Tuesday, August 14, 2012

நான் உன் காதலன் I





நேரமாகி விட்டது , நாளை மிகுதியை பேசிக்கொள்ளலாம் தூங்குங்கள் மாப்பிள்ளை! தேவாமிதமாய் உன் தந்தை வார்த்தைகளை பொழிய தேவர்களாய் நண்பர்கள் புடை சூழ நம் முதல்தனியறைக்குள்  நுழைந்தவன் தான் அரை மணி நேரமாய் உனக்காய் தனிமையில் நகம் கடித்து காத்திருகின்றேன். பழத்தட்டும் மலர்க்கொத்துக்களுமாய்  உனக்கும் எனக்குமான இந்த முதற் தனிமைக்காய் தன்னை எளிமையாய் அலங்கரித்துக்கொண்டிருக்கிறது உன் அறை.இத்தனை ஆண்டுகளாய் என்னை வதைத்தது போதாதென்று இன்னும் என்ன செய்கின்றாய் என் ஆண்மை கேள்வி கேட்கின்றது.உன் மேசையில் சட்டங்களுக்கிடையில் அதே திமிர்க்கண்களுடன்  சிரித்துக்கொண்டிருக்கின்றாய் நீ. உன் கண்களோடு என் நினைவுகள் பின்னோக்கி நகர்கின்றன.
இரண்டும் கேட்டான் வயதில் எல்லோரையும் போல் எனக்கும் இருந்தாள் ஒரு கற்பனை  காதலி.அழகாய் அடக்கமாய் குத்துவிளக்காய் மென்மையாய் எனக்காய் வாழ்பவளாய்  . அப்படி ஒருத்தியை தேடிக்கொண்டு என் வாழ்க்கை நகர்ந்த நேரம் தான் உன்னை நான் சந்தித்தேன்.ஊரெல்லாம் என் ஆண்மைக்குள் அடங்கிப்போக என்னை அடிக்கடி சீண்டி பந்து விளையாடிப்போனாய். பெண்ணாடி நீ ? காணும் போதெல்லாம் சிரிக்கும் அந்தக்கண்களும் முகமும் அப்படியே கழுத்தை திருகி குளத்தில் எறிவதாய் என்னுள் கோபம் மூளுமடி! என்னை கண்டதும் அடக்க முடியாத சிரிப்பை அடக்கி உன் தோழியுடன் நீ பேசும் பொது அப்படியே இழுத்து அறைந்து விட துடிக்குமடி என் மனம்!இரண்டு அண்ணன்களுக்கு தங்கையானதாலோ என்னவோ உனக்கு பெண்மையை விட ஆண்மையின் சாயல்களே அதிகம். உன்னை திட்டியிருக்கிறேன் ஏசியிருக்கிறேன்.சண்டை கோழிகளாய் உனக்கும் எனக்குமான இடைவெளியை இவை நீட்டியே வைத்தன.உலகெல்லாம் என் சொல்லுக்கான மதிப்பு, எனக்கான என் கவுரவம் எல்லாம் உன்னிடமிருந்து மட்டும் என்னால் பெறவே முடியவில்லை.
மூன்று நான்கு ஆண்டுகளின் பின் இருளின் தனிமையில் இப்படியொரு படுக்கையில் தூக்கம் வராத இரவில்தான் உன்னை நான் காதலித்து தொலைப்பதாய் தீர்மானித்தேன்.கல்வியும் அந்தஸ்தும் நான் கேட்காமலே என்னை வந்து சேர்ந்திருந்தாலும் இந்தக்காதல் என்னை நாய் படாப்பாடு படுத்திற்று.கொஞ்சமும் உன்னை மதிக்காமல் ஒற்றை பார்வை கூட உன்பக்கம் திருப்பாமல் திமிராய் திரிகிறளே ,தூக்கி எறியடா அவளை.எங்கே உன் திமிரும் பிடிவாதமும் கோபமும் போயிற்று.என்னை அவமானப்படுத்தாதே என் என் ஆண்மை என்னை இடித்துரைக்காத நாளே இல்லை.மனம் கேட்டால் தானே.

No comments:

Post a Comment