என்னவளே,
ஏன் மறைத்தாய் என்னிடம்
உனக்கு என்னை விட அந்த
ஆலமரத்து கிளியை அதிகம் பிடித்துப்போகிறதென்பதை!
அதிகாலையில் எழுந்த நீ
அந்த கிளியுடன் பேசும் தருணங்கள்!
அந்தச்சிரிப்பும் சிலிர்ப்பும்
என்னிடம் கூட நீ காட்டியதில்லையே
இருந்தாலும் அந்த பொல்லாக்கிளிக்கு
திமிர் சற்று அதிகம் தான்
அரண்மனையில் இல்லாத பழங்களா?
உன்னோடே இருந்தால் தான் என்ன?
அது இல்லாத தருணங்களில்
நீ தவித்து போகின்றாய் .
உணவுகூடத்திலும் அர்த்தபழசான அந்த
புத்தககூடத்திலும் முடங்கிப்போகின்றாய்.
என்னிடம் சொன்னால் தான் என்ன?
எத்தனை எதிர்ப்புகள் தாண்டி -ஏன்
உன் எதிர்ப்பையும் தாண்டியல்லவா
உன் கை பற்றியிருக்கிறேன்
இந்தக்கிளி எனக்கு எம்மாத்திரம்?
இதோ அந்தக் கிளியை பிடித்தாயிற்று
அது மறுபடியும் பறந்து விட்டால் ?
அதன் சிறகுகளை கத்திரி.
ஏன் இதய ராணியின் இதயத்தில்
இடம்பிடித்த கிளியல்லவா?
தங்க கூண்டில் அடை இதோ சிறந்த பழங்கள் .
உன்னை தேடுகிறேன்
புத்தக அறையில் ஓவியமாய் இருக்கிறாய்
கிளியைத் தருகிறேன்
மயங்கிச் சாய்கிறாய் -ஏன்?
மலர்வாய் என நினைத்தேனே?
உணவை மறந்தாய் உறக்கம் மறந்தாய்
என்னை அரக்கன் என்றாய்
கிளியின் அலறலும் உந்தன் அழுகையும்
நாராசமாய் விழ நானும் தூக்கம் தொலைக்கிறேன்.
இத்தனை பழங்கள்,அன்பான தோழி
இரண்டு நாளில் கிளி பழகி விடாதா?
ஏன் புரியவில்லை உனக்கு?
நிசப்தமாய் விட்டது
அழுது அழுது நீயும் கிளியும்
களைத்து போயிருக்க வேண்டும்.
இரண்டு நாட்கள்
உணவு கொள்ளவில்லையாம் கிளி கூடவே நீயும்.
வேலையால் தகவல் சொன்னான்.
எனக்கு புரியவில்லை
இன்னும் என்ன வேண்டும் உங்களுக்கு ?
அந்தக்கிளி செத்துப்போய் விட்டது.
பிடுங்கிப போட்ட கொடியாய்
துவண்டு கிடக்கிறாய் நீ,
எனக்கு எதுவும் புரியவில்லை.
No comments:
Post a Comment