெயர் ஜூலியன்! டைகரா????

எனக்கு அந்த பெயர் பிடிக்கவில்லை! என்ன அழகாய் உயரமாய் பருமனுடன் இருப்பவனை ஜூலியா ஜூலி என்று நீ பெண் பெயரில் கூப்பிடுவது கொஞ்சமும் பொருந்தவில்லை!

அவன் உங்களிடம் பெயர் மாற்றச்சொல்லிக்கேட்டானா?

ஆண் மனம் இன்னொரு ஆணுக்கு தான் புரியும் என்னடா? என்றபடி அனந்தன் ஜூலியனின் தலையை வருடவும் அவன் கைகளில் வாகாய் சாய்ந்து கொண்டது அது!

பார்த்தாயா?

கடுப்பாகிப்போனவள் இந்த நேரத்தில் எங்கே கிளம்புகிறீர்கள்? ரேடியோ, டிவியில் எல்லாம காட்டுக்கத்தல் கத்துகிறார்கள் புயல் வரப்போகிறதென்று, நீங்கள் பாட்டுக்கு அவனையும் இழுத்துக்கொண்டு போகப்பார்க்கிறீர்களா? என்று சூடாக கேட்டாள்

நான் ஒன்றும் அதிக தூரம் போகவில்லை. வெளியே ப்லரீஸ் தான் இருக்கிறது. புயல் தொடங்குமுன் வந்துவிடலாம்!

அப்படியென்ன அவசரம் வெளியே?

அட மடப்பெண்ணே என்பதைப்போல அவளை மேலிருந்து கீழாக பார்வையிட்டவன் புயல் வந்தால் கரண்ட் கட் ஆகும், ஹீட்டர் வேலை செய்யாது! சுள்ளி தடிகள் விறகுகள் இருந்தால் உதவும். ஈரமாக இருந்தாலும் சமாளித்துக்கொள்ளலாமே!என ஒருவித எகத்தாளமாய் சொல்ல 

அடச்சே! ரேஞ்சர் என்று பெருமை பேசு! இதைக்கூட யோசிக்க தெரியவில்லை! என்று வெட்கமாகிப்போய் விட்டது அபிக்கு!

சாரி..நான் அதை யோசிக்கவில்லை!

நீ எதைத்தான் யோசித்தாய்? 

என்னது???

உனக்கு காட்டுக்கு வர விருப்பமா???

பின்னே??? நான் மட்டும் தனியே இருப்பதா??? ஜாலியாக போகலாம்! நானும்! நானும்! அவள் குழந்தையாய் துள்ள அவன் முகம் கனிந்தது.

காட்டிலேயே உலவுபவள்,உன்னிடம் போய் விருப்பமா என்று கேட்டது என் தவறுதான் ஹா ஹா!

என்னது??? இப்போ என்ன சொன்னீர்கள்???? உங்களுக்கெப்படி?????????

அவன் முகம் லேசாக சிவந்ததோ?? “ தனந்தனியாய் இந்தக்காலநிலையில் விருப்பமில்லாதவளா வந்து இருப்பாள் அதைத்தான் சொன்னேன்!

சமாளித்தானோ? சந்தேகத்தின் முதல் விதை அப்போதுதான் அபி மனதில் விழுந்தது. ஒற்றை வார்த்தையை வைத்து எப்படி சொல்வது? உண்மையாகவே அப்படியும் இருக்கலாம் தானே!

ஆமாம், நேற்றிலிருந்து கேட்கவேண்டுமென்றே தோன்றியது. தன்னந்தனியாக இந்தக்காலநிலையில் ஏன் இந்த வனவாசம்?

உண்மையில் அவனுக்கு அவளை முன்னமே தெரிந்திருக்குமானால் அவன் புத்திசாலி! எண்ணம் ஓடினாலும் அவன் கேள்வி அவள் மனதை அசைத்துத்தான் பார்த்தது! கண்கள் கலங்கும் போல இருக்க லேசாய் திரும்பிக்கொண்டவள் அப்படியே பதில் சொன்னாள்.

கொஞ்ச நாளைக்கு மனிதர்களை தவிர்க்க வேண்டும் போலிருந்தது! அவ்வளவுதான்! எல்லாம் சமயம் வரும்போது சொல்கிறேன்!

அதாவது முழுதாக என்மேல் நம்பிக்கை வரும்போது!
சட்டென்று திரும்பி அவனை கூர்மையாக பார்த்தபடி புரிந்து கொண்டீர்கள்!அதை விட்டுவிட்டு உடைகள் எடுத்துத்தருகிறேன் வாருங்கள் என்று சொல்லிவிட்டு அவனை எதிர்பாராமல் திரும்பி நடந்தாள். அவன் தொடர்கிறான் என்று காலடியோசை சொல்லிற்று!

****************



இலைகளைத்தொலைத்த மரங்கள் பனித்தொப்பி மாட்டிக்கொண்டு துளித்துளியாய் நீர்தெளிக்க லேயர் லேயராக உடை அணிந்திருந்தாலும் ஊடுருவிய குளிரும் காடும் பனித்தூவல்களும் காட்டின் அழகும் அபிக்குள் உற்சாகத்தை பிரசவிக்க வழக்கம் போலவே குதித்தபடி நடந்துகொண்டிருந்தாள். ஜூலியன் அவளைத்தொடர ஷெரிலின் தநதையின் ஆடைகளை அணிந்து அவளுடைய கமராவையும் மாட்டிக்கொண்டு அனந்தன் அவர்களை தொடர்ந்து கொண்டிருந்தான்.

பனி ஒன்றாய் இணைத்திருந்தாலும் நுனியில் நீட்டிக்கொண்டிருந்த கிளைகளை சற்றே உயரமாய் அவள் துள்ளி இழுக்க இளகிய பனித்துளிகள் அவளை அபிஷேகம் செய்தன. ஹா ஹா கலகலவென வாய் விட்டு சிரித்தாள் அபி.

கிளிக்...

சட்டென திரும்பியவள் கமராக்கண்களை தன்மீது பொருத்தியிருந்த அனந்தனை இடுப்பில் கை தாங்கி முறைத்தாள்.

சீனரி மட்டும் தான் போட்டோ எடுக்கணும்! 
என்னை எதுக்கு எடுக்கிறீங்க?

ஸ்ஸ்ஸ் அடங்கும்மா..இவங்க பெரிய மாடல்! அப்படியே போட்டோ எடுத்து நாங்க வித்துட்டாலும்... பேசாம வாம்மா! போட்டோ எடுக்கறமே னு சந்தோஷப்படாம!!! 

என்னது?? அவள் என்ன மொக்கை பிகராமா?? அவளுக்கிருக்கும் டிமான்ட் தெரியாமல் பேசுகிறான்! கோபத்தில் மூக்கு நுனி சிவக்க தொம் தொம் மென கால் வைத்து நடந்தாள் அவள்.

கவனம் அக்கா கையிலிருக்கும் கத்தி வெட்டப்போகுது! டைகர்! தள்ளி வாடா...

அவள் திரும்பியும் பார்க்கவில்லை!

ஹலோ....

ஹலோ..

கோபமா? என் மேல் கோபமா?

கிளிக்...

அவ்வளவுதான் திரும்பி நின்று நன்றாக முறைத்தாள் அவள்

கைகளை தலைக்கு மேல் உயர்த்திக்கொண்டவன் கண்களில் ஒரு கெஞ்சல் பாவனையை கொண்டு வந்து இதெல்லாம் ஒரு ஞாபகத்துக்கு தானே. இதுக்குப்பிறகு யாரோ எவனோ போடான்னு போய்டப்போறே? இந்த போட்டோஸ்லாம் அனந்தன்னு ஒரு பைத்தியக்காரன் எடுத்தான்னு ஞாபகம் இருக்கும்ல

விசித்திரமான வகையில் அந்த சொற்கள் அவளை அசைத்தன. இனி அவன் யாரோ அவள் யாரோ தானே! 

புயல் வேற வரப்போகுது!

அதற்குமேல் அவன் பேச வேண்டியிருக்கவில்லை. மூவரும் இணைந்து நடந்தார்கள்.

வழியில் எதிர்ப்பட்ட சின்னச்சின்ன சுள்ளிகள் தடிகளை நேர்த்தியாய் வெட்டி அவன் சேகரிக்க சில இடங்களில் அவளும் மரத்து மீது ஏறி வெட்டிக்கொடுத்தாள். கேலியும் கிண்டலுமாய் அவன் பேசிக்கொண்டே உடன் வர நேரம் போனதே தெரியவில்லை, புயலும் வரவில்லை. இருவருக்கும் திரும்பிப்போக மனமும் வரவில்லை.

சும்மா வந்து கொண்டிருந்த ஜூலியனை சீண்டி கோபப்படுத்தி விட்டு அவள் ஓட அவன் துரத்த அவன் புகைப்படங்களாய் எடுத்து தள்ள பாதை நீண்டு கொண்டே போனது!

அவளது ஆடைக்குள் விளையாட்டாய் பனிச்சிதறல் களை அவன் போட்டுவிட்டு சிரிக்க கைகளில் முள் தடிகளோடு பனியை அள்ளியவள் அவனைத்துரத்தியபடி ஓடினாள். ஜூலியன் அவன் கட்சியில் சேர்ந்து வெகுநேரம் ஆகிவிட்டது. அவனுடனேயே ஓடிக்கொண்டிருநதது.

அனந்தன்!!!! இங்கே கொஞ்சம் வாங்களேன்!

இது பழைய டெக்னிக்!

ப்ச்..நான் ஒன்றும் பண்ண மாட்டேன்! ஒன்றை காட்டுகிறேன்! எவ்வளவு பெரிய பழம் பாருங்களேன்! எவ்வளவு அழகாய் இருக்கிறது!

அவள் குரலில் உண்மையை கண்டிருக்க வேண்டும். அவசரப்பட்டு எதையும் வாயில் வைத்துவிடாதே நான் வருகிறேன்”. அங்கிருந்தே எச்சரித்தபடி அவள் பக்கமாய் ஓடிவந்தான் அனந்தன்!

இவர் பெரிய இவர்!!! எல்லாமே தெரியுமாக்கும்! 
நொடித்துக்கொண்டாலும் அவள் காத்திருந்தாள்.

சிவப்பும் மஞ்சளுமாய் அப்பிளை விடவும் பெரிதாக குலைகுலையாய் பசிய இலைகளுக்கு மேலாய் காய்த்துக்கிடந்த பழங்களை சற்று நேரம் ஆராய்ச்சிப்பார்வையாய் பார்வையிட்டவன் சட்டென நெருங்கி இலையொன்றை பறித்து கசக்கினான். கருஞ்சிவப்பு நிற சாறாய் அது கையெங்கும் வழிய கையை இவள் புறம் நீட்டியவன் இதை பனி ஆப்பிள் என்பார்கள்! பனியை தாங்கும் தன்மை கொண்டது. சருஞ்சிவப்பு சாறை கொண்டுதான் இனங்காண முடியும். என்றபடி பறித்து நறுக்கென கடித்தவன் ஒருநிமிடம் கண்மூடி அனுபவித்து விட்டு என்ன ருசி தெரியுமா? சாப்பிட்டு பார் என்ற படி இன்னொன்றை பறித்து இவள் புறம் நீட்டினான். 

இவ்வளவு நேரமும் அவனையே பர்த்திருந்தவள் அவன் கையை விலக்கி விட்டு குலைகளில் அவளைப்பார்த்து கண்சிமிட்டிய அப்பழங்களில் ஒன்றை தன் கையாலேயே பறித்து கடித்தாள்.

உண்மைதான்! அவ்வளவு இனிப்பு! அவளது முகபாவங்களையே பார்த்து நின்றவன் முகத்திலோ இப்போது முறுவல் நன்றாக விரிந்திருந்தது!

பறித்துக்கொண்டு போவோமா???

ம்ம்ம்..

எல்லாக்குலைகளையும் அவள் பறிக்க முற்பட நம்மிருவருக்கும் இரண்டு குலைகள் போதும்! பங்கிட்டு சாப்பிடும் பழக்கமே இல்லையா? வேறுயாரும் சாப்பிடட்டுமேஎன்று நிஜமாகவே அதட்டினான்.

லேசாய் முகம் சிவந்தவள் எப்படி இதெல்லாம் தெரியும் உங்களுக்கு? காடுகள் எல்லாம் நல்ல பழக்கமா?” என்று பேச்சை மாற்றினாள்.

இப்போதாவது கேட்டாயே! தனியாய் ஒருத்தன் வந்திருக்கிறான். யார் என்ன என்று இதுவரை கேட்டுக்கொள்ளவே இல்லை!

என்ன ஆகப்போகிறது சொல்லுங்கள். கெட்டவர் என்றால் எப்படியும் உண்மை வராதென்னும் போது?

எல்லாவற்றுக்கும் ஒரு பதில் வைத்திருப்பாயே!! 
என்று சலித்துக்கொன்டாலும் தான் ஹோட்டல் கிளைகள் வைத்து நடத்தும் தொழிலதிபர் என்றும் புகைப்படம் எடுப்பது தன் பொழுதுபோக்கு . மாதக்கணக்கில் காடுகளில் தங்கியிருக்கிறேன், அம்மா சின்னவயசிலேயே இறந்து விட தந்தையோடுதான் வளர்ந்தேன். படிப்பெல்லாம் வெளிநாட்டில் தான் என்று தன்னைப்பற்றி சகலமும் சொன்னான்.

பெரிய ஆள்தான்! இவ்வளவு பழக்கம் இருந்தும் தனியே திருடனிடம் மாட்டிக்கொண்டதை தான் நம்ப முடியவில்லை. உங்கள் தோற்றத்தை பார்த்தால் தனியாக மூவரை அடித்து திருடுவீர்கள் போலிருக்கிறது!

ஏய்!!!

ஐயோ அவ்வளவு பலசாலியாய் தெரிகிறீர்கள் என்று சொன்னேன்பா!

அது!!!! நண்பன் ஒருவனின் பார்ட்டிக்கு போய் விட்டு வந்துகொண்டிருந்தேன், குடித்திருந்தேன். நடப்பது என்னவென்று எனக்கே தெரியவில்லை! 

ஓ அதுதான் ஒரு மார்க்கமாக விழுந்து கிடந்தானா?

ஏய் ஏய் ஏய் அங்கே கால் வைக்கா..................

தொம்..............

லொள் லொள்...

ஐயோ!! சொல்லி முடிக்க முதல்...ஹ ஹா ஹா

பனியும் சருகுகளும் மறைத்திருந்த குழியொன்றில் கொண்டுவந்த விறகுக்குச்சி மூட்டையோடு விழுந்திருந்தாள் அபி!

நான் ஒருத்தி விழுந்து கிடக்கிறேன் சிரிப்பா.... 
அவளுக்கு அழுகை வந்து விட்டது!

சரி சரி சிரிக்கவில்லை. நான் சொல்வதை கவனமாக கேள். மெல்ல அந்தப்பக்கம் இருக்கும் சுள்ளிகளின் மேல் கால் வைத்து வந்து நான் கைநீட்டுகிறேன் பார். அப்படியே என்கையில்....

...

அந்த விறகு மூட்டையை கவனமாக கொடு!!!!

அனந்தன்!!!!!!!!!!!!!!!!!!!!!

பின்னே? எவ்வளவு கஷ்டப்பட்டு சேர்த்தோம்! 
நானும் இவனும் குளிரில் விறைத்து சாகவா??? 

கோபமாகி அந்த மூட்டையை தூக்கி அவனிடம் வீசியவள் எனக்கு யார் உதவியும் தேவையில்லை என்றபடி குழியின் கரைக்கு வந்து படி போல இருந்த விறகுக்குச்சிகளில் கால் வைத்தாள். 

அங்கே கால் வைக்காதே!! அவன் கத்தி முடிக்க முன்னரே அது உள்நோக்கி சரியத்தொடங்க சட்டென எக்கி அவள் இடைபற்றி தூக்கி வெளியே எடுத்து நிறுத்தினான் அனந்தன்.

அவள் உடல் சமநிலைக்கு வந்தபின் கையை எடுத்துவிட்டாலும் அவள் அருகாமையில் இருந்து நகரவில்லை. அவளை நோக்கி குனிந்த படி அவள் கண்களுக்குள்ளே ஏதோ பார்த்துக்கொண்டிருந்தான்.

இவ்வளவு நேரமும் அடித்த கூத்தில் அவன் நெருங்கியவன் போல மாறிவிட்டிருந்தாலும் அதையெல்லாம் மீறிய ஒரு உணர்வு அவளுக்குள் வந்தது. அவனோடு அவள் பழகியிருக்கிறாள்!

அனந்தன்... 

அவள் குரலில் அவன் சமநிலைக்கு வந்து சற்றே விலகி இன்னமும் குரைத்துக்கொண்டிருந்த ஜூலியனின் தலையை தடவ ஆரம்பித்தான்.

அனந்தன்!!

ம்ம்ம்

என்னை இதுக்கு முன்னே எங்காவது பார்த்திருக்கீங்களா?

அவன் முகம் லேசாய் மாறிப்போனது அவளது பிரமையா??

இல்லை அபி. நேத்துதான் பார்த்தேன் ஏன்?

இல்லை. எனக்கு எங்கேயோ பார்த்த பழகிய ஞாபகம்! சிலவேளை உங்களைபோல யாருமோ தெரியவில்லை.

அதிகம் யோசிக்காதே! ரொம்பவும் வேண்டியவர்கள் என்றால் உனக்கு கண்டிப்பாய் நினைவிருந்திருக்கும் என்று ஒரு மாதிரி குரலில் சொல்லி விட்டு அவன் முன்னே நடக்க ஆரம்பிக்க
இது என்ன தியரி???? என்று எண்ணிக்கொண்டு அபியும் பின் தொடர்ந்தாள்!

No comments:

Post a Comment